மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 27 மே 2020

எழுத்தாளர் துரை.குணா கைது: தமுஎகச கண்டனம்

எழுத்தாளர் துரை.குணா கைது: தமுஎகச கண்டனம்

ஊரார் வரைந்த ஓவியம் நாவலை எழுதிய எழுத்தாளர் துரை.குணாவை பொய் வழக்கில் கைது செய்து, சிறையிலடைத்துள்ளது கறம்பக்குடி காவல் நிலையம். இதுகுறித்து, ‘எழுத்தாளர் துரை.குணாவைக் கைதுசெய்து, அவர்மீது பொய்வழக்குப் போட்ட காவல்துறை அதிகாரிமீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என தமுஎகச கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அச்சங்கத்தின் தலைவர் ச.தமிழ்செல்வன், பொதுச்செயலாளர் (பொறுப்பு) கே.வேலாயுதம் ஆகியோர் இன்று வெளியிட்ட அறிக்கை:

தகவல் கிடைத்தவுடன் அவருடைய துணைவியாரைத் தொடர்புகொண்டு விபரங்கள் கேட்டறிந்தோம். புதுக்கோட்டை மாவட்ட தமுஎகச-வும் மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியும் காவல்துறையிடம் பேசி அவரை விடுதலைசெய்ய வற்புறுத்தினோம். ஆனால், காவல் ஆய்வாளர், தேர்தல் நேரத்தில் அவர் செய்த சில தவறுகளை வெளிக்கொண்டுவந்த காரணத்துக்காக, துரை குணாமீது கொண்ட சொந்தப் பகையுணர்ச்சி காரணமாக தன் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, ஒருவரைத் தாக்கியதாக வெள்ளைத்தாளில் புகார் பெற்று வழக்கு பதிவு செய்துள்ளார். புகார் அளித்தவரை தமுஎகச மற்றும் மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்கள் சந்தித்து உண்மையை தெரிந்துகொண்ட பின்னணியில் தமுஎகச தோழர் ஒருவரின் உறவினரான அவரை மதுரை எவிடன்ஸ் அமைப்பிடம் பாதுகாப்பாக ஒப்படைத்துள்ளனர். எவிடன்ஸ் அமைப்பின் சார்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. எவிடன்ஸ் அமைப்பின் முயற்சிகளைப் பாராட்டுவதுடன், எழுத்தாளர் துரை குணாவை உடனடியாக விடுதலை செய்யும்படியும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பொய்வழக்கு போட்ட காவல்துறை அதிகாரிமீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை வலியுறுத்தி கறம்பக்குடியில் அனைத்து அமைப்புகளுடனும் இணைந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமுஎகச அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 15 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon