மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 26 மே 2020

வழக்கறிஞர்கள் போராட்டம் தொடரும்!

வழக்கறிஞர்கள் போராட்டம் தொடரும்!

அண்மையில், சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர்கள் தொடர்ப்பான சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்தது. இந்த சட்டத் திருத்தப்படி வழக்கறிஞர்களாக பதிவு செய்துள்ளவர்கள், நீதிபதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பதோ அல்லது பேரணிகளை நடத்துவதோ அல்லது நீதிபதிகள் மீது ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளைக் கூறினாலோ அல்லது மது அருந்திவிட்டு நீதிமன்றத்துக்கு வந்தாலோ அவர்கள் மீது நீதிமன்றமே நேரடியாக நடவடிக்கை எடுத்து அந்த வழக்கறிஞர்களைத் தொழில் செய்ய தடை விதிக்கலாம். இந்த வழக்கறிஞர்கள் சட்டத் திருத்தம் தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் வழக்கறிஞர்கள் மீது நேரடியாக உயர்நீதிமன்றமே நடவடிக்கை எடுப்பது வழக்கறிஞர்களின் தொழில் உரிமையையும், பேச்சுரிமையையும் பறிப்பதாகும் என்று தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை திரும்பப் பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சென்னையில் பேரணி நடத்தினர். மேலும், ஈரோட்டில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் வழக்கறிஞர்கள் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறும்வரை வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாகத் அறிவித்தனர்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்களின் தொடர் போராட்டத்தாலும் கடும் எதிர்ப்பினாலும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் “வழக்கறிஞர்கள் சட்ட திருத்த விதிகளின் படி எந்த வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம். இது தொடர்பாக வழக்கறிஞர்கள் சங்க பிரதிநிதிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார். இந்த திருத்தம் குறித்து மறு ஆய்வு செய்ய தயாராக இருக்கிறோம்.” என்று கூறினார்.

சென்னை தலைமை நீதிபதி அறிவித்த பின்னரும் கூட தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தை தொடர்ந்துகொண்டிருக்கின்றனர். இது குறித்து மனித உரிமைகள் பாதுகாப்பு மைய வழக்கறிஞர் ராஜூவிடம் கேட்டபோது “தலைமை நீதிபதி இதை வெறுமனே வாய்மொழி மூலமாக இந்த சட்டத் திருத்தத்தின் படி நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று கூறியுள்ளார். இந்த சட்டத் திருத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று கூறுகிறார். இதை வரவேற்கிறோம். ஆனால், முதலில் வழக்கறிஞர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தை முதலில் ரத்து செய்ய வேண்டும். அந்த சட்டம் உயிர்ப்புடன் இருக்கும்போது எப்படி பேச்சுவார்த்தை நடத்த முடியும். தலைமை நீதிபதி இந்த அறிவிப்பை வாய்மொழி மூலாமாகக் கூறியுள்ளார். முதலில் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். இதனை தலைமை நீதிபதியோ, உயர் நீதிமன்ற பதிவாளரோ சட்டப் பூர்வமாக அறிவிக்க வேண்டும். அதன் பின்னரே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதுவரை வழக்கறிஞர்கள் போராட்டம் தொடரும். ” என்று கூறினார்.

புதன், 15 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon