மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

சிறப்புக் கட்டுரை: ஓ.பன்னீர்செல்வத்தின் வளர்ச்சி வரலாறு!

சிறப்புக் கட்டுரை: ஓ.பன்னீர்செல்வத்தின் வளர்ச்சி வரலாறு!

எளிமையான வரிகளில் சொன்னால் இன்று முதலமைச்சருக்கு இணையான அதிகாரத்தோடு பல துறைகளைச் சுமந்து தமிழகமே எதிர்நோக்கும் ஓ.பன்னீர்செல்வம் ஒரு டீ மாஸ்டர்!

பெரியகுளம் பிரதானச் சாலையில் இருக்கிறது பி.வி.கேண்டீன். ((பன்னீர்செல்வம் – விஜயலெட்சுமியின் சுருக்கம்). பன்னீர்செல்வத்தைத் தெரிந்தவர்கள் அதை பி.வி.கேண்டீன் என்றும், அவரது தம்பி ராஜாவுக்கு வேண்டிவர்கள் அதை ‘ரோஸி கேண்டீன்’ என்றும்தான் அழைப்பார்கள். அப்படி ஒரு வரலாறு அதற்கு இருக்கிறது.1970-களில் ஒரு சின்ன தேநீர்கடையாக தொடங்கப்பட்ட பி.வி.கேண்டீனுக்கு 1990-கள் வரை டீ மாஸ்டர் ஓ.பன்னீசெல்வம்தான். பன்னீரின் தம்பி ராஜாவுக்கு ரோஸி என்றொரு குழந்தை பிறந்து 10 வயதில் அது இறந்தபோது தன் தம்பி குழந்தையின் நினைவாக அதை ரோஸி கேண்டீன் என்று மாற்றினார்.

(பி.வி.கேண்டீன்)

தேவர் சாதிகளில் ஒன்றாக அடையாளம் காணப்படுகின்ற மறவர் சாதியில் பிறந்த ஓ.பி.எஸ்ஸின் இயற்பெயர் பேச்சிமுத்து. ஓ.பி.எஸ்ஸின் பெரியப்பா பெயரும் பேச்சிமுத்து என்பதால் குழந்தை பேச்சிமுத்து, பன்னீர்செல்வம் ஆனார். ஓ.பி.எஸ்ஸின் தந்தை ஒட்டக்கார தேவர். தாயார் பழனியம்மா. விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த ஒட்டக்கார தேவர் பிழைக்க வழி தேடி பசுமை நிலம் நோக்கி வந்த இடமே தேனி மாவட்டத்தின் பெரியகுளம். ஓட்டக்கார தேவர் ஒரு சிறந்த விவசாயியாகவும், வட்டிக்குக் கடனளிப்பவராகவும் உருவானார். தந்தையின் மரணத்துக்கு பிறகு 1980-ல் சொத்துகள் பாகப்பிரிவினை செய்யப்பட்டது. பி.வி. கேண்டீன், ஓ.பி.எஸ்ஸின் தம்பி ராஜாவுக்குச் சென்று சேர்ந்தது. தம்பிக்குக் கேண்டீனை மனமுவந்து அளித்துவிட்டு அதிமுக-வில் ஐக்கியமானார். எம்.ஜி.ஆரின் தீவிர விசிறியாக இருந்தார் ஓ.பி.எஸ்.

தந்தையைப் போல் கருணை உள்ளம் படைத்தவராக ஓ.பி.எஸ். கருதப்படுகிறார். சற்றும் அதிர்ந்து பேசாதவர் என்ற பெயர் அவருக்குண்டு. எனினும் தேனி மாவட்ட மறவர்கள் ஓ.பி.எஸ்ஸை காண்கிறார்கள். இளையவர்கள் சித்தப்பா என்றும் பெரியப்பா என்றும் உரிமையோடு அழைக்கிறார்கள். மறவர்கள் அனைவரும் ஒரே குடும்பம் என்ற சாதிய கண்ணோட்டத்திலிருந்து இந்த உறவுமுறை பாராட்டல் வடிவம் பெறுகிறது.

ஜெயலலிதாவின் காலில் நயமாக விழுவதை எப்படி என்று ஒருவர் ஓ.பி.எஸ்ஸிடம்தான் கற்க வேண்டும். அந்தளவுக்குத் தூய பக்தி உணர்வுடன் நடந்து கொள்பவர் பன்னீர். ஹெலிகாப்டரை அண்ணாந்து கும்பிடுவதிலும், காரில் ஏறிய ஜெயலலிதாவின் வண்டி சக்கரத்தில் விழுந்து கும்பிடுவதிலும், பொதுக்கூட்டங்களில் வளைந்து நின்று சேதியை கேட்பதிலும் ஓ.பி.எஸ். நடந்து கொள்வது ஜெயலலிதாவை நெருங்க நினைக்கும் மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டல். ஓ.பி.எஸ். ஜெயாவின் காலங்காலமான ஒரு விசுவாசி அல்ல. 1989-ல் அதிமுக உடைந்தபோது ஓ.பி.எஸ்., ஜானகி அணியிலேதான் இருந்தார். ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு ஓடியாடி உழைத்தவர்தான் பன்னீர். பிறகு சீக்கிரமே அதிமுக என்றால் எம்.ஜி.ஆருக்குப் பிறகு அது ஜெயலலிதாதான் என்பதை உணர்ந்து கொண்டார்.

ஓ.பி.எஸ். அன்பானவர், அமைதியானவர் என்று கூறப்பட்டாலும், ஓ.பி.எஸ். தனது உயரத்தை அறிந்தவராகவே தென்படுகிறார். இப்படியான பின்புலத்தோடு வளர்ந்து வந்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மூன்றாம் முறையாக அதிகாரத்துக்கு உயர்ந்திருக்கிறார் - இம்முறை, அவருடைய தலைவரும், முதலமைச்சருமான ஜெயலலிதா எதிர்பார்த்ததை விட அதிக காலம் உடல்நலிவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் காரணத்தால்!

‘அம்மா’, நீதிமன்ற ஆணைகள் காரணமாக பதவியிழக்க நேரிட்டு, சிறைக்கு செல்ல வேண்டியிருந்த இரண்டு தருணங்களின்போதும் ‘இடைக்கால முதலமைச்சராக’ பதவியேற்றது போல அல்லாமல், இம்முறை, ஜெயலலிதாவின் துறைகளின் பொறுப்பை மட்டுமே ஏற்கிறார் ஓ.பி.எஸ். இவை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உட்படும் உள்துறை மற்றும் மத்தியச் சேவை துறைகள். ஆளுநர் வித்யாசாகர் ராவ் வெளியிட்ட ராஜ்பவனின் ஊடக வெளியீட்டின்படி, ஜெயலலிதாவின் உடல்நலம் அவருடைய முதலமைச்சர் கடமைகளை வீட்டிலிருந்தோ, மருத்துவமனையிலிருந்தோ செய்ய அனுமதிக்கும் வரை, பன்னீர்செல்வம் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு தலைமை தாங்குவார் என்று தெரிவிக்கிறது.

(மகன் ரவீந்திரன்)

இவை அனைத்தையும் விட முக்கியமாக, நம் அரசியலமைப்பு கட்டாயப்படுத்தும் அமைச்சரவை வடிவமைப்பில் அரசாட்சி நடத்துவதற்காக, ‘நடப்பு முதலமைச்சராகவோ, துணை முதல்வராகவோ பன்னீர் நியமிக்கப்படலாம் என ஊடகங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்தன. இடைக்கால முதலமைச்சர், ‘நடப்பு’ முதலமைச்சர், துணை முதலமைச்சர் என அழைக்கப்படும் எந்த பதவிக்குமே அரசியலமைப்பில் அங்கீகாரம் இல்லை என்பது வேறு விஷயம். முதலமைச்சர் இருக்கிறார் அல்லது முதலமைச்சர் இல்லை, அவ்வளவுதான். இதன் காரணமாகவே, ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சராக இருப்பது தொடர்கிறது, தொடரும் என்பதை ராஜ்பவனின் வெளியீடு மிகத் தெளிவாக விவரிக்கிறது.

தொடர்ச்சியான ஊடகச் செயல்பாடுகள் யூகங்களை அள்ளித்தெளிக்கும் இக்காலத்தில், அனைத்து வதந்திகளுக்கும், யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க ராஜ்பவனின் ஊடக வெளியீடு உதவியிருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களாக, மூன்று வருட சிறைத் தண்டனையோடு சைபர் கிரைம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருந்தபோதிலும், ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவுவது மட்டும் நின்றபாடில்லை. ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து எவ்வளவு தெளிவாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கைகள் வெளியிடுகிறதோ அத்தனை வித்தியாசமாக வதந்திகள் பரவுகின்றன.

இப்படி பொதுவெளியிலும், தனியரங்குகளிலும் பரவி வந்த வதந்திகள், ஆட்சியில் இருக்கும் அதிமுக தொண்டர்களை விரக்தியடையச் செய்தது. இதன் விளைவாக, கீழ் நிலைகளில் உள்ள அரசு எந்திரங்களின் வேலைகள் தானாகவே நின்று போக தொடங்கியது. ஆளுநர் சொல்லி இயங்கக் கூடிய நிலையில்தான் அமைச்சரவை இருக்கிறது என்பதை இந்த அறிக்கை உறுதி செய்கிறது. மேலும், இம்மாதிரியான சூழல்களில், மத்திய அரசின் கண்ணாக, காதாக இயங்கும் ஆளுநர், அவசர அவசரமாக முடிவெடுத்திருக்கவில்லை என்பது தெரிகிறது. அரசியல் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக தலைமையிலான கூட்டணியின் மிகச் சிறப்பான காய்நகர்த்தல். அடிநிலை அதிமுக தொண்டர்களுக்கு எதிராக, வேறொரு சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பன போன்ற, தவிர்க்கக்கூடிய வதந்திகள் ராஜ்பவனின் அறிக்கை வெளியிடப்படக் காரணம். ராஜ்பவனால் இன்னும் பொறுமை காத்திருக்க முடியும்.

செப்டம்பர் 22ஆம் தேதி, தனக்கு உடல்நிலை மோசமாகிக் கொண்டிருப்பது காரணமாக, போயஸ் கார்டன் வீட்டில், ஜெயலலிதா அலுவல் ரீதியான கூட்டம் ஒன்றை நடத்தினார் என்பது தெரிந்ததே. எனவே, அந்நேரத்தில் மூத்த அதிகாரிகள் அனைவரும் அவ்விடத்தில் இருந்தார்கள் என்பதற்கு சாட்சி இருக்கிறது. ஆனால், அங்கு என்ன நடந்தது என்பதெல்லாம் ஊடகத்திலோ, சமூக வலைதள யூகங்களிலோ இடம்பெற வாய்ப்பில்லை. ஒருவழியில், இரண்டுமுறை முதலமைச்சராக இருந்த அனுபவத்தினால், ஓ.பி.எஸ். தற்போது அமைச்சரவைக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்க நியமிக்கப்படவில்லை எனலாம். இரண்டு முறை முதலமைச்சராக இருந்த அனுபவம், அரசு அளவில் நிர்வாக எந்திரங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பது குறித்து பன்னீர்செல்வத்துக்கு அதிக அறிவு கொடுத்திருக்கலாம் என்றாலுமே, 2001 முதல் அரசின் வணிக விதிகள் மற்றும் முன்னுரிமை வாரண்ட்படி, ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இரண்டாவது உயர்ந்த பதவியில் இருந்தவர் அமைச்சர் பன்னீர்செல்வம்தான். ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் நிலையில், அந்த இடத்தை நிரப்ப, மிக இயல்பாக தொண்டர்கள் தேர்வு செய்வது ஓ.பி.எஸ்ஸைத்தான். அவர் இரண்டு முறை இடைக்கால முதலமைச்சராக இருந்தது இதற்கு காரணம் இல்லை. தொண்டர்களின் கண்களில், ஓ.பி.எஸ். ஜெயலலிதாவால் மிகச் சிறப்பான தலைவராக அறியப்பட்டவர், அங்கீகரிக்கப்பட்டவர்; அவருடைய ஒவ்வொரு சொல்லும், நடவடிக்கையும் ஜெயலலிதாவால் வலியுறுத்தப்பட்டது.

- மின்னம்பலம் குழு

OPS, first among equals for third time in Amma's raj- N Sathiya Moorthy எழுதிய கட்டுரை மற்றும் http://scroll.in/article/818806/chinas-marriage-rate-is-plummeting-and-its-because-of-gender-inequality கட்டுரைகளின் உதவியுடன் எழுதப்பட்ட கட்டுரை.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon