மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

பாடப்புத்தகத்தில் புதிய சர்ச்சை!

பாடப்புத்தகத்தில் புதிய சர்ச்சை!

கேரளாவில் பீஸ் சர்வதேச பள்ளிகள் (Peace Public school) பதிமூன்று இடங்களில் செயல்படுகின்றன. இஸ்லாமிய மத போதகர் எம்.எம்.அக்பர் தலைமையின் கீழ் இந்த பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளில் இல்லாத வசதிகளே இல்லை என்னும் அளவுக்கு சர்வதேச தரம் வாய்ந்த அளவில் இந்த பள்ளிகள் செயல்பட்டாலும் இஸ்லாமிய கருத்துகளை மாணவர்களிடம் பரப்புவதற்கு நிர்வாகிகள் முக்கியத்துவம் அளித்து வந்துள்ளார்கள். இந்த பள்ளிகளில் அருகாமையிலே ஒரு மசூதியும் கட்டி தொழுகை நேரங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொழுகவும் செய்கிறார்கள். இந்த பள்ளியில் வேலை பார்க்கும் முக்கால்வாசி ஆசிரியர்களும் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எர்ணாகுளத்தில் செயல்படும் பீஸ் பப்ளிக் பள்ளியின் இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இஸ்லாம் குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி இடம் பெற்றுள்ளது என மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக பீஸ் பள்ளியின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தியிருக்கிறார்கள் போலீஸார். பீஸ் பள்ளியின் செயல்பாடுகள் முஸ்லிம் மதத்தை பரப்பும்படி இருந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இன்னும் அந்த பள்ளியின் பல பாட புத்தகங்களை சோதனைக்குட்படுத்தவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர். இவர்கள் சேர்த்துள்ள சில புத்தகங்களின் பாடத்திட்டங்கள் ஸ்டேட் போர்டு அல்லது சென்டிரல் போர்டு கல்வி திட்டத்தால் அங்கீகரிக்கப்படாததும் தெரியவந்துள்ளது.

அந்த புத்தகத்தில் கேட்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய கேள்வியும், அதற்கு அளிக்கப்பட்ட பதில்களும் பின் வருமாறு:

‘ஒரு வேளை உங்கள் நண்பர் ஆடம்/சுஷானே முஸ்லிம் மதத்துக்கு மாற விரும்புகிறார்கள். அவர்களுக்கு நீங்கள் என்ன அறிவுரை கூறுவீர்கள்.

கீழே காண்பவற்றில் ஒன்றை தேர்ந்தெடு.

a. அவன்/அவள் பெயர்களை அஹமத்/சாரா என்று உடனடியாக மாற்ற வேண்டும்.

b. அவன்/அவள் செயின் அணிந்திருந்தால் அதை கழற்ற வேண்டும்.

c. ஷஹதத் (இஸ்லாமிய இறை நம்பிக்கையின் விசுவாச அறிக்கை) கற்க வேண்டும்.

d. பெற்றோர்கள் முஸ்லிம் இல்லையென்றால் வீட்டை விட்டு வெளியேற வேண்டும்.

e. ஹலால் சிக்கன் சாப்பிட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு மற்ற மதத்தினரையும் இஸ்லாம் மதத்துக்கு மாற்றும்படி கேள்வி இருந்துள்ளதும், அதற்கு அளிக்கப்பட்ட சில பதில்களும் மத ஒற்றுமையை குலைக்கும்படி இருந்ததும் சர்ச்சைக்கு காரணமாக இருந்துள்ளது. இந்தக் காரணத்தால் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon