மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

சிறப்புக் கட்டுரை: நெய்வேலி வெறும் நிலக்கரி மட்டுமே அல்ல!

சிறப்புக் கட்டுரை: நெய்வேலி  வெறும்  நிலக்கரி மட்டுமே அல்ல!

இதுவரை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் என்று அழைக்கப்பட்டுவந்த நெய்வேலி நிலக்கரி நிறுவனம் இப்போது, என்.எல்.சி. இந்தியா லிமிடெட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. நெய்வேலி என்ற பெயரை அழித்துவிட்டு அது இந்தியா லிமிடெட்டாக அதை மாற்றியதன் பின்னால் இருப்பது வெறும் உள்ளூர் மக்களின் உரிமை சார்ந்த அடையாள அழிப்பு மட்டுமல்ல; அது நிலக்கரி நிறுவனத்தையே தனியாருக்கு தாரைவார்க்கும் சட்டபூர்வ அங்கீகாரத்தின் முதல் முயற்சி என்கிறார்கள் ஆர்வலர்கள்.

நெய்வேலி நிலக்கரி உழைப்பின் உதிரம்!

இன்றைக்கு நெய்வேலி என்பது ஒரு நகரியம். ஆனால், முப்பதுகளில் அது ஒரு விவசாய கிராமம். இன்றைய நெய்வேலி நகரியம் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தூரம் தெற்கில்தான் உண்மையான நெய்வேலி கிராமம் இருந்தது. அந்தக் கிராமத்தில் உள்ள பெருமளவு விவசாய நிலங்களுக்கு அதிபதி ஜம்புலிங்க முதலியார்.

(ஜம்புலிங்கம்)

அன்றைய தென்னாற்காடு ஜில்லா, கடலூர் - பண்ருட்டி நெடுஞ்சாலையில் உள்ள திருகண்டேஸ்வரம் கிராமத்தில் பிறந்த ஜம்புலிங்கம் நிலச்சுவான்தாரராகத் திகழ்ந்தார். 1934ஆம் ஆண்டு ஜம்புலிங்க முதலியார், தனக்குச் சொந்தமான நெய்வேலி கிராமத்து விவசாய நிலத்தில் தண்ணீருக்காகக் கிணறு தோண்டும்போது, கறுப்பு நிற திரவப்பொருள் தண்ணீரோடு கலந்து வந்தது. அதிசயப்பட்டுப்போனவர், அன்றைய ஆங்கிலேய அரசின் புவியியல்துறையின் கவனத்துக்கு அனுப்பிவைத்தார். அப்போதுதான், பழுப்பு நிலக்கரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அன்றைய ஆங்கிலேயேர் ஆட்சி முடிவடையும் தறுவாயில் இருந்ததாலும், இந்தியா முழுக்க சுதந்திரப் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்ததாலும் அவர்கள் அதில் கவனம் செலுத்தவில்லை. நாடு சுதந்திரம் அடைந்த நிலையில், 1956இல் நிலக்கரியைத் தோண்டி எடுத்து மின்சாரம் தயாரிக்க என்.எல்.சி. நிறுவனத்தைத் தொடங்கியது இந்திய அரசு. ஜம்புலிங்கம், நிலக்கரி நிறுவனம் உருவானால் இந்த மக்களுக்குப் பயன்படுமே என்று தன் நிலத்தில் 600 ஏக்கரை தானமாகக் கொடுக்க, அந்த நெய்வேலி என்னும் கிராமத்தின் பெயரைத்தாங்கி நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் உருவானது. தங்களுக்கு வாழ்வளித்த அந்த ஜம்புலிங்கத்துக்கு இரண்டாம் சுரங்கப்பாதையின் நுழைவு வாயிலில் தொழிலாளர்கள் ஒரு சிலை அமைக்க விரும்பி, அவர்களின் பணத்திலேயே சிலையும் அமைக்கப்பட்டது. அது, பின்னர் நாசமாகிப்போக நெய்வேலி இரட்டைப்பாலத்தின்மீது ஜம்புலிங்கத்துக்கு முழு உருவ வெண்கலச் சிலையை வைத்து அழகுபார்த்தனர் நெய்வேலி மக்கள்.

ஆண்டுகள் பல கழிந்துவிட்ட நிலையில், ஜம்புலிங்கத்தின் வாரிசுகள் படித்திருந்தார்களே தவிர அவர்களுக்கு முறையான வேலைகள் இல்லை.

நெய்வேலி சுரங்க நிறுவன விழா ஒன்றில் கலந்துகொண்ட ஜம்புலிங்கத்தின் வாரிசுகள், ‘நாங்கள் தற்போது நலிவடைந்தநிலையில் உள்ளோம். எங்கள் பிள்ளைகள் நன்கு படித்துள்ளனர். அவர்களுக்கு இந்நிறுவனத்தில் வேலை வேண்டும் என்று இதுவரை நாங்கள் கோரவில்லை. நீங்களாக வழங்கினால் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்’ என்று வாய்விட்டு கேட்டே விட்டனர்.

இன்று மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்தைப் பெற்றுள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்க நிறுவனத்தில் 12,000 நிரந்தரத் தொழிலாளர்களும் 10,000 ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணி செய்கிறார்கள். காண்டிராக்ட் வேலை, மணல் அள்ளும் வேலை என மறைமுகமாக பல்லாயிரம் பேர் பயனடைகிறார்கள். ஆகமொத்தம், ஜம்புலிங்கம் கொடுத்த நிலத்திலிருந்து உருவான நிலக்கரி நிறுவனம் லட்சக்கணக்கான தொழிலாளர்களை வாழவைக்கிறது. ஆனால், ஜம்புலிங்கத்தின் வாரிசுகளுக்கு அங்கு வேலையில்லை. இதுதான் வேடிக்கையான யதார்த்தம்!

ஜம்புலிங்கத்தைத் தொடர்ந்து, பலர் தங்களின் நிலத்தைக் கொடுத்தார்கள். அரசாங்கம் கொடுத்தப் பணத்தை பெற்றுக் கொண்டார்கள். ஆனால் அவர்களின் பெரும்பாலானவர்களின் நிலை பரிதாபம். அவர்கள் நிலத்தை விட்டுவிட்டு வெளியேறி வேறு எங்கெங்கோ இடம்பெயர்ந்துவிட்டு கண்ணீரோடு நிலக்கரி நிறுவனத்தை பார்த்துச் செல்கிறார்கள்.

(நிலம் கொடுத்த மக்கள்)

ஆனாலும், அரசு நிறுவனமாக இருந்ததால் ஆறுதலடைந்த மக்களுக்கு இன்று அந்த நிம்மதியும் போய்விட்டது தொழிலாளர்களுக்கும்தான். காரணம், தொழிலாளர்கள் வேறு, மக்கள் வேறு அல்ல. அங்குள்ள அதிகாரிகள் பிற மாநிலங்களைச் சார்ந்தவர்களாக இருந்தபோதிலும் பெரும்பாலான தொழிலாளர்கள் உள்ளூர் மக்கள்தான். 1992இல் கொண்டுவரப்பட்ட தனியார்மயம், தாராளமயக் கொள்கைக்கு லாபம் தரும் நெய்வேலி நிறுவனம் பலியிடப்படுகிறது. தற்காலிகப் பணியாளர்களை நிரந்தரமாக்காதது, ஊதிய உயர்வை நிறுத்துவது, ஆட்குறைப்பு என 1992க்குப் பிறகு படிப்படியாக நடைமுறைப்படுத்தி நெய்வேலி பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை அறிவித்தபோதுதான் தொழிலாளர்கள் கொந்தளித்து விட்டார்கள். இறுதியில், தமிழக அரசு தலையிட்டு அந்தப் பங்குகளை வாங்கிக்கொண்டது.

இந்த நெய்வேலியின் வனப்புக்கு 22 கிராமங்கள் தங்களை விலையாக இதுவரை கொடுத்துள்ளன. ஆமாம், 22 கிராமங்கள் நிலக்கரி எடுக்க காலி செய்யப்பட்டிருக்கின்றன. இத்தனை தியாகங்களையும் செய்து இந்திய அரசுக்கு லாபத்தை அள்ளிக்கொடுத்த நெய்வேலியின் பெயரை அந்த நிறுவனத்தில் இருந்து அகற்றுவது கருவில் இருக்கும்போதே தொப்புள்கொடியை அறுத்தெறிவதற்குச் சமம்.

சனி, 13 ஆக 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon