மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

இந்தியாவில் அதிகரிக்கும் மனநோய் – அதிரடி சர்வே!

இந்தியாவில் அதிகரிக்கும் மனநோய் – அதிரடி சர்வே!

இன்றைய நவீன சூழலில் உடல்நிலையையும், மன நிலையையும் சரியாக பராமரிப்பது சவாலான விஷயமாக மாறி வருகிறது. மனநலம் பாதிக்கப்படுபவர்கள் அதிமாகிவரும் சூழ்நிலையில் தேசிய மனநலக் கழகம் மற்றும் நரம்பியல்துறை சார்பில் நாடு முழுவதும் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இதில் சுமார் 13.7 சதவிகிதம் அதாவது 15 கோடி இந்தியர்கள் பல்வேறு விதமான மனநல பாதிப்புகளால் அவதிப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இவர்களில் 10.6 சதவிகிதம் பேர் உடனடியாக சிகிச்சை தேவைப்படும் நிலையில் உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் பிரச்னைகள் காரணமாக, அது தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்கும் பொறுப்பு 2014ஆம் ஆண்டு தேசிய மனநலக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஆய்வின் முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 12 மாநிலங்களில் உள்ள 34,802 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் மது, புகை பயன்படுத்துவோர், பிரச்னைகள், மனஅழுத்தம், பயம் உள்ளிட்ட பல காரணங்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. கிராமப்புறங்களை விட நகர்புறத்தில் வசிக்கும் மக்களே மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பொருளாதார நெருக்கடி, வேகமான வாழ்க்கை முறை போன்ற பல்வேறு காரணங்களால் மனநலம் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இவர்களில் பொருளாதார காரணங்களால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் மனநலம் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கையே அதிகம். மனநலம் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவிகிதம் பேர், ஓராண்டுக்கு மேல் ஆகியும் எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமல் உள்ளனர். 40 முதல் 49 வயதுடைய பெண்களே மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 18 வயதுக்குக் கீழுள்ள 22.4 சதவிகிதம் பேர் போதை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அதிகம் பயன்படுத்தியதால் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த காரணங்களையும் ஆராய்கையில் 13.9 சதவிகித ஆண்களும், 7.5 சதவிகிதப் பெண்களும் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இள வயதினரிடையே 13 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களில் 7.3 சதவிகிதம் பேர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு தொடர்பான அறிக்கை மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon