மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஏப் 2020

BMW Vision Next100: அடுத்த நூற்றாண்டின் சிறந்த பைக்!

BMW Vision Next100: அடுத்த நூற்றாண்டின் சிறந்த பைக்!

பைக்குகளின் ஹெட் லைட்டையோ, சீட் ஸ்டைலையோ மாற்றிவிட்டு அடுத்த தலைமுறை பைக் இதுதான் என நடிகர் - நடிகைகளை வைத்து விளம்பரம் செய்யும் நிறுவனங்களுக்கிடையே, BMW வழக்கம் போலவே தனது தனித்தன்மையை லாஸ் ஏஞ்சல்ஸில் வெளிப்படுத்தியிருக்கிறது. போக்குவரத்துத்துறையில் தனது நூறாவது வருடத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் BMW, நூற்றாண்டு சிறப்பு வெளீடாக அடுத்த நூறு ஆண்டுகளுக்கு பேசப்படும் Vision Next100 பைக்கை அறிமுகப்படுத்தியிருக்கிறது. மேலே இருக்கும் போட்டோவிலேயே இது எந்த மாதிரியான பைக் என்பதை நீங்கள் தெரிந்து கொண்டிருக்கலாம். இப்போது அதிலிருக்கும் வசதிகளைப் பார்ப்போம்.

பைக்கை ஓட்டிக்கொண்டு செல்பவருக்கும், பைக்குக்கும் இருக்கும் உடல் ரீதியான இணைப்பு இந்த பைக்கில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. முன் சக்கரத்திலிருந்து, பின் சக்கரம் வரை ஒரே மாதிரியான கார்பன் ஃபைபரால் டிசைன் செய்யப்பட்டிருக்கும் இந்த பைக்கில், எந்த இடத்திலும் இணைப்புகளோ, பிளவுகளோ இல்லை. இதுவரை பைக் ரைடர்ஸிடம் இருக்கும் ஸ்டியரிங் அனுபவத்தை இந்த முறை முற்றிலும் மாற்றும்.

அடுத்து ஸ்டைல்… இந்த பைக்கைப் பார்த்தாலே தெரியும், ஸ்டியரிங்கைப் போலவே இருபுறத்திலும் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் எஞ்சின் ஸ்டைல் புதிதல்ல. BMWவின் பழைய மாடல்தான். ஆனால், புதிய டெக்னாலஜியுடன் வடிவமைத்திருக்கிறார்கள். பைக் ஒரு இடத்தில் நிலையாக நிற்கும்போது ஏரோடைனமிக்ஸ் மூலம் பைக் கீழே விழுந்துவிடாமல் பேலன்ஸ் செய்வதற்காக வெளியே நீட்டிக்காணப்படும் எஞ்சின், பைக்கின் வேகம் அதிகரிக்கும்போது உள்ளே சுருங்கிக்கொள்ளும்.

BMW-வின் பழைய மாடலான R32-வில் காணப்படும் முக்கோண வடிவ ஃபிரேமில் நீல நிற BMW லோகோ இருக்கும். இந்த லோகோ இரவு நேரங்களில் நீல நிறத்தில் ஜொலிக்கும் வண்ணம் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் டிரைவர் அசிஸ்டெண்ட் மூலமாக, அதிநவீன ரைடிங் அனுபவத்தைப் பெறமுடியும். அத்துடன் எந்த நேரத்திலும் டிரைவரை பாதுகாக்கும் வண்ணம் பைக்கின் வேகம், வழி, சாய்வு ஆகியவற்றைக் கணித்துக்கொண்டே வரும். பைக் நிற்கும்போது ஜிரோஸ்கோப் மூலமாக சமநிலையில் பைக்கை நிறுத்தி வைக்கும்.

இப்படி உயிரைப் பாதுகாப்பதையே முக்கியக் குறிக்கோளாக வைத்திருக்கும் டிரைவர் அசிஸ்டெண்ட் இருக்கும்போது ஹெல்மெட் எதற்கு? வேண்டவே வேண்டாம். கடல் அலைகளில் நீந்தும் மீன்குட்டிகளைப் போல, இயற்கை அளித்த காற்றுக்கடலில் நம் தலைமுடியையும் நீந்த வைத்து சிறந்த ரைடிங் அனுபவத்தை இந்த பைக் மூலம் பெறலாம். இதற்காக வழங்கப்பட்டிருக்கும் கண்ணாடியை அணிந்துகொள்வதன் மூலம் வண்டியின் தகவல்களை அதிலேயே பார்த்துக்கொள்ளலாம்.

கண்ணாடி மட்டுமா? இந்த பைக் ஓட்டும்போது தேவையான உடையையும் BMW கொடுக்கிறது. பைக் ஓட்டும் ரைடர் உடலுக்குத் தேவையான வெப்பம் அல்லது குளிரை உருவாக்கித் தருவது, ரைடரின் உடலில் ஏற்படும் அதிர்வின் மூலம் ஆபத்தை உணர்வது அல்லது சிறு அதிர்வை வெளிப்படுத்தி ஆபத்தை உணரவைப்பதென BMW Vision Next100-இல் நிறைய இருக்கிறது.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon