மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

சென்னை: கார்பைடு மாம்பழம் மூன்று டன் பறிமுதல்

சென்னை: கார்பைடு மாம்பழம் மூன்று டன் பறிமுதல்

சென்னையில் கார்பைடு கற்கள்மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட 3 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கார்பைடு கற்கள்மூலம், செயற்கை முறையில் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டு சந்தையில் விற்கப்படும் கொடுமை அரங்கேறி வருகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கார்பைடு கற்கள்மூலம் செயற்கை முறையில் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனால், உடனடியாக அங்குவந்த அதிகாரிகள் கோயம்பேடு மார்கெட்டில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டு, கார்பைடுமூலம் பழுக்க வைக்கப்பட்ட 3 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். செயற்கை கல்மூலம் பழுக்க வைக்கப்படும் முறை, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின்படி தடை செய்யப்பட்ட முறையாகும். இதைத் தொடர்ந்து கார்பைடுமூலம் மாம்பழங்களை செயற்கையாக பழுக்க வைத்து விற்பனை செய்யும் வியாபாரிகள்மீது வழக்கு பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாம்பழ சீசன் தொடங்கியதில் இருந்து சென்னையில் மட்டும் கார்பைடுமூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 10 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுவாக, கார்பைடு மாம்பழங்களை சாப்பிட்டால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். வயிற்று வலி, வாந்தி, மயக்கம், வயிற்றுப்புண் மட்டுமின்றி, வேதியியல் மாற்றங்களால் புற்றுநோய் வரைக்கும் ஏற்படும் அபாயம் உள்ளது. இயற்கை மாங்காய் பழுக்க நேர அதிகரிக்கும் என்பதால், ஐந்து முதல் ஆறு மணி நேரங்களுக்குள் மாங்காய்களை பழுக்கவைக்க, செயற்கை முறையில் பழுக்கவைக்கும் வேலையில் சில வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தமுறையில் பழத்தை பழுக்கவைக்க, வெல்டிங் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும், `கால்சியம் கார்பைடு’ என்ற கல்லை சிறு துண்டுகளாக உடைத்து காகிதங்களில் சுற்றி மாங்காய்களுக்கு நடுவே வைத்துவிடுவார்கள்.

அடுத்த 3 முதல் 6 மணி நேரத்தில், மாங்காய்கள் அனைத்தும் பழுத்து மஞ்சள் நிறமாக மாறிவிடும். இந்த கால்சியம் கார்பைடில் இருந்து `அசட்டலின்’ என்ற வாயு வெளியாகி மாம்பழத்தை பழுக்கவைக்கும். அதாவது, மாம்பழத்தின் நிறத்தை அது மாற்றும்.

அதன் தன்மையைக் கெடுத்துவிடும். கால்சியம் கார்பைடு கல்வைத்து பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் பார்க்க மட்டுமே பளிச்சிடும். ஆனால், சுவை இருக்காது. பழத்தில் இனிப்பு இருக்காது.

மாம்பழங்களின்மீது பெரியளவில் கறுப்புப் புள்ளிகள் இருக்கும். மாம்பழங்களை தொட்டுப் பார்த்தால் சூடாக இருக்கும். தோல் மட்டும் பழுத்ததுபோல மஞ்சளாக இருக்கும். உள்ளே வெட்டிப் பார்த்தால் பழுத்திருக்காது. சுவையும் இருக்காது. மேலும், கார்பைடு கல்மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2 நாட்களில் கெட்டுப் போய்விடும். இந்த விவகாரத்தில் நமக்கு கூடுதல் விழிப்புணர்வு அவசியமாகிறது.

புதன், 15 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon