மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

இலங்கை-தமிழக மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு

இலங்கை-தமிழக மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு

எல்லைதாண்டி மீன் பிடிப்பதாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்கள் படகுகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. பின்னர், தமிழக முதலமைச்சர் பிரதமருக்குக் கடிதம் எழுதி, அதன்பிறகு பிரதமர் உத்தரவிட்டு மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி நடவடிக்கை எடுப்பதற்குள் ஒரு மாமாங்கம் ஆகிவிடுகிறது.

அண்மையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையிலுள்ள ராமேசுவரம் பகுதி மீனவர்கள் 13 பேருக்கு, ஜுன் 28ஆம் தேதிவரை சிறைக்காவலை மீண்டும் நீட்டித்து, அந்த நாட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த சேசு இருதயம் என்பவரின் படகில் திரவியம், டேனியல், ஆலிவர், ஸ்டெபோன், ஸ்நெல், கெவாக்லிஸ், வின்வர் ஆகிய 7 மீனவர்களும், கச்சத்தீவு அருகே மே 31ஆம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அதேபோல, தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த சிங்கம் லியோன் என்பவருக்குச் சொந்தமான படகில் ஜுன் 9ஆம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்த மகேந்திரன், மாரிகணேஷ், கருப்புசாமி, வினோத், பாஸ்கரன், முகேஷ் ஆகிய 6 மீனவர்களையும் அந்தப் பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் கைதுசெய்து தலைமன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்த 13 மீனவர்கள்மீது எல்லைதாண்டி மீன்பிடித்ததாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்களை ஜுன் 14ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து, அவர்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மீனவர்களை மீண்டும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, இலங்கை கடற்படையினர் போதிய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை எனக் கூறி, விசாரணையை வருகிற 28ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி அலெக்ஸ் கிரேசியான் உத்தரவிட்டார். இதையடுத்து, மீனவர்கள் 13 பேரும் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

புதன், 15 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon