மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

கனவுக்கும் வாழ்வுக்கும் இடையே வங்கதேசப் பாலியல் தொழிலாளர்கள்

கனவுக்கும் வாழ்வுக்கும் இடையே வங்கதேசப் பாலியல் தொழிலாளர்கள்

இஸ்லாமிய நாடுகளில் பெரும்பாலும் பாலியல் தொழில் கிடையாது. இது பெரும்பாலான நாடுகளில் தடை செய்யப்பட்ட தொழிலாகவே இருக்கிறது. ஆனால், நமது அண்டையில் இருக்கும் இஸ்லாமிய தேசமான வங்கதேசத்தில் பாலியல்தொழில் சட்டவிரோதம் கிடையாது.

ஆனால் அதேநேரம், அரசு பாலியல்தொழிலுக்கு சட்டபூர்வ அந்தஸ்தையும் கொடுக்கவில்லை. வங்கதேசம் எனப்படும் பங்களாதேஷ் நாட்டில், டன்கெயில் மாவட்டத்தில் `கண்டபாரா’ என்ற பகுதியில் பாலியல்தொழில் விடுதி உள்ளது. இந்த விடுதி, மிகப் பழமையானது மட்டுமல்ல; நாட்டிலேயே இரண்டாவது பெரிய பாலியல் விடுதியும் ஆகும்.

சுமார் 200 வருட பழமையான இந்த விடுதி, பல பெண்களின் துயரங்களைச் சுமந்திருக்கிறது. இந்த விடுதி 2014ம் ஆண்டு இடிக்கப்பட்டது. ஆனால், வாழ்க்கைச் சூழலால் பாலியல் தொழிலுக்குள் துரத்தப்பட்டு இங்கேயே பிறந்து வளர்ந்து மீண்டும் இதே தொழிலுக்குள் தள்ளப்பட்ட பெண்கள் இங்கிருந்து வேறு எங்கு நகர்ந்துசெல்வார்கள்?

இந்த நிலையில், பாலியல் தொழிலை அங்கீகரிக்கக்கோரும் அரசு தன்னார்வ நிறுவனம் ஒன்று இந்த விடுதியை மறுபடியும் திறப்பதற்கு உதவி செய்தது. இந்தத் தொழிலை சட்டவிரோதமான தொழிலாக நினைக்காமல், எல்லா தொழில்களைப்போலவும் இதுவும் ஒரு தொழில் என்று பாலியல் தொழில் புரிவோருக்கு சிலர் சாதகமாகப் பேசுகிறார்கள். அவர்களும் பெரும்பாலும் தன்னார்வ குழுக்களைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

இன்னொருபக்கம், பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள், அதிலிருந்து தங்களை எப்படி விடுவித்துக்கொள்வது என்பது தெரியாமல் தவிக்கிறார்கள். இந்தத் தொழிலை விட்டுவிட்டு அவர்களால் வேறு தொழிலுக்குச் செல்ல முடியவில்லை. அதற்கான வாய்ப்புகளும் இல்லை. வேறுவழியில்லாமல் இந்தத் தொழிலுக்கு வந்த பெண்களில் சிலர் ஒரு கட்டத்தில் பாலியல் தொழிலை தங்களின் உரிமை என்று நம்பத் தொடங்கிவிடுகிறார்கள்.

2014ம் ஆண்டின் இறுதியில், பங்களாதேச்ஷை சேர்ந்த தேசிய பெண் வழக்கறிஞர் அமைப்பு, `பாலியல் தொழில் சட்டப்படி குற்றம். உடனே அவர்களை இந்த இடத்தைவிட்டு பலவந்தமாக வெளியேற்ற வேண்டும்,’ என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதையொட்டி சில கட்டுப்பாடுகள் வர, இவர்களும் தங்களின் தொழில்முறைகளை மாற்றிக் கொண்டனர். இப்போது தங்களின் தொழிலை இவர்கள் சில விதிகளுக்கு உட்படுத்திச் செய்கின்றனர்.

இந்தத் தொழிலில் ஈடுபடும் பெண்கள் மிக பலவீனமானவர்களாகவும், மிகுந்த பலசாலிகளாகவும் உள்ளனர். 14 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்தத் தொழிலில் அறிமுகமாகும்போது 2 வருடம் முதல் 5 வருடம் வரை நிரந்தரமாகத் தொழில் புரியவேண்டும் என்று பத்திரங்களை எழுதி பெற்றுக்கொள்கிறார்கள்.

பெரும்பாலும் ஏழ்மைச் சூழலில் பிறந்து, சூழ்நிலைக் கைதிகளாக இந்தத் தொழிலுக்கு வரும் இவர்களால் ஒருபோதும் மீள முடிவதில்லை. ஆனால், பெரும்பாலான பெண்கள் இந்தத் தொழிலைவிட்டுச் செல்லவே விரும்புகிறார்கள். ஆனால் செல்லும் வழியோ, எப்படிச் செல்ல வேண்டும் என்ற பாதையோ அவர்களுக்கு இல்லை. வாழ்க்கையை நகர்த்த கடன் வாங்குகிறார்கள். பின்னர், அந்தக் கடனைச்செலுத்த பாலியல்தொழில் செய்கிறார்கள். தொழில் இல்லாது போகும்போது மீண்டும் கடன் வாங்குகிறார்கள். இப்படி வாழ்க்கை கனவுக்கும் பணத்துக்கும் இடையே அவர்களைத் துரத்தி மீண்டும் இந்த சகதிக்குள் தள்ளிவிடுகிறது. எல்லோரைப்போலவும் இந்தப் பெண்களுக்கும் ஒரு குடும்பம், கணவன், குழந்தைகள் என்ற கனவு உண்டு. ஆனால், கொடிய உலகம் அந்த வாய்ப்பை எப்போதும் அவர்களுக்கு வழங்குவதில்லை.

புதன், 15 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon