மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 8 ஆக 2016

ஆயிரம் லைக்குகள் வாங்கிய விலாசினியும்

ஆயிரம் லைக்குகள் வாங்கிய விலாசினியும்

மாடு மேய்த்துப் படித்தவர் கிரிமினலாக்கப்பட்ட கதையும் - (பாகம் 2)

- வளர்மதி

‘ஓலா டாக்சி டிரைவர் மீது வைத்த குற்றச்சாட்டில் முழு உண்மையில்லை’ என்று மாமல்லன் எழுதியதும், விலாசினியின் குற்றச்சாட்டின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகம் எழுந்தது. அதற்கு நேரடியாகப் பதில் அளிக்க முன்வராத விலாசினி, 26.07.16 அன்று தன் முகநூல் பக்கத்தில், ‘எனக்கு உதவ முன்வந்த ஊடக நண்பர்களிடம் ஒன்றைத் திரும்பக் கூறிக்கொள்கிறேன். எக்காலத்திலும் தவறான / பொய்யான ஒரு குற்றச்சாட்டை ஆதரிப்பதாகக் கருத வேண்டாம். உங்களிடம் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மை, உண்மை மட்டுமே. இதை மீண்டும் உங்களிடம் இப்போது வெளியில் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று எழுதினார். ஆனால், அவர் கூறியது முழு உண்மைதானா? ‘உண்மை. உண்மையைத் தவிர வேறு இல்லை’ தானா?

09.07.16 இரவு நடந்த சம்பவத்தை, இரண்டு நாட்கள் கழித்து, 11.07.16 மாலை முகநூலில் முதன்முறையாக எழுதிய பதிவில் இப்படி ஆரம்பிக்கிறார் விலாசினி... ‘இரண்டு தினங்கள் முன்பு திருவான்மியூரிலிருந்து வளசரவாக்கம் வருவதற்கு (தனியாக) ஓலா கேப் கார்த்திக் பதிவுசெய்து கொடுத்தான். நல்லவேளையாக வீட்டிலிருந்து ஏறாமல், பக்கத்தில் ஒரு கடையிலிருந்து ஏறினேன்’ - இதைப் படிப்பவர்கள், விலாசினி இரவில் தனியாக கால் டாக்சியில் பயணித்தார் என்று மட்டுமல்ல, தனியாக கால் டாக்சியில் ஏறினார் என்றே புரிந்து கொள்வார்கள். ஆனால்,உண்மையான உண்மை என்ன?

விலாசினி, அவர் திருமணம் செய்ய இருக்கும் நண்பருடைய தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவரைப் பார்க்கவே வளசரவாக்கத்தில் இருந்து திருவான்மியூர் சென்றிருக்கிறார்.இதை விலாசினிக்கு ஆதரவாக முகநூலில் களம் இறங்கிய வக்கீல் ஒருவர், விலாசினியிடமே கேட்டுத் தெரிந்து கொண்டு பதிவு செய்திருக்கிறார்.

உடல்நிலை சரியில்லாதவரை பார்த்துவிட்டு, இரவு 8.30 மணிக்கு மேலாக விலாசினி வளரசரவாக்கத்தில் உள்ள தன் வீட்டுக்குப் புறப்பட்டிருக்கிறார். கால் டாக்சியை அவரைத் திருமணம் செய்ய இருக்கும் நண்பரே பதிவு செய்து கொடுக்கிறார். அவரே டாக்சியில் ஏற்றி வழி அனுப்பியும் வைத்திருக்கிறார்.

இந்தத் தகவலைத்தான் (உண்மையை) விலாசினி சாதுர்யமாகத் தன் ஆரம்ப வரிகளிலேயே மறைக்கிறார். தனியாகப் பயணம் செய்தது மட்டுமல்ல, தனியாக டாக்சியில் ஏறியது போன்ற பொருள் தொனிக்கவும் எழுதுகிறார். (டாக்சி டிரைவர் தனது பேட்டியில், விலாசினியை ஒருவர் காரில் ஏற்றிவிட்டதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்).

விலாசினி உள்ளது உள்ளபடி உண்மையைக் கூறவில்லை. அரை உண்மையை மட்டுமே சொல்லியிருக்கிறார். ஒரு முழு உண்மையை மறைத்திருக்கிறார். இப்படி, ஒரு உண்மையை‘அமுக்குவது’ அடுத்த வரியில் ஒரு திகில் கதையை ஆரம்பிக்க அவருக்கு வசதியாக இருக்கிறது. அது, ‘நல்லவேளையாக வீட்டிலிருந்து ஏறாமல், பக்கத்தில் ஒரு கடையிலிருந்து ஏறினேன்’ –அதாவது, ஒரு ‘கிரிமினலுக்கு’ வீட்டை அடையாளம் காட்டும் ஆபத்தைத் தன்னை அறியாமல் தவிர்த்தாராம்.

இரண்டாவது வரியில் ஆரம்பிக்கும் ‘ஆபத்து’ மூன்றாவது வரியில் வேகம் எடுக்கிறது. எப்படி? ‘கார் எடுத்த எடுப்பிலேயே படு வேகம்’. நான்காவது ஐந்தாவது வரிகளில், திகில் கதையின் பிரதான பாத்திரங்களின் உடல் – மனநிலை பற்றிய சுருக்கமான விவரிப்பு. விலாசினிக்கு உடல்நலம் சரியில்லை; டிரைவரின் திமிர் (‘உடல்நலம் சரியில்லையென்று மெதுவாகப் போகச் சொன்னேன். டிரைவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை’). அதற்கு அடுத்த வரியில்தான் ஒரு பேருண்மையான – திடமான உண்மைத் தகவலைச் சொல்கிறார் (மத்ய கைலாஷ் கடந்து கிண்டி மேம்பாலம் –ஐஐடி-க்கு அருகில் இருக்கும் மேம்பாலத்தை கிண்டி மேம்பாலம் என்று தவறாகக் கூறியிருக்கிறார்).

‘விலாசினி கார்த்திக்கை பார்க்கச் சென்றதே அவரின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால்தான்’ என்று விலாசினியிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அவருக்கு ஆதரவான வக்கீல் எழுதிய பிறகுதான், நான்காவது வரியில் தனக்கு உடம்பு சரியில்லை என்று இவர் சொல்லியிருப்பது பொய்யோ, மெய்யோ என்ற சந்தேகத்தை கிளப்பிவிடுகிறது (என்ன உடல்நிலை சரியில்லை?உடல்நிலை சரியில்லாதவர், ஏன் அவ்வளவு தூரம் பயணித்து இன்னொரு உடல் சுகமில்லாத நபரைப் பார்க்கப் போனார்? இன்ன பிற).

ஆறாவது வரிக்குப் பிறகுதான் விலாசினி சொன்ன திகில் கதையின் மையக்கரு தொடங்குகிறது. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு எதிரில் அரையிருட்டு. அரையிருட்டில் ‘ஷைன் அடித்த’ பயங்கர(கறுப்பு) முகம் இருக்கிறதோ, இல்லையோ என்ற மயக்கத்துடன் தோன்றும் ஆயுதம், கார் சேஸ் இன்ன பிற. துயரம் என்னவென்றால், திகில் கதை ஆன்ட்டி க்ளைமாக்ஸிலும், ஃப்ளாஷ் பேக்கிலும் முடிந்து போனதுதான் (போலீஸாரின் அலைக்கழிப்பும், இரவு பதினோரு மணிக்குப் பிறகு தோன்றும் எண்ண அலைக்கழிப்புகளும்). இடையில், டிரைவருக்குத் தரவேண்டிய பயணம் செய்த தூரத்துக்கான தொகையை ஏன் கொடுக்க மறுத்தார் என்ற கேள்வி மட்டும் விடையே கிடைக்காமல் அண்ணா பல்கலைக்கழகத்தின் எதிரில் நிலவிய இருட்டில் அலைந்து கொண்டிருக்கிறது.

விலாசினியின் இந்தப் பயங்கரமானத் திகில் கதையில் ‘உள்ளது உள்ளபடியான உண்மை’க்குப் பதிலாக, வேறொரு உண்மை – ஒரு ‘தீர்க்கத் தரிசன உண்மை’ நிழலாடுகிறது. அந்த ‘தீர்க்கத் தரிசன உண்மை’தான் அவரது திகில் கதைக்கான நியாயப்பாடாக இருப்பது. திகில் கதை ஒரு உண்மைச் சம்பவம் போல தோன்றச் செய்வது.

‘இந்த நாட்டில், ஒரு பெண் நடு இரவிலும் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் என்று நடமாட முடிகிறதோ, அன்றுதான் நாம் உண்மையானச் சுதந்திரத்தை அடைந்துவிட்டதாகச் சொல்ல முடியும்’என்ற காந்தியின் ‘தீர்க்கத் தரிசன உண்மை’ தான் அது.

உண்மையை எடுத்துச் சொல்லும் முறைகள் நான்கு உண்டு. தீர்க்கத் தரிசன உண்மை, தத்துவ உண்மை, கற்றலின் உண்மை, அதிகாரத்துக்கு எதிராக பேசப்படும் உண்மை என்று அவை வரையறுக்கப்பட்டுள்ளன.

தீர்க்கத் தரிசன உண்மை என்பது எதிர்காலத்தில் நடக்கப்போகும் நிகழ்வுகளை சொல்வது. ஞானிகளும் சாமியாடிகளும் சொல்லும் உண்மை அது.

தத்துவ உண்மை உலகின் இயல்பு, உலகில் காணும் பொருட்களின் இயல்பு, வாழ்க்கையின் பொருள் இன்ன பிறவற்றைப் பற்றி பேசுவது. காலம் கடந்த – காலத்துக்கு அப்பாற்பட்ட உண்மைகளைப் பற்றி பேசும் உண்மை அது.

கற்றலின் உண்மை, ஒரு குறிப்பிட்டத் துறையில் சிறந்த பயிற்சி பெற்றவர்கள் தமது துறை சார்ந்த மறுக்கப்பட முடியாத உண்மைகளை - அறிவை, அடுத்தத் தலைமுறையினருக்கு எடுத்து இயம்புவது, பயிற்றுவிப்பது. கடந்த காலத்தில் மனித குலம் கற்ற உண்மைகளை, கடந்த கால உண்மைகளைப் பேசுவது அது. ஞானி, தத்துவவாதி, ஆசிரியன் ஆகியவர்கள் பேசும் உண்மைகள் எனலாம். இந்த வகைப்பட்ட மூன்று உண்மைகளும் நிகழ்கால உண்மையைப் பற்றி பேசுவதில்லை என்பது இங்கே நமது கவனத்துக்குரியது.

‘அதிகாரத்துக்கு எதிராக உண்மை’யைப் பேசுவது தான் நிகழ்காலத்துக்கு உரிய உண்மை. இந்த உண்மை பேசும்முறை, உள்ளதை உள்ளபடி எடுத்துக்கூறுவது. இந்த உண்மையைப் பேசுபவர் அதிகாரத்தில் தனக்கு மேல் நிலையில் இருப்பவருக்கு உண்மையை உள்ளது உள்ளபடி எடுத்துக் கூறுவதாக இருப்பது. அரசர், அரச ஆலோசகர், பெரும்பான்மை அரசியல் சமூகம்,சிறுபான்மையினரின் குரல், ஏன் இரண்டு நண்பர்களுக்கிடையிலும் கூட பேசப்படும் உண்மை. இந்த உண்மையை எடுத்துக்கூறுவதால், அதைக் கூறுபவருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு அதன் தன்மையிலேயே அடங்கி இருக்கிறது. உண்மையை எடுத்துக் கூறுபவருக்கும் கேட்பவருக்கும் இடையிலான உறவே முறிந்துவிடும் ஆபத்தையும் உள்ளார்ந்த தன்மையாகக் கொண்டது.

உண்மையைச் சகித்துக் கொள்ள இயலாத அரசர், ஆலோசகனை தூக்கில் போடலாம். பெரும்பான்மையினர் காணத் தவறும் உண்மையை எடுத்துக் கூறுவதால், சிறுபான்மைக் குரல் நசுக்கப்படலாம். நண்பன் காண மறுக்கும் நிதர்சனமாதனொரு உண்மையை எடுத்துக் கூறுவதால் நட்பே முறிந்து போகலாம். இதுதான் அதிகாரத்துக்கு எதிராக உண்மையை எடுத்துக் கூறுவதன் தன்மை. நிகழ்காலத்துக்கே உரியது விஷயங்களைத் திரிக்காமல், உள்ளது உள்ளபடி எடுத்துக்கூறும் உண்மை.

விலாசினி, டிரைவரைப் பற்றி சொன்ன திகில் நிறைந்த ‘உண்மைச் சம்பவத்’துக்குத் திரும்புவோம். சம்பவம் நிகழ்காலத்துக்குரியது.

ஆனால், விலாசினி யாரைப் பற்றி பேச முற்பட்டாரோ அவர் (ஓலா டாக்சி டிரைவர்) அதிகாரப் படிநிலையில் இவருக்கு மேலாக இருப்பவராக இல்லாமல் போனதுதான் விலாசினியின் துரதிர்ஷ்டம். டிரைவர், கால் டாக்சி ஓட்டிக் கொண்டிருக்கும் ஒரு கூலித் தொழிலாளி. விலாசினி திருமணத்துக்கு முன்னரே சொந்தமாகக் கார் வைத்திருந்தவர். திருமணத்துக்குப் பிறகு நான்கு சொகுசு கார்களை மாறி மாறி வைத்திருந்தவர் (விலாசினிக்கு ஆதரவாக முகநூலில் எழுதிய வக்கீல் விலாசினியிடமே கேட்டு அறிந்து சொன்ன மற்றொரு உண்மை இது). எஜமானியாக இருந்து பழக்கப்பட்டவர் விலாசினி. வாடிக்கையாளர்களுக்கு சேவை புரிந்து பழக்கப்பட்டவர் கார் டிரைவர்.

அதிகாரத்துக்கு எதிராக உண்மையைப் பேசுவதில் உள்ள அடிப்படை நிபந்தனையே – பேசுபவர் அதிகாரப் படிநிலை வரிசையில் கீழிருப்பவராக இருத்தல் – இங்கு இல்லை. அடுத்து, உண்மையைச் சொன்னதால் விலாசினிக்கு ஆபத்து எதுவும் நிகழ்ந்து விடவில்லை. நிகழப்போவதும் இல்லை. மாறாக, டிரைவருக்குத்தான் ஆபத்து நேர்ந்தது. பாதிப்பும் ஏற்பட்டிருக்கிறது.

விலாசினி உண்மையை உள்ளபடியே சொல்லவும் இல்லை. தொடக்கத்தில் காட்டியுள்ளதைப்போல, அரை உண்மையிலிருந்தே தொடங்குகிறார். ஒரு முழு உண்மையை மறைத்திருக்கிறார்.அவரது பின்னணியைப் பற்றிய பல உண்மைகளையும் சொல்லவில்லை (அவருக்கு ஆதரவாகக் களம் இறங்கிய வக்கீல் ஒருவரால் இந்தப் பின்னணி உண்மைகள் தெரிய வருகின்றன). ஒரு‘அபலைப் பெண்ணுக்கு’ இரவில் நிகழ்ந்த பயங்கரமான அனுபவமாக ஒரு திகில் கதையையே சொல்லியிருக்கிறார். காந்தியின் ‘தீர்க்கத் தரிசன உண்மை’யின் நிழல், அவருடைய திகில் கதை எடுபட ஏதுவான பேக்-ட்ராப்பாக (டெக்னிக்கலாக சொல்வதென்றால் sub text ஆக) அமைந்துவிட்டது.

விலாசினியின் முகநூல் பதிவைக் கண்டதும் ஜனநாயக ஆட்சியின் நான்காவது தூண் துணுக்குற்றது. அதிகாரம் விழித்துக் கொண்டது. சாட்டையைச் சொடுக்கியது. அதிகாரத்துக்கு எதிராக உண்மையைப் பேசுதல் நிகழாமல், அதிகாரத்தின் தூண்களில் ஒன்று உரத்தக்குரலில் பேசத் தொடங்கியது. விலாசினி அதிகாரத்தின் தூண்களுக்குத் தன் நன்றிகளைத் தெரிவிக்கிறார்.

‘பெண் வெறுப்பென்னும் மகா சமுத்திரத்தில்’ அவரால் முடிந்த கல்லை எறிந்துவிட்டதாகத் திருப்தி கொள்கிறார். அப்புறம், குர்தீஷ் இனப் பெண்களின் போராட்டங்கள் பற்றிய புத்தகத்தை வாசித்து புல்லரித்துப் போகிறார். ‘குற்றம் சாட்டப்பட்டவரின் தரப்பிலிருந்து தகுந்த முறையில், செய்த குற்றத்துக்கு வருந்தி, என்னை அணுகினால் உரையாடத் தயாராகவிருக்கிறேன்’ என்று விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, எட்கர் ஆலன் போவின் திகில் கதைகளுக்குள் மூழ்கி விடுகிறார்.

அதிகாரத்தின் சாட்டை சீறி சிறைக்குப் போன ஓலா டாக்சி டிரைவரோ, தனக்குத் தெரிந்த ஒரே பிழைப்பையும் செய்ய முடியாமல் தினமும் தாம்பரத்துக்கு அடுத்துள்ள முடிச்சூரில் இருந்து,வளசரவாக்கம் S4 போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் கையெழுத்து போட்டுக் கொண்டு காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறார். அதிகாரப் படிநிலையின் உச்சியில் இருப்பவர் தன்னை பாதிக்கப்பட்டவராகவும், அதிகாரப் படிநிலை வரிசைக்கு வெளியே நிற்கும் டிரைவரை ஆணாதிக்கத்தின் பயங்கரமான வடிவமாகவும் சித்தரித்தது இத்தகைய விளைவை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிகாரத்தின் உச்சியில் இருப்பவர்கள் ஒருபோதும் உண்மையை உள்ளது உள்ளபடி பேசுவதில்லை. அதிகாரத்துக்கு எதிராக உண்மையை பேசுதல் என்ற கேள்வியே அவர்களிடத்தில் எழுவதும் இல்லை. அதிகாரப் படிநிலை வரிசைக்கு வெளியே இருப்பவர்களை ஒடுக்குபவர்களாகச் (oppressor) சித்தரித்து, உச்சியில் இருக்கும் தம்மை பாதிப்புக்குள்ளானவர்களாகச் (victim) சித்தரிக்கும்,பாத்திரப் படைப்பை தலைகீழாக மாற்றிக்காட்டும் வித்தையிலும் (role reversal) கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். தமிழக / இந்தியச் சூழலில் காலங்காலமாக அதிகாரத்தின் பலாபலன்களை அனுபவித்து வந்தவர்களுக்கே உரிய விசேஷமான குணங்களில் இது ஒன்று. சற்றே கூர்ந்து நோக்கினால், அவர்கள் அனுபவிக்க விரும்புவது அதிகாரத்தை (power) அல்ல. கேள்விக்கு இடமில்லாத ஆணையுரிமையையே (authority) என்பது புரியவரும்.

- தொடரும்...

திங்கள், 8 ஆக 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon