மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 27 மே 2020

கணவனிடம் மனைவிக்குப் பிடிக்காத விஷயங்கள்...

கணவனிடம் மனைவிக்குப் பிடிக்காத விஷயங்கள்...

‘தம்பதியருக்கான தாம்பத்திய ஆலோசனைகள்’ என்ற நூலின் ஆசிரியர்கள் பேராசிரியர் டாக்டர் டி.காமராஜ், டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ் தம்பதியர் கணவனிடம் மனைவிக்குப் பிடிக்காத விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளனர். அவற்றில் முக்கியமானவை...

‘அதிகமாக மது அருந்துவது, அடிக்கடி புகைப்பது, போதை மருந்து பயன்படுத்துவது, பெருந்தீனி உண்பது, குறைவாக உடற்பயிற்சி செய்து அல்லது செய்யாமல் விட்டு தொப்பையை வளர்த்துக் கொள்வது, மற்றவர்கள் மத்தியில் மிடுக்காக இல்லாமல் இருப்பது, பிறருடைய ஏவலைக் கேட்டு நடிப்பது, எதிர்பாலினரிடத்தில் குழைந்து குழைந்து பேசுவது, எதிர்பாலினர் ஏதேனும் வேலைகளைச் சொன்னால் உடனடியாக ஓடிப் போய் செய்வது, எதற்கெடுத்தாலும் பயப்படுவது, துணிவில்லாமல் கோழைத்தனமாக இருப்பது, பேசுவது, கூட்டத்தைக் கண்டால் ஒதுங்குவது, உயர்ந்தவரிடம் பேசும்போது காட்டுகிற தேவையில்லாத அடக்கம், தன் உடலைப் பற்றியோ மனைவியின் உடல்நிலை பற்றியோ அக்கறைக் காட்டாதது, நேர்மையில்லாமல் நடந்து கொள்வது, அடிக்கடி நகம் கடிப்பது, நேரம் தெரியாமல் நடந்து கொள்வது, அடிக்கடி சூதாடுவது, வெட்டித்தனமாக பொழுது போக்குவது, மனைவி தரம் குறைந்தவர்களாக நினைப்பவர்களிடம் நேரத்தைச் செலவிடுவது, இரவு நேரத்தில் உறங்காமல் அல்லது மனைவியுடன் நேரத்தைக் கழிக்காமல் டி.வி. பார்ப்பது அல்லது வெளியில் சுற்றுவது, குழந்தைகளைப் போல நடந்து கொள்வது, எதையும் தீர்மானிக்க முடியாமல் தவிப்பது, பாலுறவு நேரங்களைத் தவிர்ப்பது, மற்றவர்களின் விமர்சனத்துக்கு ஆளாவது அல்லது விமர்சனத்துக்கு ஆளாகும்போது நிலை குலைவது, பணம் சம்பாதிக்கும் திறமையில்லாது இருத்தல் அல்லது பணத்தை கையாளத் தெரியாமல் இருத்தல்...

இப்படி நிறைய விஷயங்களை உங்கள் மனைவி வெறுக்கக்கூடும். அவளுக்கு என்ன பிடிக்குமோ அதை தெரிந்துகொண்டு, ஏற்கனவே இருக்கும் பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். மனைவிக்குப் பிடித்தமானதை கவனத்தில் வைத்துக் கொண்டு செயல்பட்டுவிட்டால் எல்லாமே தலைகீழாக நடக்கும்’ என்று கணவர்களுக்குச் சொல்லி விட்டு, மனைவிக்கும் சில விஷயங்களைக் குறிப்பிடுகின்றனர்.

‘இப்படித்தான் மனைவியிடம் கணவனுக்குப் பிடிக்காத விஷயங்களும் இருக்கும். எந்த ஆண் மகனும் மாற்றான் தோட்டத்தை எட்டிப் பார்க்கத் தயங்கமாட்டான். ஆணின் மனம் இயல்பாகவே கவர்ச்சியை நாடும் தன்மை பெற்றது என்பதால், அவனுக்குச் சொந்தமான தோட்டமாகிய நீங்கள், அவளது மனதுக்கும், கண்களுக்கும் கடிவாளம் போடும் அளவுக்கு உங்களைச் சீவி சிங்காரித்துக் கொள்வதில் தப்பேயில்லை. பிறர் குறைகூறாக வகையில் நடந்து கொள்வதும், கணவன் விருப்பத்துக்கு ஏற்ப நடந்து கொள்வதும் அவனுக்குப் பிடித்தமானவை.

உங்களுடைய பெற்றோர், உறவினர்களிடம் எவ்வாறு கணவன் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களோ, அப்படி நீங்களும் நடந்துகொள்ள வேண்டும். அந்த நிலையை ஒரேயடியாகக் கொண்டுவர முடியாது என்றாலும் பழக்கப்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு கணவனும் மனைவியும் நடந்துகொள்ளும்போது உங்களுக்குள் மட்டுமல்ல, உங்களைச் சுற்றியிருக்கிற பிறர் கண்களுக்கும் நீங்கள் உயர்வான தம்பதியராகத் தெரிவீர்கள்’ என்கிறார்கள்.

இப்போது இந்தியாவில் விவாகரத்துகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகிவிட்டது. ஊடகங்களில் முக்கியப் பிரமுகர்களின் விவாகரத்து விஷயங்கள் வெளிச்சத்துக்கு வருவதைப்போல சாமான்யர்களின் விவாகரத்து விஷயங்கள் வராவிட்டாலும் நீதிமன்றங்களின் படிகளில் விவாகரத்து கேட்டு நிற்போரின் எண்ணிக்கை ஏராளம். இவற்றைத் தடுக்க மேற்கூறியவற்றை கடைபிடிக்கலாமே என்பதே மருத்துவ தம்பதியரின் கோரிக்கை.

புதன், 15 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon