மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

போலி ஆவணங்கள்மூலம் தமிழர் நிலத்தில் சிங்களக் குடியேற்றம்!

போலி ஆவணங்கள்மூலம் தமிழர் நிலத்தில் சிங்களக் குடியேற்றம்!

இலங்கையின் வடக்குப் பகுதியில் தமிழர்களின் பூர்வீக இடங்களில் ராணுவ முகாம்கள் நீண்டகாலமாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த ராணுவ முகாம்களை அகற்றுவதற்கு மனித உரிமைகள் அமைப்பு அழுத்தம் கொடுத்துக்கொண்டு இருக்கும்போது தலைமை புத்தமதத் தலைவரான அஸ்கிரி மகாநாயக தேரரைச் சந்திப்புக்குப்பிறகு பேட்டியளித்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மகிந்தா சமரசிங்கே, எக்காரணம் கொண்டும் தமிழர் பகுதியில் ராணுவம் அகற்றப்படமாட்டாது என்று கூறிவிட்டார். இதைக்கண்டு திராவிடர் கழகம் தனது விடுதலை ஏட்டின்மூலம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில்,

‘இலங்கையில் வடகிழக்கு மாகாணமான மட்டக்களப்பில் அதிகளவு சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுகின்றன. அங்கு பவுத்த விகாரைகளும் கட்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. அரசுக்குச் சொந்தமான காலி நிலங்கள் மற்றும் உரிமைகோராத தமிழர் நிலங்களில் இந்த அத்துமீறல்கள் நடந்துகொண்டு இருக்கின்றன.

இலங்கையில் எந்த அரசாக இருந்தாலும் தமிழர்களின் மரபுவழித் தாயக நிலப்பரப்புகளில் தமிழர்களின் உரிமைகளைச் சிதைக்கும்வண்ணம் திட்டமிட்டு சிங்களக் குடியேற்றங்களை நடத்திக்கொண்டு வருகிறது. இந்தத் திட்டங்கள் நிலமற்ற சிங்களவர்களுக்கு நிலம்தரும் திட்டங்களாக அரசால் கூறப்பட்டாலும், அங்கு வாழ்ந்த தமிழர்களின் உரிமைகளை கருத்துக் களை பொருட்படுத்தாமல் இந்த குடியேற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மட்டக்களப்பில் நடைபெறுகிற சிங்களக் குடியேற்றங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் கூறுகையில்: நல்லாட்சி அரசாங்கம் என்று கூறப்படுகிற தற்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திட்டமிட்ட பல நடவடிக்கைகள் அரசாங்கத்தின் பின்னணியில் அதன் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தமிழர் பகுதியில் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் திடீரென சிங்களவர்கள் குடியேற அவர்களுக்கு நில அனுமதிப் பத்திரங்கள் வந்திருக்கின்றன. தமிழர்களின் நிலங்களில் சிங்கள மக்களுக்கு எவ்வாறு அனுமதிப் பத்திரங்கள் வழங்க முடியும்? மட்டக்களப்பு மாவட்டத் தில் சிங்களவர்களுக்கான அனுமதிப் பத்திரங்கள் கொடுத்திருப்பது மிகவும் வியப்பாக உள்ளது. காரணம், இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் சிங்களக் குடியேற்றங்கள் இல்லாத பகுதியாக மட்டக்களப்பு இருந்து வந்துள்ளது.

சில நாட்களுக்குமுன்பு, மட்டக்களப்பு பிரதேச ஆளுநர் அதிபரைச் சந்தித்து மட்டக்களப்பின் வாகரை, புனானை போன்ற பகுதியில் முன்பு சிங்களவர்கள் வாழ்ந்ததாகும். அவர்கள் யுத்தகாலத்தில் இடம்பெயர்ந்துவிட்டார்கள் என்று ஆதாரமில்லாத தகவலைக் கூறியுள்ளார். மேலும், அப்படிச் சென்ற 200க்கும் குறைவான குடும்பங்கள் அடையாளம் கண்டிருப்பதாகவும் அதில் 178 சிங்களக் குடும்பத்தினருக்கு மட்டக்களப்பில் குடியேற்ற அனுமதியளிக்கவேண்டும் என்றும் கூறியிருந்தார். நான் வாகரைப் பிரதேசத்தில் வாழ்ந்தவர் என்றவகையில் யுத்தத்துக்கு முன்போ அல்லது அதற்குப்பின்போ சிங்களக் குடும்பங்கள் இருந்ததேயில்லை.

ஆனால் ஆளுநர் போலியான ஆவணங்களில் 178 சிங்களக் குடும்பங்கள் பெயர்களை இணைத் துள்ளார். 178 குடும்பங்கள் யுத்த காலத்தில் மட்டக்களப்பில் இருந்து வெளியேறியிருந்தால் அவர்கள் இருந்தகாலத்தில் அவர்களது பெயர்கள் அரசு கெஜெட்டில் பதிந்திருக்க வேண்டும் வாக்காளர்

பட்டியலில் அந்தக் குடும்பங்களின் பெயர்கள் இருந்திருக்க வேண்டும். 178 குடும்பமாக இருந்தால் அது ஒரு கிராமமாக இருந்திருக்க வேண்டும். கிராமமாக இருந்தால் அதற்கு ஒரு பெயர் இருந்திருக்கவேண்டும் அல்லது அந்த 178 குடும்பங்களும் விவசாயம்தான் செய்தார்கள் என்றால் அதற்கான ஆதாரங்கள் இருந்திருக்கவேண்டும். ஆனால் திடீரேன இன்று சிங்களர்களுக்கு நிலப்பத்திரங்கள் வந்திருக்கின்றன. ஆகவே, இதன் பின்னணியில் திட்டமிட்டு யாரோ செயல்பட்டிருக்கிறார்கள். திட்டமிட்டவகையில் யாரோ சதிமுயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இன்று மட்டக்களப்பில் 178 சிங்களக் குடும்பங்களுக்கு நிலப்பத்திரங்கள் வழங்குவார்கள். நாளை வட இலங்கையில் இதுபோன்று திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறும். இதற்கு அரசே துணைநிற்பதுதான் வேதனையாக உள்ளது என்று கூறியுள்ளதைக் கவனிக்கவேண்டும். இது தடுக்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.

புதன், 15 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon