மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

பொறியியல் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு கூடாது: ராமதாஸ் காட்டம்!

பொறியியல் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு கூடாது: ராமதாஸ் காட்டம்!

மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதைப்போன்று, பொறியியல் படிப்புக்கும் பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. அதன் ஒருகட்டமாகத்தான் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (ழிணிணிஜி) கடந்த 2013ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தது. உச்சநீதிமன்றத்தின் தடையால் கடந்த 3 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த மருத்துவ நுழைவுத் தேர்வு, நடப்பாண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள்தவிர, மீதமுள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் நடைமுறைக்கு வந்துவிட்டது. அடுத்த ஆண்டு முதல் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் நீட்டிக்கப்பட உள்ளது.

மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வை வெற்றிகரமாக அறிமுகம் செய்துவிட்ட மத்திய அரசு அடுத்தகட்டமாக, பொறியியல் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வை அறிமுகம்செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிலையில், ’மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு தேசியளவில் பொது நுழைவுத்தேர்வை அறிமுகம் செய்வதன்மூலம் உயர்கல்வியை முழுக்க தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்துடன் மத்திய அரசு செயல்படுகிறது’ என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மருத்துவ நுழைவுத்தேர்வைவிட மோசமான இந்நுழைவுத் தேர்வு கிராமப்புற ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை அடியோடு துடைத்தெறியும் ஆபத்து கொண்டதாகும். இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (IITs), தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (NITs), இந்திய தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (IIITs) ஆகியவற்றின் மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் முதன்மை கூட்டு நுழைவுத் தேர்வை (Joint Entrance Examination - JEE (Main) பொறியியல் படிப்புக்கும் நீட்டிக்க திட்டமிட்டிருப்பதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் (AICTE) தலைவர் அனில் சகஸ்ரபுதே தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து, பல்வேறு தரப்பினருடன் பேச்சு நடத்தப்பட்டுவருவதாக சகஸ்ரபுதே கூறியுள்ளபோதிலும், அடுத்த கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் பொறியியல் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிகிறது.

மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு கிராமப்புற ஏழை மாணவர்களை எப்படி பாதிக்குமோ அதேபோல், முதன்மை கூட்டு நுழைவுத் தேர்வும் பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களைப் பாதிக்கும். மருத்துவ நுழைவுத் தேர்வை எதிர்ப்பதற்காக முன்வைக்கப்படும் அனைத்துக் காரணங்களும் இதற்கும் பொருந்தும். முதன்மை கூட்டு நுழைவுத் தேர்வு என்பது முழுக்க முழுக்க மத்திய இடைநிலை கல்வி வாரிய (CBSE) பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு ஆகும். ஆனால், இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களுமே அந்த பாடத்திட்டத்தை படிப்பதில்லை. தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் தங்களுக்கென தனிப் பாடத்திட்டத்தை உருவாக்கி பின்பற்றுகின்றன. அவ்வாறு பல்வேறு மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் மாணவர்களை மத்திய பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் நுழைவுத் தேர்வை எழுதும்படி கட்டாயப்படுத்துவது, நீர்நிலைகளில் நீந்தக்கூடிய மீன்களை தரையில் தூக்கி வீசி மான்களுடனான ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்கச் செய்வதற்கு ஒப்பானதாகும்.

கல்வி என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். மருத்துவம் - பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை விதிகளை மத்திய அரசு உருவாக்குவது மாநில அரசின் அதிகாரவரம்புக்குள் தலையிடும் செயலாகும். எனவே, பொறியியல் படிப்புக்கு தேசியளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகக் குரல்கொடுத்து பொதுநுழைவுத் தேர்வை தடுக்க வேண்டும்.

புதன், 15 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon