மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

மோடி காலில் விழுந்த நீதிபதி!

மோடி காலில் விழுந்த நீதிபதி!

இந்திய நாட்டில் உள்ள ஒவ்வொரு பாமர மக்களின் கடைசி நம்பிக்கையாக இருப்பது நீதிமன்றங்கள்தான். பல்வேறு பிரச்னைகளில் பாதிக்கப்பட்ட மக்கள், நீதிக்காக நீண்டகாலம் நீதிமன்ற வாசல்களில் தவம் கிடக்கிறார்கள். அந்த நம்பிக்கையின் நாயகர்கள் நீதிபதிகள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாமதமில்லாமல் நீதியை கிடைக்கச் செய்வதுதான் உன்னதமான நீதிபதிப் பணி. அவர்கள் எந்த ஒரு தனிப்பட்ட உணர்வுகளுக்கும் தங்கள் பணியில் இடம் கொடுக்கக் கூடாது என்பதால்தான் அதை உன்னதமான பணி என்கிறோம். ஆனால், பிரதமர் மோடியின் காலில் ஒரு நீதிபதி விழுந்து வணங்கிய நிகழ்வு இந்தியா முழுக்க அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் 150வது ஆண்டு விழாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மோடி பங்கேற்றார். அந்த விழாவில் நீதிபதிகளுடன் தேனீர் விருந்தும் நடந்தது. விழாவில் பங்கேற்ற மோடியுடன் நீதிபதிகள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். ஆனால் அதன்பின்னர் நடந்தவைதான் அதிர்ச்சி ரகம்! அதில், உத்தரகாண்ட் நீதிபதி ஒருவர் மோடியின் காலைத் தொட்டு வணங்கினார். உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி மாநில முதலமைச்சரின் காலைத் தொட்டு வணங்கினார். மற்றொரு மூத்த நீதிபதி பிரதமர் மோடியை “மேன் ஆஃப் தி மோமன்ட்’’ என்று விவரித்துள்ளார். மொத்தமாக நீதிபதிகளின் இந்தச் செயல் சமூக ஆர்வலர்களிடம் மட்டுமல்லாது, நீதித்துறையைச் சார்ந்தவர்களே கடுமையாக விமர்சிக்கும் அளவுக்குச் சென்றுள்ளது.

இதுபற்றி லக்னோவில் உள்ள மூத்த சட்டத்துறை அதிகாரி பேசும்போது, “ இது உண்மை என்றால் நீதிபதிகளின் நடத்தை வருத்தத்துக்குரியது” என்றார்.

அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் “ நீதிபதிகளின் இந்தச் செயல்கள் அறிவில்லா செயலாகும். மக்களுக்கு நீதி வழங்கும் இடத்தில் இருக்கும் நீதிபதிகள் செய்கிற செயல் அல்ல இது. இது நீதித்துறைக்கும், நீதிபரிபாலனத்துக்கும் எதிரானது” என்றார்.

அரசியல்வாதிகளிடம் நீதிபதிகள் இப்படி மண்டியிடுவது அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வாடிக்கையாக இருந்து வருகிறது என்று குற்றம் சுமத்துகிறார்கள் சமூக ஆர்வலர்கள். பல நீதிபதிகள் அரசோடு இணைந்திருக்க எண்ணுகிறார்கள். ஆனால், தங்கள் பதவியின் கண்ணியத்தை இப்படியான செயல்கள்மூலம் தொலைத்துவிடுகிறார்கள். நீதிபதிகள் எவருக்கும் அடிபணிய வேண்டும் என்பது கிடையாது. தவறு செய்தவர்கள் எவராயினும் அவர்களைத் தண்டிக்கும் உரிமை நீதிபதிகளுக்கே உண்டு எனும்நிலையில், மக்களுக்கு நீதி வழங்கவேண்டிய இடத்தில் இருக்கும் நீதிபதிகளே இப்படி நடந்துகொண்டால் அவர்களிடம் நீதி வேண்டிச் செல்லும் மக்களின் நிலை எப்படி இருக்கும்!.

புதன், 15 ஜுன் 2016

அடுத்ததுchevronRight icon