மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

ரூ.2,500 கோடி முதலீடு செய்யும் பி.எஸ்.என்.எல்!

ரூ.2,500 கோடி முதலீடு செய்யும் பி.எஸ்.என்.எல்!

மின்னம்பலம்

பி.எஸ்.என்.எல். தனது சேவையை விரிவுபடுத்த நடப்பு நிதியாண்டில் ரூ.4,000 கோடி முதலீடு செய்ய முடிவு செய்தது. இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் பாதியில் ஏற்கனவே ரூ.1,500 கோடி முதலீடு செய்துள்ள பி.எஸ்.என்.எல்., இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் ரூ.2,500 கோடி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. நெட்வொர்க் சேவையை அதிகரிக்கவும், டவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் மற்றும் வைஃபை ஹாட் ஸ்பாட் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பி.எஸ்.என்.எல் அதிகளவில் முதலீடு செய்து வருகிறது.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அனுபம் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “இந்த ஆண்டுக்காக நாங்கள் ஒதுக்கீடு செய்துள்ள நிதியை இரண்டு கட்டங்களாக முதலீடு செய்யவுள்ளோம். அதில், பி.எஸ்.என்.எல். நிறுவனம் மட்டும் தன்னிச்சையாகச் செயல்படுத்தும் திட்டங்களுக்கு ரூ.4,000 கோடியும், அரசுடன் இணைத்து செயல்படுத்தும் திட்டங்களுக்கு ரூ.3000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் தன்னிச்சையாக செயல்படுத்தும் திட்டங்களுக்கு நாங்கள் ஏற்கனவே ரூ.1,500 கோடியை முதலீடு செய்துள்ளோம். வரவிருக்கும் இரண்டாம் பாதியில் மேலும் ரூ.2,500 கோடியை முதலீடு செய்யவுள்ளோம்” என்றார்.

வைஃபை ஹாட் ஸ்பாட் மற்றும் டவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டங்களை பி.எஸ்.என்.எல். தன்னிச்சையாக செயல்படுத்தி வருகிறது. நக்சலைட் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவையை வழங்குதல், பாதுகாப்பு துறைகளில் சேவையை அதிகரித்தல் போன்ற திட்டங்களை மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது. தற்போதைய நிலையில் பி.எஸ்.என்.எல். நாடு முழுவதிலும் சுமார் 2700 வைஃபை ஹாட் ஸ்பாட்களை நிறுவியுள்ளது. மேலும், வருகிற 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இந்த எண்ணிக்கையை 40,000 ஆக உயர்த்த பி.எஸ்.என்.எல். நிறுவனம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

வியாழன், 13 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon