மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

பத்ரிநாத் கோயில் - நவம்பர் 16ஆம் தேதி மூடப்படும்!

பத்ரிநாத் கோயில் - நவம்பர் 16ஆம் தேதி மூடப்படும்!

உத்தரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் உள்ள மலைவாழிடத்தில் பத்ரிநாத் கோயில் உள்ளது. வைணவர்களால் போற்றப்படும் 108 திவ்யதேசங்களில் பத்ரிநாத் கோயிலும் ஒன்று. ஏப்ரல் மாத கடைசியில் இருந்து நவம்பர் தொடக்கம் வரை என ஆண்டுக்கு ஆறு மாதங்கள் மட்டுமே இந்த கோயில் திறக்கப்பட்டிருக்கும். கோயில்கள் திறந்திருக்கும் ஆறு மாத காலத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான யாத்ரீகர்கள் இங்கு யாத்திரை மேற்கொள்வார்கள். இந்நிலையில், குளிர்காலத்தை முன்னிட்டு பத்ரிநாத் கோயில் வரும் நவம்பர் 16ஆம் தேதி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பத்ரிநாத் கோயில், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 10,170 அடி உயரத்தில் அலக்நந்தா நதிக்கரையில் அமைந்துள்ளது. குளிர்காலத்தில் ஏற்படும் பனிப்பொழிவு காரணமாக இந்தக் கோயில் முழுவதும் பனியால் மூடப்படும். எனவே, ஆண்டுதோறும் குளிர்காலத்தில் மூடப்பட்டு குளிர்காலம் முடிந்த பின்னர் மீண்டும் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்படும். கோயில் நடை சாத்தப்படும் நிகழ்ச்சி சுமார் ஐந்து நாட்களுக்கு முன்பாகவே தொடங்கி, ஒவ்வொரு சன்னிதானத்துக்கும் தனித்தனி பூஜைகள் செய்யப்பட்டு, ஒவ்வொரு நடையாக ஒவ்வொரு நாள் சாத்தப்படும். இந்நிலையில், குளிர்காலம் தொடங்கவிருப்பதால் நவம்பர் மாதம் 16ஆம் தேதி பிற்பகல் 3.45 மணிக்கு சிறப்பு வழிபாடு நடத்தியபின், கோயில் நடை சாத்தப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இங்கு, கடந்த 2013ஆம் ஆண்டு வரலாறு காணாத அளவில் மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நூற்றுக்கணக்கான யாத்ரீகர்கள் பலியாயினர். அதன்பிறகு சாலைகள் சீரமைக்கப்பட்டு மீண்டும் கடந்த ஏப்ரல் மாதம் யாத்திரை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon