மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

சிவகார்த்திகேயனின் அழுகை நாடகம்? - பின்னணியுடன் முழுக்கதை!

சிவகார்த்திகேயனின் அழுகை நாடகம்? - பின்னணியுடன் முழுக்கதை!

சிவகார்த்திகேயன், ‘ரெமோ’ சக்சஸ் மீட் மேடையில் அழுததை சமூக வலைதளங்களில் கலாய்ப்பதைப் பார்க்கும்போது அதில் காணப்படும் ஹியூமர் சென்ஸைப் படிக்கவே அலாதியாக இருக்கிறது. இவற்றை சிவகார்த்திகேயன் பார்த்தாலும் நன்றாக வாய்விட்டு சிரிக்கக்கூடும். ஆனால், முட்டையிட்டது அவராயிற்றே… கொஞ்சம் வலியும் இருக்கக்கூடும். யார் இந்த சிவகார்த்திகேயன்? என்ற கேள்விக்கு விடை தமிழக மக்கள் அறிந்தது. யார் இந்த R.D.ராஜா? எஸ்கேப் ஆர்ட்டிஸ்டின் மதன் தொல்லைக் கொடுப்பதாக, விகடனுக்கு அளித்த பேட்டியில் திருப்பூர் சுப்பிரமணியத்திடம் சிவகார்த்திகேயன் சொன்னதாக, அவர் ஏன் குறிப்பிட வேண்டும் என்ற கேள்விகளுக்கான விடை, உங்களது அடுத்த சில நிமிடங்களை செலவிடுவதில் கிடைத்துவிடும்.

‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ திரைப்படம் 2013இல் கமர்ஷியல் ஹிட் சிவகார்த்திகேயனுக்கு மட்டுமல்ல, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனுக்கும் கூடத்தான். (வேந்தர் மூவிஸ் மதன் சீனிலேயே இல்லாததால், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனை, மதன் என்றே குறிப்பிடுவோம்) ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படத்தில் வசூல் ரீதியாகவும், ‘அழகர் சாமியின் குதிரை’ திரைப்படத்தில் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றிருந்தாலும் மதனுக்கு பெரிய வெற்றியாகத் தெரிந்தது ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ தான். அப்போது மதனின் வாழ்வில் நடைபெற்ற ஒரு சம்பவம் சிவகார்த்திகேயனை, மூன்று படங்களில் அவரை கமிட் செய்ய வைத்ததாக ஸ்ரீதேவி ஸ்ரீதருக்கு அளித்த பேட்டியில் மதனே தெரிவித்திருக்கிறார். மதனுடைய நண்பரின் மகன் தனது பெயரை சிவகார்த்திகேயன் என்று மாற்றிக் கொள்ளவேண்டும் என அடம்பிடிப்பதாக சொன்னபோது இந்த முடிவுக்கு வந்திருக்கிறார் மதன். அதன்பிறகு மதனுக்காக மூன்று படங்களில் நடித்துத் தர கையெழுத்திட்டார் சிவகார்த்திகேயன். இங்கு குளோஸ் செய்து தனுஷ் வீட்டில் ஓப்பன் செய்வோம்.

தனுஷ் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில், கொஞ்சமாக கமர்ஷியல் பொடி தூவப்பட்ட ‘எதிர்நீச்சல்’ திரைப்படம் உருவானது. வேந்தர் மூவீஸ் மதன் இப்படத்தை வெளியிட்டார். ரூபாய் 5 கோடி பட்ஜெட்டில் உருவான திரைப்படம் இது. படத்தின் புரமோஷனில் கூட அனிருத்தை மெரினா பீச்சுக்கு அழைத்துச் சென்று மியூசிக் கம்போஸிங் செய்யச் சொல்லியிருந்ததைக் காட்டியிருப்பார்கள். அந்த அளவுக்கு இழுத்துப்பிடித்து எடுக்கப்பட்ட திரைப்படத்தின் வசூல் ரூபாய் 50 கோடி. அதாவது செலவு செய்த பணத்தின் 10 மடங்கு. இப்போது மீண்டும் கட் செய்து மதனின் அலுவலகத்துக்கு வருவோம்.

மதனுக்கு கையெழுத்திட்டுக் கொடுத்த மூன்று படங்களில் முதல் படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. திட்டமிட்டபடி ரூபாய் ஏழு கோடியில் படமாக்கப்பட்டு, ரூபாய் 70 கோடி வசூலைப் பெற்றுத் தந்தது. மீண்டும் அதே பத்து மடங்கு. படத்தின் பட்ஜெட்டிலிருந்து சிவகார்த்திகேயனின் தோராயமான சம்பளத்தைக் கணக்கிட்டிருக்கலாம். அடுத்து ‘மான் கராத்தே’. இங்குதான் R.D.ராஜா அதிகாரப்பூர்வமாக உள்ளே வருகிறார். சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் பணியாற்றியபோது அங்கு எக்ஸிகியூடிவ் புரொடியூசராக இருந்தவர் சிவகார்த்திகேயனின் நண்பர் மற்றும் மேனேஜராகவும் பணியாற்றினார். பிறகு எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனுடன் சிவகார்த்திகேயன் இணைந்ததும் ஒரு நண்பராக அந்த நிறுவனத்திலும் பணியாற்றியவர். Fox Star Studiosலும் கோ-புரொடியூசராகப் பணியாற்றியவர் இவர். ‘மான் கராத்தே’ திரைப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயனின் மதிப்பு எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறதென்று தெரியப்படுத்தியவர் R.D.ராஜாதான்.

2014இல் சென்னையில் வெளியான முன்னணி ஹீரோக்களான விஜய், அஜித்தின் ‘ஜில்லா’, ‘வீரம்’ படங்களை விட அதிக வசூலை முதல் நாளில் வசூலித்தது ‘மான் கராத்தே’ திரைப்படம். தன்னை ஒரு சீரியஸ் நடிகனாகவும் ஏற்றுக்கொள்கிறார்களா? என்று பார்ப்பதற்காக சிவகார்த்திகேயன் வைத்த அகலக்கால்தான் ‘காக்கிச்சட்டை’. ஆனால், இத்தனை நாட்கள் ஓடிய ஓட்டம் பலன் தந்தது. ‘காக்கிச்சட்டை’யில் கிடைத்த கமர்ஷியல் வெற்றி இனி எந்த உச்சத்தையும் தொடலாம் என்ற நிலை வந்தபோது இத்தனை வருடங்களாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னுடன் பயணித்த R.D.ராஜாவை தயாரிப்பாளராக மாற்றி அழகுபார்த்தார் சிவகார்த்திகேயன். திருப்பதி பிரதர்ஸுக்கு ஒப்புக்கொண்ட ‘ரஜினி முருகன்’ படத்துக்கு மட்டும் கால்ஷீட்டை வழங்கிவிட்டு, R.D.ராஜாவுக்கு இரண்டு படங்கள் செய்து தருவதாக ஒப்பந்தமிட்டார். அவ்வளவுதான், தொடங்கியது பிரச்னை.

2015இன் இறுதியில் சென்னையில் ஏற்பட்ட செயற்கை வெள்ளத்தால் ‘ரஜினி முருகன்’ திரைப்படம் அடைந்த துன்பம் மக்களுக்குத் தெரியாமல் போய்விட்டது. கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் போராடி ‘ரஜினி முருகன்’ திரைப்படத்தைப் பொங்கலுக்குக் கொண்டுவந்து ஹிட் கொடுத்தனர் திருப்பதி பிரதர்ஸ். அதன்பிறகு செயல்கள் துரிதமாக நடைபெற்றன. ‘தனி ஒருவன்’ ஹிட்டுக்குப் பிறகு மோகன்ராஜா திரைப்படம் பேசப்பட்டது. ஆனால், எவ்வித சாய்ஸும் கொடுக்காமல் அந்த புராஜெக்ட் நேராக R.D.ராஜாவின் கையில் வைக்கப்பட்டது. இப்போது ‘ரெமோ’ திரைப்படத்தை மினிமம் கியாரண்டி முறையில் திருப்பூர் சுப்பிரமணியம் உட்பட, தமிழக விநியோகிஸ்தர்கள் பலரிடமும் நேரிலேயே சென்று ‘உங்கள் ராசியான கைகளினால் படத்தை ரிலீஸ் செய்யுங்கள்’ என்று கூறி விற்றார் R.D.ராஜா. இத்தனை வருட சினிமா அனுபவம் எந்த தியேட்டரில், எந்த மாதிரி மக்கள் எப்போது வருவார்கள் என பக்காவாக பிளானிங் செய்து விற்கப்பட்ட உரிமை ஆறு நாட்களில் ரூபாய் 40 கோடியை வசூலாகக் கொண்டு வந்து கொடுத்திருக்கிறது.

படத்தை வாங்கியவர்களுக்கும் கணிசமாக ரூபாய் 10 கோடி லாபம் கிடைத்திருக்கும் என்று திருப்பூர் சுப்பிரமணியம் கூறியிருக்கிறார். தேடிவந்து பணத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கும் R.D.ராஜா அடுத்தப் படம் தயாரித்ததும், நான் - நீ என போட்டி போட்டுக்கொண்டு வந்து நிற்பார்கள் விநியோகிஸ்தர்கள். அதிலும் அது சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்க மோகன்ராஜா இயக்கும் திரைப்படம். சொல்லவா வேண்டும்? தனுஷ் வீட்டிலிருந்து கிளம்பி வந்த நாம் திரும்ப அங்கு செல்லவே இல்லையே. இப்போது அங்கே சென்று பார்த்தால், தனுஷும், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனும் ‘கொடி’ திரைப்படத்தின் ரிலீஸ் பற்றிய விவாதத்தில் இருப்பார்கள்.

அவர்களை நாம் தொந்தரவு செய்ய வேண்டாம். ஆனால், இதில் உண்மையாகவே அதிக ஹியூமர் சென்ஸ் உள்ளவர் சிம்புதான். ‘கவலைப் படாதீர்கள் சிவகார்த்திகேயன். உங்களுக்கு மட்டுமல்ல. இதையெல்லாம் யார் செய்கிறார்கள் என்று எனக்கும் தெரியும்’ என்று ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்திருக்கிறார். இது அப்படியே ஆல் டைம் ஃபேவரிட் காமெடியான ‘இதுல எப்படிண்ணே லைட் எரியும்’ காமெடியை நினைவுகூர்கிறது. இந்தப் பிரச்னையில் மதன் மீது தப்பில்லை. அதேசமயம் சிவகார்த்திகேயன் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. பணத்தைக் கொடுத்தேன், நடித்துக்கொடு என்று சொல்வதில் இருக்கும் அதே உரிமை, கொடுத்தப் பணத்தை வாங்கிக்கொள் என்று சொல்வதிலும் இருக்கிறது. உயிரற்ற தங்கம்கூட அந்தந்த நாளில் இருக்கும் விலைமதிப்பைப் பொறுத்தே விற்கப்படுகிறது.

- சிவா

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon