மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 27 மே 2020

ஆயிரம் அம்மா உணவகங்கள் : மேயர் சைதை துரைசாமி

ஆயிரம் அம்மா உணவகங்கள் : மேயர் சைதை துரைசாமி

ஏழைகளின் உணவகமாக இருக்கிறது அம்மா உணவகம் என்பதை பல்வேறு தரப்பினரும் சொல்லிவருகின்றனர். ‘பத்து ரூபாய் கொடுத்தால் நல்லா வயிறார பிசைஞ்சு சாப்பிடலாம்’ என எழுத்தாளர் பாமரனும்கூட நமது மின்னம்பலத்தில் ஒரு பேட்டியில் கருத்து தெரிவித்திருந்தார். அறிவுஜீவிகள் உள்ளிட்ட அனைவரின் ஆதரவையும் பெற்ற அம்மா உணவகம், அதிமுக-வின் வெற்றிக்கு ஓர் முக்கியக் காரணம்’ என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இப்படிப்பட்ட அம்மா உணவகங்களை சென்னையில் கூடுதலாக, 107 இடங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் அமைக்க மாநகராட்சி முடிவுசெய்துள்ளது.

‘அம்மா உணவகம் என்பது 2013ஆம் ஆண்டு மார்ச் 19 -ம் தேதி மலிவு உணவுத் திட்டம் என்ற பெயரில் அறிமுகமானது. இதை, சென்னையில் சாந்தோம் உட்பட 15 இடங்களில் முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார். பின், 2013 மார்ச் 23ம் தேதி அன்று, ‘மலிவு விலை சிற்றுண்டி உணவகம்’ என்ற பெயரை 'அம்மா உணவகம்' என்று மாற்றுவதற்கு சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்படி தொடங்கப்பட்ட அம்மா உணவகத்துக்கு பலதரப்பட்டவர்களிடமிருந்தும் எழுந்த ஆதரவால், தற்போது கூடுதலாக சென்னையில் அம்மா உணவகங்கள் திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது’ என்கின்றனர் மாநகராட்சி ஊழியர்கள். தொடர்ந்து பேசிய அவர்கள், ‘அம்மா உணவகம் தொடங்குவதற்காக பழைய கட்டடங்களை புதுப்பித்தல் மற்றும் புதிய கட்டடங்களை கட்டுவது ஆகிய பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

மொத்தம் 33 இடங்களில் கட்டுமானப் பணிகள் தற்போது நடந்துவருகின்றன. புதிய கட்டடங்கள், 47 இடங்களில் கட்டப்பட உள்ளன. அதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 27 இடங்களில் உணவகம் அமைக்க இடம் தேர்வுசெய்யப்பட்டு, கட்டுமானப் பணிக்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு, டிசம்பர் மாதத்துக்குள் ஏற்கனவே இயங்கிவந்த 300 உணவகங்களுடன் கூடுதலாக கட்டப்பட உள்ள 107 உணவகங்களைச் சேர்த்து மொத்தம் 407 அம்மா உணவகங்கள் சென்னையில் இயங்கும். இதற்குப்பின், இதை ஆயிரம் அம்மா உணவகங்களாக உயர்த்தவும் இலக்கு நிர்ணயித்து அதற்கான பணிகளை துரிதப்படுத்திவருகிறார் மேயர் சைதை துரைசாமி' என்றனர்.

புதன், 15 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon