மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 27 மே 2020

இந்தி எதிர்ப்பு-அச்சாரம் போட்ட முதல் வேதாந்தி!-ரெங்கையா முருகன்

இந்தி எதிர்ப்பு-அச்சாரம் போட்ட முதல் வேதாந்தி!-ரெங்கையா முருகன்

“ஒலிபெருக்கிகள் அபூர்வமாக வைக்கப்பட்ட காலத்தில் தெருத்தெருவாக அந்தக் கூட்டங்களை நடத்துவதற்கு அருணகிரி அடிகள் இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்ட நேரத்தில், அவர்கள் ஒரு மடத்திலே மிக நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.

அந்த மடத்திலே அவர்களுக்கு ஒரு குறையுமில்லை. அவரை அண்டிப் பிழைப்பவர்களும், அவரை அடிவருடக்கூடியவர்களும், அவரை ‘அடிகளே’ என்று அன்புடன் அழைக்கக் கூடியவர்களும், அவருடைய மதவுரைகளைக் கேட்டு மகிழத்தக்கவர்களும், ஏராளமாக அந்த மடத்திலே இருந்தும், மடத்துக்கு வெளிப்புறத்திலே இருந்தும் தமிழுக்கு ஒரு ஊறு நேரிடுகிறது, தமிழ்மொழிக்கு இழுக்கு வருகிறது என்று கேள்விப்பட்டவுடன் மடத்திலே இருக்கிற காரியத்தைப்பற்றியும் கவலைப்படாமல் காவி உடையோடு, நம்மோடு கைகோர்த்துக்கொண்டு, தமிழகத்திலே இந்தி எதிர்ப்பு இயக்கத்தை மிகத் திறம்பட நடத்தியவர்கள் அருணகிரி அடிகள் ஆவார்கள்.

அவர்கள் இந்த மாநாட்டுக்குத் தலைமை வகிக்க வேண்டுமென்று நண்பர் நடராசன்மூலம் வேண்ட, சுவாமி அருணகிரிநாதரை அழையுங்கள். அவர்தான் இந்த நேரத்துக்குத் தலைமைவகிக்க மிகப் பொருத்தமானவர்” என்று அறிஞர் அண்ணா கூறினார்.

மேற்குறித்த தகவல் 21.09.1957ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டில் சுவாமி அருணகிரிநாதர் தலைமையில் அண்ணா ஆற்றிய சொற்பொழிவின் ஒரு பகுதி.

கடந்த சில மாதங்களுக்குமுன்பாக மொழிப்போர் தியாக நாளையொட்டி நடந்த பல்வேறு தொலைக்காட்சிகளின் விவாத நேர உரையாடல்களைக் காணநேர்ந்தது. அண்ணா அவர்கள் குறிப்பிட்ட வேதாந்தி சுவாமி அருணகிரிநாதர்குறித்து எந்த அறிவுஜீவிகளாவது குறிப்பிடுவார்கள் என்று நினைத்தபோது ஏமாற்றமே மிஞ்சியது.நடப்புகால அறிவுஜீவிகளுக்குத் தெரிந்த இந்தி எதிர்ப்பு கிளர்ச்சிகுறித்த விவாதங்கள் பெரும்பாலும் 1950களுக்குப் பிந்தையது என்று மட்டுமே என்னால் அறியமுடிந்தது.

1937ஆம் ஆண்டு தமிழக வரலாற்றில் ஓர் எழுச்சிமிக்க காலம். ‘தமிழ்நாடு தமிழருக்கே!’, ‘தமிழ் வாழ்க!’, ‘இந்தி ஒழிக!’ என்ற முழக்கங்கள் விண்முகட்டை எட்டி எதிரொலித்த காலம். ராஜாஜி அவர்கள் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காலம். தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக புகுத்தப்பட்டு மாணவர்கள் வற்புறுத்தப்பட்ட காலம். சென்னை, தங்கச்சாலை தெருவில் உள்ள இந்து தியாலஜிக்கல் பள்ளிக்கூடம், தொண்டை மண்டல பள்ளிக்கூடம் ஆகியவற்றில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் உச்சகட்ட அளவில் இருந்த தருணம் அது. தி.மு.கழகம் தொடங்கப்படாத காலக்கட்டத்தில் கஷாய ஆடை அணிந்த வேதாந்த துறவி சுவாமி அருணகிரி அடிகள் வீராவேச உரையுடன், “என்ன மடமை இந்த இராசகோபாலாச்சாரிக்கு” என்று தெருக்கோடியில் இவர் பாடல்களைக் கிளப்பினால் மறு தெருக்கோடியில் வந்து குழுமி விடுவார்கள். அப்போது ஒலி பெருக்கிகள் இல்லாத காலம். சுவாமி அருணகிரிநாதரின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு மேலும் உரமூட்டியவர், குடியாத்தம் ஆதிமூல சுவாமிகள் மடத்துறவி வேதாந்தி சண்முகானந்த சுவாமிகள்.

அரசியல், மொழி, நாடு, மக்கள், சமயம் போன்ற பல துறைகளில் பணியாற்றிய சுவாமி அருணகிரிநாதர் அவர்கள் தமிழ்மொழியின்மீது கொண்ட பற்றின் காரணமாக தமது பெயரை ‘செம்மலை அண்ணலாரடிகள்’ என மொழிபெயர்த்து அமைத்துக்கொண்டார். சுவாமி அருணகிரிநாதர் எளிய விவசாயக் குடும்பத்தில் கோட்டைப்பத்து அகம்படியர் குடிமரபில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள பழுவூர் என்ற கிராமத்தில் 1897ஆம் ஆண்டு ஆவணித் திங்கள் 19ஆம் நாள் பிறந்தவர். இவருடைய தந்தை பொன்னையா பிள்ளை, தாய் காளி முத்தம்மை. தனது 19ஆம் வயதில் நிலமழகியமங்கலம் ஊரைச் சார்ந்த மாரியாயி என்ற பெண்ணைத் திருமணம் செய்து 23ஆம் வயதில் இல்லற வாழ்க்கையைத் துறந்து துறவை மேற்கொண்டவர்.

துறவை மேற்கொண்ட அருணகிரியார், துறவிகளுக்கே உரித்த வனபிரஸ்தம் பிரயாணத்தை மேற்கொண்டபோது தமிழகம், இலங்கை என்று அலைந்து, ஈரோடு ரயில் நிலையச் சத்திரத்தில் தூங்கியபோது, ஆழ்ந்த கனவில் திருவண்ணாமலை திருக்கார்த்திகை திருவிழாவுக்கு வருகிறாயா! என்று ஒரு பெரியவர் கேட்க, திருவண்ணாமலை நோக்கிய பயணம் அமைந்தது. செல்லும்வழியில் வேட்டவலம் ஜமீன்தார் காதல் மனைவியிடம் அன்புடன் கொடுத்த கம்பங்கூழ் குடிக்கிறார். 1921ஆம் ஆண்டு தனது 25ஆம் வயதில் சந்நியாச தீட்சை பெற்றுக்கொண்டு 1922ஆம் ஆண்டு சென்னை ஒற்றீசர், கபாலீசுவரர் ஆலயங்களுக்குச் சென்று தரிசனம்செய்து பெத்துநாயக்கன்பேட்டை பிடாரியார் கோயில் தெரு 45ஆம் இலக்க இல்லம், இராமலிங்கம்பிள்ளை வீட்டில் சிறிது நாள் விருந்தினராக இருக்கிறார். பின்பு, காசி யாத்திரைசெல்ல ஏற்பாடு செய்தபோது அந்த வீட்டில் வசித்து வந்த திரு. கண்ணபிரான்பிள்ளை என்பவர் காசிக்குப் போவதைத் தடுக்கிறார். தருக்க வேதாந்த சாத்திரங்களைக் கற்றுணர்ந்த கண்ணபிரான் பிள்ளை, சுவாமி அருணகிரியாரிடம் துறவிகள், ஞான சாத்திரங்களைக் கற்றுணரவேண்டிய அவசியத்தை உணரச் செய்கிறார்.

சென்னை வேதாந்த சங்க முதன்மையானவர் சாது நாராயணதேசிகரின் மாணவர் ஞானாநந்த மணவாள சுவாமிகளிடம் சீடராகச் சேர்ந்து ஞானவாசிட்டம், நாநா சீவவாத கட்டளை போன்ற நூல்களைப் பயின்றார். மகாதேவ முதலியாரிடம் பகவத்கீதையும், முருகேச முதலியாரிடம் தர்க்க சாஸ்திரமும், சின்னையா நாயகர் அவர்களிடம் அஷ்டபிரபந்தமும் கற்று தெளிவாகிக்கொண்டார். சுவாமி அருணகிரிநாதர் துறவுக்கு முன்பாக கையெழுத்துக்கூட போடத் தெரியாத எளிய மனிதர். பிற்காலத்தில் செய்யுள் இயற்றும்வன்மை இயற்கையாகவே அமைந்தது. இவருடைய செய்யுள் அனைத்தும் புதுப்புனல் பாயும் வெள்ளம் போன்ற ஓசைநய மிகுந்ததாக அமைந்தது.

அருணகிரியார் இயற்றிய நூல்களினுடைய சாராம்ச கருத்து நாடு, மொழி, சமூக சீர்திருத்தம், அத்வைதம், கடவுள் வழிபாடு முதலியவற்றை பொருளாகக் கொண்டு நூல்களை இயற்றியருளியவர். இவருடைய முக்கிய நூல் ‘இறையருள் வேட்டலும் சமய நெறி விளக்கமும்’, ‘தேசியப் பாடல்களும் தமிழர் உரிமை வேட்கைப் பாடல்களும்’, ‘பழநி மலை சாது சுவாமிகள் சரித்திரம்’ போன்றவை.

சுவாமி அருணகிரிநாதர் மடத்தை நோக்கி களஆய்வு செய்தபோது, எனக்கு அதிர்ச்சி மட்டுமே மிஞ்சியது. பதினெண் சித்தர்களுள் தலைமையானவரும், சித்த வைத்திய தலைமையானவரும், அகத்திய முனி பரம்பரை என்றழைக்கப்படும் பொதிகைமலை சித்தர் மரபு அகத்தியர் மடம் என்றபெயரில் சென்னை போரூர் அருகில் உள்ள கொளப்பாக்கம் கிராமத்தில் இவருடைய மடம் இருந்தது.

இந்த மடத்தில், தனது சிறுவயதில் கண்ட அனுபவங்களை ஞாயிறு கிராமத்தில் வசிக்கும் பெரியவர் என்னிடம் பகிர்ந்து கொண்டபோது சிங்கம்போல் சிம்மாசனத்தில் வீற்றிருந்து தனது வெண்கலக் குரலுடன் ஆர்ப்பரிப்புடன் உரையாடுவாராம்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மிகவும் பவ்யமுடன் தரையில் உட்கார்ந்து அருணகிரியாரின் சொற்பொழிவைக் கேட்டது இன்னும் நினைவில் இருப்பதாகக் கூறினார்.

இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி சமயங்களில் பல்வேறு ஆலோசனைகள் இந்த மடத்தில் நடக்குமாம். அறிஞர் அண்ணாதுரைகூட 1937ஆம் ஆண்டு காலத்தை நினைவுகூரும்போது, ‘அருணகிரிநாதர் பங்கேற்ற காலகட்டத்தின்போது நான் வாலிபனாக இருந்தேன். அவருடைய வீர உணர்ச்சிமிகுந்த தமிழர் உரிமைகுறித்த வேட்கை பாடல்களை சென்னை நகரத்தில் மூலை முடுக்குகளிலெல்லாம் கேட்டிருக்கிறார்கள்’ என்கிறார். அவர் வாழ்ந்த கொளப்பாக்கம் மடம் அவரது மறைவுக்குப்பின்பு அவர்களது சுற்றத்தார்களாலே காலி செய்யப்பட்டுள்ளது. இன்று அந்த மடத்தையொட்டிய நிலபுலன்கள், மடத்து மரச்சாமான்கள் கூட உடைத்து விலைக்கு விற்றுப்போன அவலத்தை என்னிடம் கூறும்போது மனது மிகவும் விசனப்பட்டுவிட்டது.

அந்த மடத்தின் இலச்சினை உதயசூரியன் சின்னம் கொண்டதாக இருக்க வாய்ப்பிருப்பதாக அனுமானிக்க முடிகிறது. ஏனெனில், இந்த மடத்தில் இருந்து பதிப்பான சில புத்தகங்களில் மூவேந்தர் சின்னமும் (புலி, மீன், வில்அம்பு), உதயசூரியன் சின்னமும் இடம்பெற்றுள்ளது. இந்த மடத்தில் உருவான பல சீடர்களின் சமாதிகள்கூட என்னுடைய களஆய்வில் காப்பாற்றப்பட்டு வந்திருந்ததை கண்கூடாகக் கண்டேன். இந்த சீடர்களை உருவாக்கிய குருவினுடைய சமாதி அமைந்த இடம் இன்று, அந்த தெரு மட்டும் அவருடைய பெயரைத் தாங்கி (அருணகிரி தெரு) இருக்கிறது. அந்த மடத்துக்குரிய நிலபுலன்கள் அனைத்தும் அரசியல் பின்புலமுள்ள ரியல் எஸ்டேட் வணிகம்செய்யும் நபர்களால் வரலாறு தெரியாமல் சுவடின்றி அழிக்கப்பட்டுவிட்டது. அக்காலத்து பல நீதிக்கட்சி அன்பர்கள் இந்த மடத்துடன் தொடர்புகொண்டவர்கள். என்.நடராஜன் இந்த மடத்துடன் மிகவும் தொடர்புடையவராக இருந்துள்ளார். அக்கால சென்னை கல்விச் சங்க அங்கத்தினர்கள் த.வே.முருகேசனார், வித்துவான் பலராமநாயுடு, வித்துவான் வி.ப.கோவிந்தசாமி போன்றோர் இந்த மடத்துடன் தொடர்புடையவர்களாக இருந்துள்ளார்கள்.

தமிழ்ச்சூழல் வரலாற்றில் எப்போதெல்லாம் தமிழ் மொழிக்கு ஊறு ஏற்படுகிறதோ, அக்காலகட்டத்துக்குத் தகுந்தவாறு பல ஆளுமையாளர்கள் மொழியைக் காக்க பங்காற்றியுள்ளனர். பொதுவாக, நாத்திகர்கள் மட்டும் மொழிப்போர் செய்ததாகக் கட்டமைக்கப்பட்டுள்ள வரலாற்றுத் தடத்தில் ஆத்திகர்களாகிய வேதாந்திகளும், சைவர்களும் தங்களுடைய பங்களிப்பைச் செய்துள்ளனர். பிராமணரல்லாத பல்வேறு வேதாந்திகளின் பங்களிப்பை இனிவரும் தொடரில் அறிமுகப்படுத்துவதே இந்தத் தொடரின் நோக்கமாகும். அடுத்து, தமிழ் குருகுலம் உருவாக்கிய வண்ணை நாராயணதேசிகர் குறித்து காணலாம்.

புதன், 15 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon