மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

மர்ஃபியின் விதி - திதி (2015)

மர்ஃபியின் விதி - திதி (2015)

எதையும் மிகையாகச் சொல்லாமல் நடைமுறை யதார்த்தம் சார்ந்து மட்டும் ஒரு திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தாலே, அதுகுறித்து நல்ல அபிப்ராயம் பார்வையாளனின் மனதில் தோன்றிவிடுவது ஆரோக்கியமானதல்ல. 'யதார்த்தமா இருக்கு' என்பது, தர மதிப்பீட்டின் அளவுகோல்களில் வால் பகுதியில் இடம்பெறக்கூடிய கச்சாப்பொருள் மட்டுமே. இந்திய திரைப்படங்களைப் பொறுத்தமட்டில் ஒரு பார்வையாளன் தனது அனுபவ அறிவின் எல்லைக்குட்பட்டு பெரும் மாற்று அனுபவத்துக்கும் மாற்று சினிமாவுக்குமான வேறுபாடுகளை புரிந்துகொள்வது அவசியமாகிறது.

சிறந்த கன்னடமொழிப் படத்துக்கான தேசிய விருதை சென்ற வருடம் வென்ற 'திதி', இந்த மே மாதம்தான் பரவலாக திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பெங்களூருவில் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் ராம் ரெட்டி, நடிப்புபற்றி பரிச்சயம் ஏதுமற்ற கதை நிகழும் நிலத்து அசலான முகங்களையே தேர்வு செய்ததோடல்லாமல் அவர்களிடமிருந்து அபாரமான நடிப்பாற்றலையும் வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

எளிமையான கதை. 'செஞ்சுரி' கவுடா தனது நூற்றியோராவது வயதில் திடீரென இறந்துவிடுகிறார். பதினோரு நாட்கள் கழித்து திதி அளிக்க வேண்டும். இந்த பதினோரு நாட்களுக்குள் கவுடா குடும்பத்தின் அடுத்த தலைமுறை ஆண்களின் வெவ்வேறு மனோபாவங்களும் அதன் விளைவான அவர்தம் ஆசைகளும் முரண்களும் எதைநோக்கி நகர்ந்து முடிவுறுகின்றன என்பதை நெருக்கமாகப் பின்தொடர முயன்றிருக்கிறார்கள். விட்டேத்தியான கடப்பாவின் பாத்திர வார்ப்பு ரசிக்கத்தக்கதாக இருக்கிறது. உணர்ச்சியற்ற குரலில் தனது மனைவிக்கும் தந்தைக்கும் இடையேயான கள்ள உறவை விவரித்துவிட்டு, படத்தின் மைய இழையான 'எது நடந்தாலும் நம்மால தடுக்க முடியாது' என்று தானுணர்ந்த மெய்யியலை சொல்லிக் கடக்கிறார். Anything can go wrong, will go wrong என்பதே படத்தின் குவிமையம்.

நமது நாட்டின் வட்டார மொழிப் படங்கள் பெரும்பாலும் 16:9 விகிதத்தில் (Aspect Ratio) படமாக்கப்படுபவை. தமிழில் 'குணா'வும், 'இருவ'ரும் இந்த வழமையை மீறி 4:3 விகிதத்தில் எடுக்கப்பட்ட இரண்டே படங்கள். திதி 5:3 விகிதத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இதன் நகராத காட்சிச் சட்டகங்களுக்குள் கதாபத்திரங்களை நடமாடச் செய்யும் உத்தி எரிச்சலூட்டக்கூடியதாக இருந்தது. அது பார்வையாளர்களிடையே பரிமாற்ற யத்தனிக்கும் தொனி படம் முழுக்கவும் வியாபித்து இல்லாது ஆங்காங்கே துருத்திக் கொண்டிருக்கிறது. மென்சோக உணர்ச்சிகளைத் தோற்றுவிக்கும் எண்ணமேதும் இயக்குநருக்கு இல்லை எனும் பட்சத்தில் அலுப்பூட்டும் காமெரா, ஒரு நகைச்சுவைப் படத்துக்கான மனநிலையை மட்டுப்படுத்தி சிதைக்கிறது. இதன் எதிர்மறை விளைவாக, ஒரே கிராமத்தின் வெவ்வேறு நிலப்பகுதிகளில், வெவ்வேறு மனிதர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள் என்றபோதிலும் Claustrophobic feel ஏற்பட்டுவிடுகிறது.

அபியின் காதல் பகுதிகளில் நம்பகத்தன்மை குறைவுதான். சந்தித்த பத்து நாட்களுக்குள் தெளிவும் துணிவும்கொண்ட பதின்ம வயதுப் பெண்ணிடம் உறவு கொள்வதெல்லாம் சாத்தியமே இல்லை. 'இங்க இந்தக் கதையில் இப்படி நடக்கிறது'

என்பதை வாதமாகக் கொண்டாலும், அந்த உறவு நிகழ்வதற்கான சூழலும் காரணங்களும் Convincing ஆகச் சொல்லப்படவில்லை. மகத்தான எளிமையின் வலிமையை உணர்ந்து கருவாகக்கொண்ட படங்கள் எத்தனையோ உலக வரலாற்றில் உண்டு. 'திதி'யின் சிக்கல் அது எளிமையாக மட்டுமே இருக்கிறது என்பதுதான். ஈரான் தேசத்தின் முக்கால்வாசிப் படங்கள்போல. ஓர் இளங்கன்றின் தாவல் எனும்வகையில் ‘திதி’ ஒரு நல்ல முயற்சி. பாராட்டத்தக்கதும்கூட. ஆனால், உலகத் தரத்தை எல்லாம் எட்டவில்லை. அதற்கு ஓர் ஏவுகணை தேவைப்படும்.

- கோகுல் பிரசாத்

புதன், 15 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon