மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

இன்று ஐ.நா. பொதுச்செயலாளர் ஆகிறார் அன்டோனியோ குட்ரெஸ்!

இன்று ஐ.நா. பொதுச்செயலாளர் ஆகிறார் அன்டோனியோ குட்ரெஸ்!

ஐ.நா. பொதுச் செயலாளராக பதவி வகித்து வரும் பான்கி மூனின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைகிறது. இந்நிலையில் ஐ.நா-வின் அடுத்த பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. தற்போது ஐ.நா. சபையின் அடுத்த பொதுச் செயலாளராக போர்ச்சுக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் அன்டோனியோ குட்ரெஸை தெரிவு செய்திருக்கிறது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில். இதுவரை அன்டோனியோ குட்ரெஸ் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். முதன்முதலாக 1974ஆம் ஆண்டு போர்ச்சுக்கல் சோஷலிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் பணி புரிந்துள்ளார். 1995ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சோஷலிஸ்ட் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து போர்ச்சுகீசிய நாட்டின் 114ஆவது பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேலும், ஐரோப்பிய கவுன்சிலின் தலைமைப் பொறுப்பு மற்றும் ஐ.நா. சபையின் அகதிகள் நல ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்று பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று ஐ.நா. பொதுச்செயலாளராக அன்டோனியோ குட்ரெஸ் நியமிக்கப்பட இருக்கும் நிலையில், ஐ.நா-வுக்கான இந்தியத் தூதர் சையது அக்பருதீன் ட்விட்டர் வலைதளத்தில் ‘ஐ.நா-வின் புதிய பொதுச் செயலாளராக அன்டோனியோ குட்ரெஸ் தேர்ந்தெடுக்கப்படுவதை இந்தியா வரவேற்கிறது. அவருக்கு எங்களுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்’. இவ்வாறு சையது அக்பருதீன் குறிப்பிட்டுள்ளார்.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon