மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 27 மே 2020

தண்ணீர்- ஒரு அடர்த்தியான ஆய்வு!

தண்ணீர்- ஒரு அடர்த்தியான ஆய்வு!

நீரின்றி அமையாது உலகு, நீராலானது உலகு என்று தண்ணீரின் அருமையை சொல்லிக்கொண்டே போகலாம். இந்த பூமியின் ஆதாரமாக இருப்பது தண்ணீர்தான். பூமியில் தண்ணீர் இருப்பதாலேயே இந்தக் கிரகம் உயிரினங்கள் வாழும் உயிர்க்கோளமாக இருக்கிறது. இல்லையேல் சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்களைப்போல வெறுமையாகவே இருந்திருக்கும். தண்ணீரின் பயன்பாட்டை மற்ற உயிரினங்களைவிட மனிதனே மிகவும் அதிகளவில் அறிந்தவன். ஆனால், ஒரு அரை நூற்றாண்டாக மனிதன் இயற்கை வளங்களை அளவுக்கதிகமாக சுரண்டியதால் நாம் நீராதாரத்தை இழந்துவந்துகொண்டிருக்கிறோம். அதனால், உலகின் பல பகுதிகளில் குடிநீருக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஒரு பெரும் குடிநீர் பஞ்சமே நிலவுகிறது. இந்த நிலையிலாவது தமிழகத்தில் நாம் பெற்றுள்ள நீராதாரங்களை எந்த அளவுக்கு பயன்படுத்துகிறோம்? மேலும், நாம் எந்தளவுக்கு சிக்கனமாக அனைவருக்கும் சீராக சமமாக குடிநீர் கிடைக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் குடிநீர் விநியோகம் குறித்து நாம் எப்படி திட்டமிட வேண்டும் என்பது போன்ற விஷயங்களுக்கு தற்போதைய குடிநீர் விநியோகம் தொடர்பான விவரங்களை அறிந்துகொள்வது அவசியம்.

தமிழகத்தில் உள்ள நீராதாரங்களில் இருந்து பல்வேறு வகைகளில் மக்கள் தங்களுக்குத் தேவையான குடிநீரைப் பெறுகின்றனர். தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும், குழாய்மூலமாக விநியோகம் செய்யப்படும் குடிநீரையும், கைபம்பு மூலமாக நிலத்தடி நீரும், கிணறுகள் மூலமாகவும் குடிநீர் வசதி பெற்று வருகின்றனர். இந்த குடிநீர் வசதி மற்றும் குடிநீர் விநியோகம் செய்வதில் பயனடையும் மக்களின் சதவிகிதத்தில் கடந்த பத்தாண்டுகளில் பெரிய மாற்றத்தைச் சந்தித்துள்ளது.

இந்தியாவில் உள்ள மொத்த விடுகளில் 2001ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, 36.7 சதவிகித வீடுகள் குழாய்மூலமான குடிநீர் வசதியும், கைபம்பு மற்று ஆழ்துளைக் கிணறுமூலம் 41.2 சதவிகித வீடுகளும், கிணறுமூலமாக 18.2 சதவிகித வீடுகளும் குடிநீர் வசதி பெற்றுள்ளனர்.

2011ஆம் ஆண்டு குழாய்மூலமாக 43.5 சதவிகித வீடுகளும், கைபம்பு மற்றும் ஆழ்துளைக் கிணறுமூலம் 42.0 சதவிகித வீடுகளும், கிணறுமூலமாக 11 சதவிகித வீடுகளும் குடிநீர் வசதி பெற்றுள்ளனர்.

இந்த குடிநீர் விநியோகமுறை தமிழக அளவில், 2001ஆம் ஆண்டு மொத்தம் 62.5 சதவிகித வீடுகள் குழாய்மூலமும், 2011ஆம் ஆண்டு 79.8 சதவிவிகித வீடுகளும் குடிநீர் வசதி பெற்றுள்ளனர். கைபம்பு மற்றும் ஆழ்துளைக் கிணறுமூலம் 2001ஆம் ஆண்டு 23.0 சதவிகித வீடுகளும் 2011ஆம் ஆண்டு 12.8 சதவிகித வீடுகளும் குடிநீர் வசதி பெற்றுள்ளனர். கிணறுமூலம் 10.6 சதவிகித வீடுகள் குடிநீர் வசதி பெற்றுள்ளனர். 2011ஆம் ஆண்டு 5.1 சதவிகித வீடுகளும் குடிநீர் வசதி பெற்றுள்ளனர்.

இந்திய அளவிலும், தமிழக அளவிலும் மக்களுக்கு குடிநீர் விநியோகம் மற்றும் குடிநீர் வசதி பெறுதலில் பொதுவாக, கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கும், நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளுக்கும் இடையே சதவிகித அளவில் பெரிய வேறுபாடு காணப்படுகிறது. இதையே இந்தியாவின் சதவிகிதத்தோடு தமிழகத்தை ஒப்பிடுகையில் மிகப்பெரிய முன்னேற்றம் காணப்படுகிறது.

2001ஆம் ஆண்டு தமிழக கிராமப்புறங்களில் குழாய்மூலம் குடிநீர் வசதிபெற்ற வீடுகளின் சதவிகிதம் தமிழக அளவில் 60.5 சதவிகிதமாகவும், இந்திய அளவில் 24.3 சதவிகிதமாக இருந்திருக்கிறது. இதுவே, 2011ஆம் ஆண்டு தமிழக அளவில் 79.3 சதவிகித வீடுகளும், இந்திய அளவில் 30.8 சதவிகித வீடுகளும் குடிநீர் விநியோக வசதி பெற்றுள்ளனர்.

கைபம்பு மற்றும் ஆழ்துளைக் கிணறுமூலம் 2001ஆம் ஆண்டு தமிழக அளவில் 24.8 சதவிகித வீடுகளும் இந்திய அளவில் 48.9 சதவிகித வீடுகளும் குடிநீர் வசதி பெற்றுள்ளனர். இதுவே, 2011ஆம் ஆண்டில் தமிழக அளவில் 12.9 சதவிகித வீடுகளும், இந்திய அளவில் 51.9 சதவிகித வீடுகளும் குடிநீர் வசதி பெற்றுள்ளனர்.

அதேபோல, கிணறுமூலம் குடிநீர் வசதிபெற்ற வீடுகள் 2001ஆம் ஆண்டு தமிழக அளவில் 11.3 சதவிகிதமாகவும் இந்திய அளவில் 22.2 சதவிகித வீடுகளும் முக்கிய குடிநீர் வசதி பெற்றுள்ளனர்.

குழாய்மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் நகர்ப்புறங்களில் இந்திய அளவில் 2001ஆம் ஆண்டு 68.7 சதவிகித வீடுகளும், தமிழக அளவில் 65.4 சதவிகித வீடுகளும் குடிநீர் வசதி பெற்றுள்ளனர். இதுவே 2011ஆம் ஆண்டு இந்திய அளவில் நகர்ப்புறங்களில் 70.6 சதவிகித வீடுகளும், தமிழக அளவில் 80.3 சதவிகித வீடுகளும் குழாய்மூலம் குடிநீர் வசதி பெற்றுள்ளனர்.

கைபம்பு மற்றும் ஆழ்துளைக் கிணறுமூலம், 2001ஆம் ஆண்டு இந்திய அளவில் 21.4 சதவிகித வீடுகளும், தமிழக அளவில் 20.5 சதவிகித வீடுகளும் குடிநீர் வசதி பெற்றுள்ளனர். இது, 2011ஆம் ஆண்டு இந்திய அளவில் 20.8 சதவிகித வீடுகளாகவும், தமிழக அளவில் 12.6 சதவிகித வீடுகளாகவும் இருந்துள்ளது.

2001ஆம் ஆண்டு இந்திய அளவில் கிணறுமூலம் குடிநீர் வசதி பெற்றவர்கள் 7.7 சதவிகித வீடுகளாகவும், தமிழக அளவில் 9.6 சதவிகித வீடுகளாகவும் இருந்தது. இது, 2011ஆம் ஆண்டு இந்திய அளவில் 6.2 சதவிகித வீடுகளாகவும், தமிழக அளவில் 4.3 சதவிகித வீடுகள் கிணறுமூலம் குடிநீர் வசதி பெற்றுவந்தனர்.

இப்படி இந்தியா முழுவதுடன் தமிழகத்தை ஒப்பிடுகையில் குடிநீர் விநியோகத்தில் சிறப்பாகவே செயல்பட்டுள்ளதை அறியமுடிகிறது.

தமிழகத்தில் குழாய்மூலம் குடிநீர் பெறும் வீடுகளின் சதவிகிதத்தை கோடிகளில் கணக்கிடுகின்றனர். அதாவது, தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு கணக்குப்படி 1.47 கோடி வீடுகளில் 80 சதவிகிதம் அளவு குழாய்மூலம் குடிநீர் பெற்றுள்ளனர். சுத்திகரிக்கப்பட்ட நீர் ஆதாரம்மூலம் 1.03 கோடி வீடுகளில் 56 சதவிகிதம் அளவு குடிநீர் வசதி பெற்றுள்ளனர். சுத்திகரிக்கப்படாத நீர் ஆதாரம் மூலம் 0.44 கோடி வீடுகளில் 24 சதவிகிதம் அளவு குடிநீர் வசதி பெற்றுள்ளனர்.

கிணற்று நீர்ஆதாரம் மூலம் குடிநீர் வசதிபெறும் 0.09 கோடி வீடுகளில் 5 சதவிகித அளவு குடிநீர் வசதி பெற்றுள்ளனர். இதில், மூடிய கிணறு 0.02 கோடி வீடுகளில் 1 சதவிகித அளவும், மூடாத கிணறுகளில் 0.07 கோடி வீடுகளில் 4 சதவிகித அளவும் குடிநீர் வசதி பெற்றுள்ளனர்.

அடிபம்பு மூலம் 0.08 கோடி வீடுகளில் 5 சதவிகித அளவு குடிநீர் வசதி பெற்றுள்ளனர். ஆழ்துளைக் கிணறுமூலம் 0.15 கோடி வீடுகளில் 8 சதவிகித அளவு குடிநீர் வசதி பெற்றுள்ளனர். இதர நீர் ஆதாரங்களின்மூலம் 0.04 கோடி வீடுகளில் 2 சதவிகித அளவு குடிநீர் வசதி பெற்றுள்ளனர்.

தமிழகம் குழாய்மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. தமிழகத்தில் குழாய்மூலமாக குடிநீர் விநியோகம் பெறுவதில் கோயம்புத்தூர் 88.0 சதவிகிதம், சென்னை 79.4 சதவிகிதம், தேனி 76.3 சதவிகிதம் என முதல் மூன்று இடங்களில் உள்ளன.

ஒட்டுமொத்தமாக, இந்திய அளவில் குழாய்மூலமாக குடிநீர் விநியோகம் 33.6 சதவிகிதமாகவும் தமிழக அளவில் 57.0 சதவிகிதமாகவும் உள்ளது.

இந்த புள்ளிவிவரங்களை வைத்துப் பார்க்கும்போது தமிழகம் குடிநீர் விநியோகத்தில் மிகச் சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. இது வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால், குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் ஆறுகள், குளங்கள், ஏரிகளை ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாத்து அவைகளை பராமரிப்பதில்தான் நமது குடிநீர்த் திட்டங்களின் வெற்றி இருக்கிறது. ஆனால், அரசு இதைச் செய்கிறதா என்பதே நம்முன் இருக்கும் பெரிய கேள்வி.

புதன், 15 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon