மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

பள்ளிக்கு நேரமாச்சு - செல்லக்குட்டி

பள்ளிக்கு நேரமாச்சு - செல்லக்குட்டி

"சீக்கிரம்ப்பா... சீக்கிரம்ப்பா..." என்று அவசரப்படுத்தினாள் ஸ்வேதா. வழக்கமாக, ஸ்வேதா பள்ளிக்கு வேனில் சென்றுவிடுவாள். இன்று ஹோம்வொர்க் செய்ய நேரமாகிவிட்டதால், குளிக்கவும் சாப்பிடவும் ரொம்ப தாமதமானதால் வேன் போய்விட்டது. அதனால் அப்பாவை ஸ்கூட்டியில் விடச்சொல்லி அவசரப்படுத்தினாள்.

"இரு ஸ்வேதா, இரண்டே நிமிஷத்துல வந்துடுறேன்" என, ஸ்வேதாவின் அப்பா ஷூவை மாட்டிக்கொண்டே சொன்னார். அதற்குள் பொறுக்கமுடியாமல் ஸ்வேதா ஸ்கூட்டியை அவளே தள்ளிக்கொண்டு தெருவுக்கு வந்துவிட்டாள். அப்பா ஓடிவந்து,

"விட்டா, நீயே ஓட்டிட்டு போய்டுவ போலிருக்கே!" என்றார்.

"நா இப்ப சிக்ஸ்த் படிக்கிறேன். நைன்த் படிக்கும்போது நானே ஓட்டுவேனே" என்றாள் ஸ்வேதா.

"ம்... அதெல்லாம் நீ காலேஜ்க்கு போனபிறகுதான். சரி, சீக்கிரம் உட்காரு" எனச் சொல்லியவாறே ஹெல்மெட் மாட்டிக்கொண்டு, வண்டியை ஸ்டார்ட் செய்தார். ஸ்வேதா பாய்ந்து பின்னாடி உட்கார்ந்துகொண்டு அப்பாவை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள்.

அவர்களின் தெருவைத் தாண்டி, தார்ச்சாலையில் மெதுவாக ஓட்டிக்கொண்டிருந்தார் அப்பா.

"இன்னும் கொஞ்சம் ஃபாஸ்ட்டா போங்கப்பா" என்றாள் ஸ்வேதா.

"ஸ்கூல் பிரேயருக்கு இன்னும் நேரமிருக்கு ஸ்வேதா, அவரசப்படாதே" என்று சொல்லிக்கொண்டே அண்ணாசாலை சிக்னலில் வண்டியை இடதுபக்கம் திருப்பினார். அந்தச் சாலையில் தர்ப்பூசணி, இளநீர் கடைகள் இருந்தன. அதைப் பார்த்ததும்,

"அப்பா, இன்னைக்கு சாயந்திரம் தர்ப்பூசணி வாங்கித் தாரீங்களா?" என்ற ஸ்வேதாவிடம்

"தர்ப்பூசணியைப் பார்த்ததும் சாப்பிடற ஆசை வந்துடுச்சா? " என்றார் அப்பா. ஆமாம் என்று தலையாட்டினாள் ஸ்வேதா.

"நீ ஸ்கூல்விட்டு வரும்போது தர்ப்பூசணி ரெடியா இருக்கும்" என்ற அப்பாவுக்கு தேங்க்ஸ் சொன்னாள் ஸ்வேதா. பன்னீர்புஷ்ப மரத்தின் அருகே செல்லும்போது ஸ்கூட்டி நின்றுவிட்டது.

"என்னாச்சுப்பா" என்ற ஸ்வேதாவிடம், "இரு... என்னன்னு பார்க்கலாம்" என்றதும் ஸ்வேதா வண்டியைவிட்டு இறங்கிக்கொண்டாள். அப்பா ஸ்டார்ட் செய்ய முயற்சிக்க அது புறப்படுவதாக இல்லை. எல்லாவற்றையும் சோதித்தவர் இறுதியில் பெட்ரோல் இருக்கிறதா எனப் பார்த்தார்.

"ஸ்வேதா, பெட்ரோல் இல்லை, அதான் நின்னுடுச்சு" என்றார்.

"என்னப்பா, இப்படி ஆயிடுச்சு. நான் எப்படி ஸ்கூலுக்குப் போறது?" என்று லேசாக அழுவதுபோலக் கேட்டாள் ஸ்வேதா.

"ஒண்ணும் கவலைப்படாதே, பக்கத்தில்தான் பெட்ரோல் பங்க் இருக்கு, நான் போய் வாங்கிட்டு வந்துடுறேன்" என்றார்.

"தனியா இருக்க பயமா இருக்கு, நானும் வாரேன்" என ஸ்வேதாவும் கூடவே வந்தாள். அப்பா வண்டியைப் பூட்டிவிட்டு ஸ்வேதாவுடன் பெட்ரோல் பங்க்கை நோக்கி நடந்தார்.

அப்பா சொன்னதுபோல, அருகில் இல்லை பெட்ரோல் பங்க். ரொம்பதூரம். ஒருவழியாக பெட்ரோல் பங்க் வந்ததும், பெட்ரோல் ஒரு லிட்டரை பாட்டிலில் கேட்டார். ஆனால், அங்கு வேலை செய்பவர்களோ தங்களிடம் பாட்டில் ஏதும் இல்லையே என்று சொல்லிவிட்டனர். என்ன செய்து என யோசித்தவரிடம், ஸ்வேதா:

"என்னுடைய வாட்டர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கலாம்ப்பா" என்றதும், "சரி கொடு" என வாங்கினார். தண்ணீர் பாட்டிலில் இருந்த நீரை கீழே கொட்டப்போன அப்பாவைத் தடுத்த ஸ்வேதா, அந்தப் பாட்டிலை வாங்கிக் கொண்டாள். பெட்ரோல் பங்க்கில் தண்ணீர் பானை வைத்திருந்தார்கள். அதன் மூடியைத் திறந்து அதில் தன்னுடைய வாட்டர் பாட்டில் நீரை ஊற்றிவிட்டு பாட்டிலைத் தந்தாள்.

ஸ்வேதாவின் தலையை தடவிக் கொடுத்தார். பிறகு, பெட்ரோல் வாங்கிக் கொண்டுபோகும் வழியில் ஸ்வேதாவுக்கு பிடித்த தர்ப்பூசணியும் வாங்கித் தந்தார்.

புதன், 15 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon