மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 27 மே 2020

டிஜிட்டல் திண்ணை-‘பன்னீருடன் வாக்கிங்’ - வசூல் புகார்

டிஜிட்டல் திண்ணை-‘பன்னீருடன் வாக்கிங்’ - வசூல் புகார்

‘அறிவாலயத்தில் இருக்கிறேன்!’ என அலெர்ட் மெஸேஜ் கொடுத்துவிட்டு, சற்றுநேரத்தில் டீடெய்ல் மெஸேஜ் அனுப்பியிருந்தது வாட்ஸ் அப்.

“இன்று பகல் 12 மணிக்கு ஸ்டாலின் அறிவாலயத்துக்கு வந்தார். அவர்வந்த சற்றுநேரத்திலேயே மதிமுக-வைச் சேர்ந்த வேளச்சேரி மணிமாறன் அறிவாலயம் வந்தார். அவரை அறிவாலயம் வாசலில் நின்று வரவேற்றது ஜோயல். இவர்தான், முன்பு மதிமுக-வின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக இருந்தவர். இவர், தேர்தலுக்குமுன்பே திமுக-வில் இணைந்துவிட்டார். மதிமுக-வில் உள்ள நிர்வாகிகளிடம் இன்னும் தொடர்ந்து பேசிவருகிறார் ஜோயல். தேர்தல் முடிவுகளுக்குப்பிறகு சபரீசனை சந்தித்துப் பேசியிருக்கிறார். ‘தேர்தல் முடிவுகளுக்குப்பிறகு மதிமுக-வில் உள்ள நிர்வாகிகள் பலரும் திமுக-வுக்கு வரத் தயாராக இருக்காங்க… பேசிப் பார்க்கவா?’ எனக் கேட்டிருக்கிறார். ‘மாமாகிட்ட கேட்டுட்டுச் சொல்றேன்…’ என்று, சபரீசன் சொல்லி அனுப்பியிருக்கிறார்.

ஸ்டாலின், மலேசியா போவதற்குமுன்பே இதுபற்றி சபரீசன் பேசியதாகச் சொல்கிறார்கள். ‘வர்றவங்க தாராளமாக வரட்டும். பேசச் சொல்லுங்க...’ என்று அவர் சொன்னாராம். அதன்பிறகுதான் ஜோயல் களத்தில் இறங்கியிருக்கிறார்.

வைகோ-வுக்கு கட்சியில் மிக முக்கியமானவர்கள் என்றால் அது மல்லை சத்யாவும், வேளச்சேரி மணிமாறனும்தான். இந்த இருவரில் ஒருவரை முதலில் இழுக்கவேண்டும் என்று களத்தில் இறங்கியிருக்கிறார் ஜோயல்.

வேளச்சேரி மணிமாறன் சற்று வருத்தத்தில் இருக்கிறார் என்பது தெரிந்து, முதலில் அவரிடம் பேசியதாகச் சொல்கிறார்கள். ‘உங்க வயசுக்கு இந்தநேரம் நீங்க அமைச்சராகி இருக்கணும். ஆனால், உங்களால் சாதாரண பதவிக்குக்கூட வரமுடியலை. இப்படியேபோனால், உங்க காலம்முழுக்க எந்த நல்லதும் நடக்காது. தலைவரை நான் குறை சொல்லலை… ஆனால், அவரு எடுக்கும் முடிவு எல்லாமே தப்பாத்தான் முடியுது. நீங்க இங்கே வந்துடுங்கண்ணே..’ என்று பேசியிருக்கிறார். ஆரம்பத்தில் மணிமாறனிடம் இருந்து எந்த சிக்னலும் வரவில்லை. ஒரு வாரத்துக்கு முன்புதான் ஓ.கே. சொன்னாராம். அதன்பிறகு ஸ்டாலினிடம் பேசி இன்று சந்திப்புக்கு நாள் குறிக்கப்பட்டது.

மணிமாறன் ஆரம்பம்தான் என்கிறார்கள். மதிமுக-வில் உள்ள 9 மாவட்டச் செயலாளர்களுக்கு டார்கெட் ஃபிக்ஸ் செய்திருக்கிறாராம் ஜோயல். அடுத்தடுத்து அவர்களை இழுக்கும் வேலைக்கும் தயாராகிவிட்டதாகச் சொல்கிறார்கள். குறிப்பிட்ட அந்த 9 மாவட்டச் செயலாளர்களிடமும் தொடர்ந்து பேசி வருகிறாராம். ஒவ்வொரு மாவட்டச் செயலாளராக திமுக-வில் இணைக்கும் படலம் அடுத்தடுத்து நடக்குமாம். மணிமாறனை கட்சியில் சேர்த்தபிறகு இன்று ஸ்டாலினை சந்தித்திருக்கிறார். ‘நல்ல வேலை செஞ்சிருக்கீங்க..’ என்று ஸ்டாலின் கைகொடுத்து அவரை வாழ்த்தியிருக்கிறார். அத்துடன், ‘உங்களுக்கு என்ன செய்யணுமோ அதைச் செய்வோம்’ என்றும் சொன்னதாகச் சொல்கிறார்கள்.

திமுக-வில் மாவட்டச் செயலாளர்களை மாற்றும் படலம் நடந்துவருகிறது அல்லவா… அந்த சர்ச்சை லிஸ்ட்டில் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பெரியசாமியும் இருக்கிறார். அப்படி பெரியசாமியை அந்தப் பொறுப்பில் இருந்து தூக்கினால், ஜோயலுக்கு மாவட்டச் செயலாளர் வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்கிறார்கள். மாற்றத்துக்கான அறிவிப்பு எந்தநேரத்திலும் வரலாம் என்று சொல்கிறார்கள் அறிவாலயம் வட்டாரத்தில்!’’ என்பதுதான் அந்த மெஸேஜ்.

அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக். தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றையும் அப்டேட் செய்தது. “கல்லூரிப் பேராசிரியர் வேலை வாங்கித் தருவதாக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயரைச் சொல்லி பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாக நாகராஜ் என்பவர்மீது, பாப்பா செல்வம் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்திருக்கிறார். இந்த நாகராஜ் என்பவர், வட சென்னை பகுதியைச் சேர்ந்தவராம். தினமும் பாப்பா செல்வத்துக்கு காலை 6 மணிக்கெல்லாம் போன் செய்துவிடுவாராம். ‘நானும் பன்னீரும் இப்போதான் வாக்கிங் போயிட்டு இருக்கோம். உங்க வேலை சம்பந்தமா பேசிட்டேன்.

முடிச்சிடலாம்னு சொல்லிட்டாரு..’ என்றுதான் ஆரம்பிப்பாராம் நாகராஜ். இப்படிச் சொல்லியே 17 லட்சம் ரூபாயை வாங்கிவிட்டாராம். பாப்பாவின் கணவர் நாகராஜ் டிராஃபிக் போலீஸாக இருக்கிறாராம். தன்னிடம் இருந்த நகை, வீடு எல்லாவற்றையும் அடகு வைத்துதான் எப்படியாவது பேராசிரியர் வேலை வாங்கிவிட வேண்டும் என பணத்தைக் கொடுத்திருக்கிறார் பாப்பா. பணம், வேலை இரண்டுமே கிடைக்காது என்று தெரிந்தபிறகுதான் புகார் கொடுத்திருக்கிறார் பாப்பா. பன்னீருக்கும் நாகராஜுக்கும் என்ன சம்பந்தம் என்பதை அவர்தான் சொல்லவேண்டும் என்று சொல்கிறார்கள்.

ஏற்கனவே, எம்எல்ஏ சீட் வாங்கித் தருவதாக சிலரிடம் பணம் வாங்கினார் என்று பன்னீர்மீது புகார் வந்துதான் கோபமானார் ஜெயலலிதா. ஐவர் அணியில் இருந்து அவரைத் தூக்கினார். அந்தக் கோபம் இன்னும் குறையாமல்தான் தற்போது, பன்னீரின் மகன் ராஜேந்திரநாத் குமார் வகித்துவந்த பதவியும் பறிக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் பன்னீர்செல்வத்தின் பெயரைச் சொல்லி ஒருவர் ஏமாற்றினார் என்ற புகார், அதிமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது. பன்னீர் பெயரைச் சொல்லி ஏமாற்றியதாக ஒருவர் புகார் கொடுக்க வந்திருக்கிறார் என்ற தகவல் கமிஷனர் ராஜேந்திரனுக்குச் சொல்லப்பட்டதாம். அவர் யாரிடமோ பேசியதாகச் சொல்கிறார்கள். அதன்பிறகு, அங்கிருந்து வந்த உத்தரவுக்குப் பிறகே புகாரை வாங்கிக் கொண்டார்களாம்” என்ற ஸ்டேட்டஸ் போஸ்ட் ஆனதும், வாட்ஸ் அப் லைக் போட்டுவிட்டு ஆஃப் லைனில் போனது.

புதன், 15 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon