மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 17 செப் 2019

ஜெயலலிதா அரைத்த மாவையே திரும்ப அரைக்கிறார்: கருணாநிதி

ஜெயலலிதா அரைத்த மாவையே திரும்ப அரைக்கிறார்: கருணாநிதி

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தனி விமானத்தில் 14ஆம் தேதியன்று டெல்லி சென்று, பிரதமரைச் சந்தித்து 29 கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கொடுத்துவிட்டு, சென்னை திரும்பினார். இதேபோன்று 3-6-2014 அன்று பிரதமரிடம் 31 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். இடையில் 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னைவந்த பிரதமர் மோடி, ஜெயலலிதாவை அவருடைய இல்லத்திலே சென்று சந்தித்தபோது, ஜெயலலிதா தமிழகத்தின் தேவைக்கான 19 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அதற்குப்பிறகு இரண்டாண்டுகள் கழித்து, நேற்றையதினம் டெல்லி சென்று பிரதமரிடம் தமிழக வளர்ச்சிக்காக 29 கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார். இந்நிலையில், ‘கோரிக்கை மனுக்களில் உள்ள தேவைகளைப் பார்த்தால், பெரும்பாலானவை ஒரே மாதிரியான கோரிக்கைகள்தான் திரும்பத் திரும்ப பிரதமரிடம் எடுத்துவைக்கப்பட்டுள்ளன’ என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. "காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்துவதற்காக, காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்க வேண்டும்" என்பது முதல் கோரிக்கையாகும். 2014ஆம் ஆண்டு பிரதமரைச் சந்தித்து, முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்துவைத்த கோரிக்கைகளில் முதல் கோரிக்கை, "காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்துவதற்காக, காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நதி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்க வேண்டும்" என்பதுதான்! 2015ஆம் ஆண்டில் பிரதமர், ஜெயலலிதாவை அவருடைய வீட்டிலே சந்தித்தபோது கொடுத்த கோரிக்கை மனுவிலும் இதுதான் முதல் கோரிக்கையாக இடம்பெற்றுள்ளது.

"மாநிலங்களுக்கிடையேயான அனைத்து நதிகளையும் இணைக்க, மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" - இது ஜெயலலிதா பிரதமரிடம் எடுத்துவைத்த கோரிக்கை. இதே கோரிக்கை 2014ஆம் ஆண்டிலும், 2015ஆம் ஆண்டிலும் ஜெயலலிதா எடுத்துவைத்த கோரிக்கை தான்! இந்தக் கோரிக்கைகள் திரும்பத்திரும்ப அளிக்கப்படுவதிலிருந்தே, இந்தக் கோரிக்கை மனுக்கள் எல்லாம் உரிய முறையில் கவனிக்கப்படாத நிலையிலேதான் உள்ளன என்பதை நாம் எளிதில் புரிந்துகொள்ள முடியும். மேலும் இந்தக் கோரிக்கைகள் ஏதோ நாங்கள் கொடுப்பதைப் போலக் கொடுக்கிறோம், நீங்கள் வாங்கிக் கொள்வதைப்போல வாங்கிக் கொள்ளுங்கள் என்ற ரீதியில்தான் நடக்கின்றனவோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. பிரதமரிடம் கோரிக்கைகளைக் கொடுத்தால், அதை ஏதோ கடமைக்காகக் கொடுத்தோம் என்றரீதியில் நிறுத்தாமல் தொடர்ந்து தொடர்புடைய அமைச்சர்கள், மத்திய நிதி அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய அவசர அவசியத்தை உணர்த்திட அரசியல்ரீதியாகவும், நிர்வாகரீதியாகவும் அழுத்தம் தர வேண்டும். தமிழகத்திலே உள்ள தொடர்புடைய அமைச்சர்கள் டெல்லி சென்று, அந்தத் துறை அமைச்சரையும், அதிகாரிகளையும் சந்தித்து கோரிக்கைகள் பற்றிப்பேசி அவற்றை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளைக் கையாளுவது வழக்கம். ஆனால் அப்படி இல்லாமல், அரைத்த மாவையே திரும்பத்திரும்ப அரைப்பதைப்போல, 2014ஆம் ஆண்டு முதலமைச்சர் பிரதமரிடம் எடுத்து வைத்த கோரிக்கைகளைத்தான் இரண்டாண்டுகள் கழித்து நேற்றைய தினமும் திரும்ப எடுத்து வைத்திருக்கிறார் என்றபோது ‘புதிய மொந்தையில் பழைய கள்’ என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது!’ என அந்த அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளார் கருணாநிதி.

புதன், 15 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon