மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 24 பிப் 2020

பொறியியல் படிப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் சரிவு!

பொறியியல் படிப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் சரிவு!

20 ஆண்டுகளுக்குமுன்பு, பொறியியல் படிப்பது என்றால் மிகப்பெரிய விஷயம். பல பெற்றோர்கள், “என் பிள்ளை என்ஜினியரிங் படிக்கிறான்” என்று பெருமை பேசுவார்கள். ஆனால், இந்த பொறியியல் கல்லூரிகள் கடந்த 20 ஆண்டுகளில், ஒரு மழைநாளுக்குப்பிறகு பூத்த காளான்களைப் போல தோன்றின. இந்த கல்லூரிகளில் பொறியியல் படிக்க ஆயிரக்கணக்கில் மாணவர்கள் சேர்ந்தார்கள். ஆனால், படித்த அனைவருக்கும் தகுதியான வேலையோ, சம்பளமோ கிடைக்கவில்லை. இதையடுத்துதான் தற்போது, மாணவர்கள் கலை அறிவியல் படிப்புகளை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகள் கடந்த 2015ஆம் ஆண்டில் ஏப்ரல், நவம்பர் மாதங்களில் நடைபெற்ற தேர்வுகளில் பெற்ற மாணவர் தேர்ச்சி விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் 2015 ஏப்ரல்-மே பருவத் தேர்வுகளில், 3 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்திலே மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

522 கல்லூரிகள் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில், கடைசி இடத்தில் விழுப்புரம் வேதாந்த தொழில்நுட்பக் கல்லூரி இடம்பெற்றுள்ளது. இங்கு தேர்வெழுதிய 214 பேரில் 6 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 2.89 சதவிகிதமாகும். இதற்கு அடுத்ததாக கோவை விஷ்ணு லட்சுமி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் 60 பேர் தேர்வெழுதி 3 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 5 சதவிகிதமாகும். கன்னியாகுமரி நாராயணகுரு சித்தார்த்தா பொறியியல் கல்லூரியில் தேர்வெழுதிய 64 பேரில் 5 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 7.81 சதவிகிதமாகும்.

இதேபோல, 21 பொறியியல் கல்லூரிகள் 20 சதவிகிதத்துக்கும் குறைவான தேர்ச்சி விகிதத்தையும், 33 கல்லூரிகள் 25 சதவிகிதத்துக்கும் குறைவான தேர்ச்சி விகிதத்தையும், 44 கல்லூரிகள் 30 சதவிகிதத்துக்கும் குறைவான தேர்ச்சி விகிதத்தையும் பெற்றுள்ளன. 50 சதவிகிதத்துக்கும் குறைவான தேர்ச்சி விகிதத்தை 191 கல்லூரிகள் பெற்றுள்ளன.

இந்த ஏப்ரல்-மே பருவத்தேர்வு தேர்ச்சிவிகிதப் பட்டியலில் கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பம் மற்றும் அப்லைடு ஆராய்ச்சி கல்வி நிறுவனம் 97.32 தேர்ச்சி விகிதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக 94.45 சதவிகித தேர்ச்சியுடன் நாமக்கல் கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியும், மூன்றாமிடத்தில் 93.48 தேர்ச்சி விகிதத்துடன் காரைக்குடி சி.எஸ்.ஐ.ஆர். கல்வி நிறுவனமும் இடம்பெற்றுள்ளன. ஆனால், சென்னை வட்டாரத்தில் அமைந்துள்ள பொறியியல் கல்லூரிகளில் 85 சதவிகிதத்துக்கும் குறைவாகவே தேர்ச்சிபெற்றுள்ளன.

இந்த தேர்ச்சி சதவிகிதத்தைப் பார்க்கும்போது, பொறியியல் படிப்பு கடினமாகிவிட்டதா? அல்லது பொறியியல் படிக்கும் மாணவர்கள் திறன் குறைந்துவிட்டதா? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

புதன், 15 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon