மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: வெளிநாட்டுப் பணம் வரத்து குறைந்ததன் காரணமென்ன?

சிறப்புக் கட்டுரை: வெளிநாட்டுப் பணம் வரத்து குறைந்ததன் காரணமென்ன?

நடப்பு நிதியாண்டில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பணத்தின் அளவு 5 சதவிகிதம் குறையும் என்று சமீபத்தில் உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது. அவ்வாறு சரிவு ஏற்பட்டாலும் உலகளவில் வெளிநாடுகளில் இருந்து அதிக பணம் பெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தனது முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ளும் என்றும் உலக வங்கி தெரிவித்தது. கடந்த 2015ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு 69 பில்லியன் டாலர் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் செலுத்துவது யார்? பிழைப்புக்காகச் சென்றுள்ள நம் சக குடிமகன்தான் வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புகிறான். இவர்கள் வெளிநாடுகளில் இருந்து அனுப்பும் பணம் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தின் அளவில் ஏற்பட்ட சரிவால் இந்தியாவுக்குச் சில தீவிரமான விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்தியாவின் ஜி.டி.பி-க்கு 4 சதவிகிதம் பங்களிக்கும் அந்நிய செலாவணி சந்தைக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணம்தான். இந்த சரிவு நமது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பாதிக்கும்.

அதேபோல, இந்த சரிவின் காரணமாக சில மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தி கடுமையாக பாதிப்படைகிறது. குறிப்பாக, கேரளாவின் நிகர உள்நாட்டு உற்பத்தியில் 36 சதவிகிதம் வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணம் பங்களிக்கிறது. இவற்றின் அளவு சரிந்தால் கேரளாவின் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்படும் அபாயம் இருப்பதாக அம்மாநிலத்தின் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த பத்து வருடங்களில் வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணத்தின் அளவில் கடந்த 2009ஆம் ஆண்டு 1.4 சதவிகிதமும், 2015ஆம் ஆண்டு 1.8 சதவிகிதமும் சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் மீண்டும் சரிவைச் சந்திக்கும் என்று உலக வங்கி அறிவித்ததற்கான காரணம் என்ன ?

சரிவுக்கான காரணம்!

இந்தியாவில் வேலை கிடைக்காமல் இருப்பவர்களும் அதிக வருவாய் ஈட்ட நினைப்பவர்களும் வெளிநாடுகளுக்குச் செல்ல திட்டமிடுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக, வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, துபாய், கத்தார் போன்ற நாடுகளுக்கு செல்வதைத்தான் அதிகளவிலான இந்தியர்கள் விரும்புகின்றனர். வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் 35 லட்ச இந்தியர்கள் வளைகுடா நாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

அதிலும் குறிப்பாக கடந்த 2012ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தில் இருந்து மட்டும் 1.9 லட்சம் இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று இந்தியாவில் அதிக தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு சென்ற மாநிலமாக இருந்தது. இதற்கடுத்த நிலையில், கேரளாவில் 98,000 பேர், ஆந்திராவில் 92,000 பேர், அடுத்தபடியாக நான்காவது இடத்தில் தமிழகமும் (78,000 பேர்) இருந்தது. கடந்த 2001-02ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட பணத்தின் மதிப்பு 15.8 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியும் தொழிலார்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததையடுத்து 2011-12ஆம் ஆண்டில் 70 பில்லியன் டாலராக உயர்ந்தது.

தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவந்த நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய்யின் விலை சரியத் தொடங்கியது. பின்னர் இந்த எண்ணெய் விலையின் சரிவு கடந்த மே மாதம் முதல் மிகவும் தீவிரம் அடைந்த நிலையில், வளைகுடா நாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்க அந்நாட்டின் அரசு முடிவு செய்தது. இதனால் பல லட்சம் பேர் வேலை இழந்த நிலையில் இன்னும் பல லட்சம் பேர் வேலையை இழக்கும் அபாயத்தில் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

இதைப்பற்றி உலக வங்கியில் பணிபுரியும் முக்கிய பொருளாதார நிபுணரான திலிப் ரத்தா கூறுகையில், “வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பணத்தின் சரிவுக்கு கச்சா எண்ணெயின் சரிவும், சவுதி அரேபியா போன்ற நாடுகள் உள்நாட்டு தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் வழங்க முடிவு செய்துள்ளதால், அங்கு பணிபுரியும் இந்தியர்கள் அதிகளவில் வேலையிழந்துள்ளனர். இதுபோன்ற காரணங்களால் இந்தியாவுக்கு வரும் பணத்தின் அளவு சரியத் தொடங்கியுள்ளது” என்றார்.

கச்சா எண்ணெய் விலை சரிவு, தொழிலாளர்கள் வேலையிழப்பு போன்ற காரணங்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் இந்தியாவில் உள்ள தங்களது குடும்பங்களுக்கு பணம் அனுப்பும் முறைகளில் உள்ள சிக்கல்களாலும் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. அதாவது, வெளிநாடுகளில் இருந்து பணப் பரிவர்த்தனை செய்யும்போது மொத்த தொகையில் 6 சதவிகிதம் பிடிக்கப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் மாற்று வழிகளில் பணம் அனுப்புகின்றனர். இதுபோன்று மாற்று வழிகளில் பணம் அனுப்புவது அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படுவதில்லை. இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குப் பணம் அனுப்பும் எண்ணிக்கையில் இது சேர்க்கப்படுவதில்லை.

இதுபோன்று மாற்று வழிகளில் பணம் அனுப்பும் தொகையின் அளவு இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டின் அளவைவிட அதிகமாக இருக்கும் என்று ரத்தா சமீபத்தில் ஒரு பத்திரிகை பேட்டியில் தெரிவித்தார். இதுபோன்ற சிக்கல்களை நீக்க மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், இன்னும் விரைவாக செயல்பட வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது.

தொகுப்பு: மதுரா கார்னிக்

நன்றி: ஸ்க்ரோல்

http://scroll.in/article/818696/cheap-oil-is-spoiling-indias-remittance-party-this-year

தமிழில்: ரிச்சர்ட்சன்

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon