மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

சசிகலா புஷ்பாவைத் தாக்கிய ‘நமது எம்.ஜி.ஆர்’!

சசிகலா புஷ்பாவைத் தாக்கிய ‘நமது எம்.ஜி.ஆர்’!

குறுகிய காலத்தில் சசிகலா புஷ்பாவைப் போல உயரம் தொட்டவர்களும் இல்லை; ஒரே நாளில் தூக்கி வீசப்பட்டவர்களும் இல்லை. அதிரடிக்கு அதிரடி என்றால் அது சசிகலா புஷ்பாதான். விமான நிலையத்தில் வைத்து திமுக எம்.பி. திருச்சி சிவாவின் கன்னத்தில் அறைந்து அதிமுக கட்சித் தலைமையில் நம்பிக்கையை பெறலாம் என நினைத்த சசிகலாவை அழைத்து டோஸ் விட்டது போயஸ் கார்டன். “என்னை ராஜினாமா செய்யச் சொல்லி மிரட்டுகிறார்கள். கட்சித்தலைவர் என்னை அறைந்து விட்டார்” என்று கதறிய புஷ்பா மீது அவருடைய வீட்டுப்பணிப் பெண்கள் பானுமதி, ஜான்சிராணி கொடுத்த பாலியல் புகார்கள் அப்படியே இருக்க... அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட முதல்வரை கவனித்துக் கொள்ளும் சசிகலா நடராஜனைத் தாக்கி அடுத்தடுத்து பேட்டிகள் கொடுத்தார். போதாக்குறைக்குப் போலி கையெழுத்து என்று எச்சரிக்கையும் கொடுத்தார். இந்நிலையில், அதிமுக-வின் அதிகாரப்பூர்வ ஏடான ‘நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழில் “சாக்கடை புஷ்பாவின் ‘பூக்கடை’ சமாச்சாரங்கள்!” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையும் அல்லாமல் கவிதையும் அல்லாமல் வெளியாகியுள்ளது. ‘எச்சையே’ என்று பச்சையாக தொடங்கும் அந்த கருத்துகள் இதுதான்.

“எச்சையே! உனக்கு பச்சை மையில் கையெழுத்திடும் பாக்கியத்தை பிச்சையிட்டது யார்? ஆனால், பகையாளியோடு உறவாடி, கூர்தீட்டிய மரத்துக்கு குந்தகம் செய்கிறது நன்றிகெட்ட உன் நடத்தை. போலி கையெழுத்து, போலி படிப்பு, போலி புருஷன் என்பதுதான் பொழுதெல்லாம் உன் கூலிப் பிழைப்பு என்பதால் கள்ளமில்லா ஓர் நட்பை களங்கம் செய்கிறாய். ‘செந்நெல் மணி அரிசி, சீரகச் சம்பாவை உண்ணத் தருவேன், உயிர் தருவேன். ஆனால் ஒரு நெல் மணியைக்கூட பரங்கியனுக்கு வரியாக கொடுக்க மாட்டேன்’ என்றே போராடி மடிந்த பூலித்தேவன் போல், ஆயிரமாயிரம் இன்னல்களை அரக்கர்கள் ஏவியபோதும் இறையடி நிழல் அகலா உறுதியில் இறையடியார் உறவாகிய பக்தியில் தம்மையே ஒப்படைத்துக் கொண்ட தன்னலம் துறந்த வாழ்வை இழிவாக பழிக்கிறாய்... உன்னைப் போன்ற இழிபிறவி என்றே கருதிக்கொண்டு இட்டுக்கட்டி விளிக்கிறாய்! கருணா வகுத்துக் கொடுத்த திட்டப்படி கடிதாசிகள் எழுதி பொம்பள எட்டப்பன் நீ என்பதை உலகுக்கே ஊளையிட்டு உணர்த்துகிறாய். மொத்தத்தில் சாக்கடை புஷ்பாவின் பழைய ‘பூக்கடை சமாச்சாரங்’களை தோண்டி எடுக்க நீயாக முன்வந்து தூண்டுகிறாய். கழகத்தால் உயர்ந்துவிட்டு, கழகத்துக்கே கடுந்துரோகம் இழைத்துப் போனவர்கள் வெகுநாட்கள் பொதுவாழ்வில் நீடித்ததில்லை! அவர்கள் விலாசமற்று வீழ்ந்ததே வரலாறு என்பதை விரைவில் நீயும் காண்பாய். அதுவரை ஆடும் வரை ஆடு! அலைக்கற்றை கும்பல் போடும் ஜதிக்கு ஆலாபனை பாடு. ‘திரி நெருப்பு ஆடுவது அணைந்து போக தீயோர் சிரிப்பது தீர்ந்து போக’ என்பதை விரைந்து வரும் காலம் உனக்கு சத்தியமாக உணர்த்தும். அதுவரை தீயசக்தி கூட்டத்தின் சுதிக்கேற்ப சொரணை கெட்ட ஜென்மமே உருண்டு புரண்டு ஆடு!” என்று எழுதியுள்ளார் சித்திரகுப்தன் என்பவர்.

‘நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழில் எழுதியிருப்பது அதிமுக தலைமையால் ராஜ்யசபா எம்.பி. ஆக்கப்பட்ட சசிகலா புஷ்பாவைத்தான் என்பது எழுதி தெரிய வேண்டிய அவசியமில்லை. சசிகலா புஷ்பாவின் கடந்த கால வரலாற்றைக் கிளறப்போவதாக கூறும் ‘நமது எம்.ஜி.ஆர்.’ இதழுக்கு ஒன்றை மட்டும் நினைவூட்டலாம். 2011 தேர்தலில் அதிமுக-வின் தூத்துக்குடி மேயராக வென்றார் சசிகலா புஷ்பா. 2014இல் மாநிலங்களவை உறுப்பினரும் ஆனார். கூடுதலாக மகளிரணி செயலாளர் பதவியும் அளிக்கப்பட்டது. இத்தனையும் அவரின் கடந்த கால வரலாறு தெரிந்துதான் கொடுக்கப்பட்டதா என்கிறார்கள் சசிகலா புஷ்பாவை விரும்பாத தூத்துக்குடி அதிமுக-வினர்.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon