மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 21 பிப் 2020

இன்று: உலக காற்று தினம்

இன்று: உலக காற்று தினம்

“மூச்சுவிடுகிற எல்லா உயிரினங்கள்மீதும் கருணை கொள்” என்கிறார் புத்தர். இன்று காற்றைக் கொண்டாடும் தினம். நாம் உயிர்வாழ்வதன் அடிப்படையே காற்றுதான். ஆக்சிஜன் இல்லாமல் மனிதன் உயிர்வாழ முடியுமா? உலகில் உயிர்வாழ இன்றியமையாதது காற்றுதான். ஆறறிவுள்ள மனிதன் தொடங்கி தாவரங்கள், ஜீவராசிகள் வரை ஆக்சிஜன்தான் உயிர்ச்சூழலின் உன்னதம். நாம் உயிர் வாழ்வதற்கு உணவு, நீர், காற்று மூன்றும் இன்றியமையாததாகும். ஆனால், உணவின்றி சில நாட்களும், நீரின்றி சில நாட்களும் உயிர் வாழலாம். ஆனால், காற்று இல்லாமல் சில நிமிடங்களுக்குமேல் உயிர் வாழ முடியாது. அதுதான் காற்றின் ரகசியம்.

தண்ணீரும் காற்றும் விற்பனைப் பண்டமல்ல. காரணம், அது தனிச் சொத்து அல்ல. அது இயற்கையின் சொத்து. ஆனால், நிலத்தடி நீரை பாழக்கி தண்ணீர் பற்றாக்குறையை உருவாக்கியவர்கள், சுகாதாரமான குடிநீர் என்று தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்கிறார்கள். நாமும் வேறு வழியின்றி அது, ஆரோக்கியமான குடிநீர் என்று வாங்கிக் குடிக்கிறோம். தண்ணீர்தான் தனியார் மயமாகிவிட்டது. காற்று! இதோ காற்று மண்டலமும் மாசடைந்துவிட்டது. பிளாஸ்டிக் குப்பைகளை எரித்தல், செங்கல் சூளைகள், சுண்ணாம்புக் காளவாசல்கள், இரசாயன தொழிற்சாலைகள், புகையை ஏற்படுத்தும் காட்டுத்தீ போன்றவை உருவாக்கும் புகையால் காற்று மண்டலம் மாசடைந்துள்ளது. கண் எரிச்சல், தலைவலி, தொண்டைக்கட்டு, காய்ச்சல் மற்றும் புற்றுநோய் போன்ற பல நோய்களை காற்று மாசுபாடு உண்டாக்குகிறது. இந்தியாவில் அதிக இறப்பை ஏற்படுத்தும் ஐந்தாவது காரணம் காற்று மாசுபாடாகும்.

இன்னொருபக்கம், பன்னாட்டு நிறுவனங்களின் தொழில் யுக்தியும் அரசுகளின் ஆயுதப் போட்டியும் அணுஆயுதச் சோதனையும்கூட காற்று மண்டலத்தை நாசமாக்கி நஞ்சாக்கிவிட்டது. சென்னையில் வசிக்கும் பெரும்பான்மை மக்களுக்கு இளைப்பு நோய் தொற்று உள்ளது. அதாவது. வீசிங் என்படும் இந்த மூச்சிறைத்தல் குறைபாட்டுக்குக் காரணம், சென்னையில் காற்று மாசுபட்டிருப்பதே. இரு சக்கர வாகன ஓட்டிகள்தான் இந்த இளைப்பு நோய்க்கு உள்ளாகிறார்கள்.

ஆக, மொத்தம் காற்றும் மாசடைந்துவிட்டது. மரங்களை வெட்டி காட்டையழித்து காற்றை நாசமாக்கிவிட்டார்கள். எப்படி தண்ணீரை நாசமாக்கிவிட்டு சுத்தமான குடிநீர் என்று தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்றார்களோ அப்படி, இப்போது கற்றை பாட்டிலில் அடைத்து விற்க கடை விரித்துவிட்டார்கள் இந்தியாவிலும். சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் காற்று மாசுபாடு காரணமாக, அண்டை நாடுகளில் இருந்து பைகள், கேன்களில் அடைக்கப்பட்ட சுத்தமான காற்றை மக்கள் விலைகொடுத்து வாங்கத் தொடங்கிவிட்டனர்.

இதுபோன்று டெல்லி, சென்னை போன்ற நகரங்களிலும் பிளாஸ்டிக் பைகள், கேன்களில் சுத்தமான காற்று அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இவ்வாறு விற்கப்படும் காற்று லிட்டர் அளவுகோல்களில் அடைக்கப்பட்டு 1,500 ரூபாய் தொடங்கி 2,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இப்போதோ ஆக்சிஜன் பார் என்று தொடங்கியிருக்கும் பார்களுக்குச் சென்று சுத்தமான ஆக்சிஜனை சுவாசித்துவரத் தொடங்கிவிட்டார்கள் சிலர். இனி தண்ணீர், பைப்மூலம் வீட்டுக்குள் வருவதுபோல ஆக்சிஜன் வீட்டுக்குள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

புதன், 15 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon