மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 31 மா 2020

தெலங்கானாவில் போலியோ வைரஸ்!

தெலங்கானாவில் போலியோ வைரஸ்!

இந்தியாவில் இளம்பிள்ளை வாத நோய் கட்டுக்குள் இருக்கிறது. தங்கள் குழந்தைகள் என்ன காரணத்திற்காக நடக்கமுடியாமல் முடங்கிப் போகிறார்கள் என்பதுகூடத் தெரியாமல் நம் முன்னோர்கள் இருந்தார்கள். இளம்பிள்ளை வாதம் என்னும் நோய் போலியோ என்னும் நோய்த் தொற்றால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்தவர்கள் போலியோ சொட்டு மருந்தை ஒவ்வொரு குழந்தைக்கும் 5 வயதுவரை அடிப்படை என்றார்கள். அந்தவகையில், இந்தியா இளம்பிள்ளை வாத நோய் ஒழிப்பில் முன்னேறியிருக்கிறது. போலியோவை முழுக்க கட்டுப்படுத்திய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்து அதை உலக சுகாதார அமைப்பும் ஒத்துக்கொண்ட நிலையில், தெலங்கனாவில் போலியோ வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், இப்போது புதிதாக அமைந்த தெலங்கானா மாநிலத்தில் போலியோ வைரஸ் கிருமிகள் கண்டறியப்பட்டுள்ளன. தெலங்கானாவின் தலைநகரான ஐதராபாத்தில் உள்ள அம்பர்பேட்டை கால்வாய் நீரை பரிசோதித்தபோது போலியோ வைரஸ் அதில் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. இதனால் ஐதராபாத்துக்கும், ரங்கரெட்டி மாவட்டத்திலும் உள்ள 3 லட்சம் குழந்தைகளுக்கு 2 லட்சம் போலியோ தடுப்பூசி மருந்துகளை உலக சுகாதார நிறுவனத்திடம் கேட்டிருக்கிறது தெலங்கனா அரசு.

போலியோ வைரஸ் ஒழிக்கப்பட்ட வைரஸ் என்று கருதப்பட்டுவந்த நிலையில், இம்மாதிரி வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அரசு நிர்வாகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதைத் தடுக்க உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ள மாவட்ட நிர்வாகங்கள் வருகிற ஜுன் 20 முதல் 26 வரை போலியோ சொட்டுமருந்து முகாமை நடத்த தீர்மானித்துள்ளது. அந்தப் பகுதிகளில் தீவிரமான பிரச்சாரங்களை முன்னெடுக்கும் அரசு நிர்வாகம் 6 மாதம் முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உடனடியாக போலியோ சொட்டுமருந்து கொடுக்கப்பட வேண்டும் என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. புதிதாகப் பிறந்த தெலங்கானா மாநிலம் வளர்ச்சிப்பாதையில் இன்னும் அடியெடுத்து வைக்கவில்லை. இன்னும் தவழ்ந்து கொண்டிருக்கும் தெலங்கானா குழந்தையை போலியோ வைரஸ்சிடம் இருந்து காப்பாற்றியாக வேண்டிய கடமை அனைவருக்குமே உள்ளது.

புதன், 15 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon