மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 21 செப் 2020

நிறவெறியை கிழித்தெறிந்த ஐந்து ஆப்பிரிக்கப் படங்கள்!

நிறவெறியை கிழித்தெறிந்த ஐந்து ஆப்பிரிக்கப் படங்கள்!

‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான்’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ என 20ஆம் நூற்றாண்டில் கலாய்த்துக்கொண்டிருந்தாலும், ஒரு காலத்தில் வெள்ளையாக இருப்பவர்கள் வந்தால்தான் ஹாலிவுட் சினிமா என்று அடையாளப்படுத்தப்பட்டு வந்தது. இந்த அடையாளத்தை உடைத்தவை, 1970 முதல் 1990 வரை வெளியான ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் சினிமா. திறமைக்கு நிற, மத, மொழி, இன வேறுபாடுகள் இல்லை என்று நிரூபித்த காலம் அது. ஹாலிவுட்டுக்கு சிறந்த பல கலைஞர்களைக் கொடுத்தது இந்தக் கறுப்பர்களின் சினிமாமீதான படையெடுப்பு. ஆப்பிரிக்க நாடுகளில் போதைப்பொருள் அதிகம் புழங்கியது. சர்வாதிகார நாடுகளின் நிர்பந்தத்தால், அவற்றின் சுயலாபத்துக்காக பயன்படுத்தப்பட்டு வந்த வியாபாரங்கள் என்ற உண்மையைச் சொல்ல அவர்களே வெகுண்டெழுந்து வரவேண்டிய கட்டாயம் இருந்ததை உணர்ந்தார்கள். புரட்சி என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருந்து வரவேண்டியதல்லவா? வந்தது. ஆனால், அதன் வீச்சை மற்றவர்களால் தாங்கமுடியவில்லை. கடந்த ஆஸ்கர் விருதில்கூட ‘எல்லா படங்களும் வெள்ளையர்களின் படமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது’ என்ற விமர்சனம் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது. ஆப்பிரிக்கர்கள் என்றாலே அவர்கள் போதை மருந்து டீலர்கள், கேங்ஸ்டர்கள் என்று முடிவுகட்டப்பட்டிருந்தார்கள். அவர்களது வாழ்க்கைச் சூழலும் அப்படித்தான் இருந்தது. ஏன் அப்படி இருந்தது? என்பதைச் சொல்லவேண்டிய கடமை இருந்தது. சொன்னார்கள். அந்தவிதத்தில், அவர்களுக்கான பரந்து விரிந்த இடத்தை உருவாக்கிக்கொடுத்த மிக முக்கிய ஐந்து படங்கள் உங்கள் பார்வைக்கு....

1. Super Fly (1972)

கறுப்பினச் சுரண்டலை மிக நேர்த்தியாகவும், ஜனரஞ்சகமாகவும் கூறிய மிக முக்கியத் திரைப்படம் சூப்பர் ஃப்ளை. இந்தப் படம் ரிலீஸான பிறகு, ‘இது, போதை மருந்துக்கு ஆதரவான படம்’ என்று விமர்சிக்கப்பட்டது. ஆனால், படத்தின் கருத்தை சரியாக உணர்ந்தவர்கள் ‘இதுவரை வந்த படங்களிலேயே போதைமருந்துக்கு எதிரான சிறந்த படம்’ என்று புகழ்ந்தனர். படத்தின் ஹீரோ ஆப்பிரிக்க-அமெரிக்கன். மிகப்பெரிய கொக்கைன் வியாபாரி. ஆடம்பரமாக இருந்தாலும், அந்த வாழ்க்கை பிடிக்காமல்போனதால் சாதாரண வாழ்க்கையை வாழத் தீர்மானிக்கிறார். ஆனால், போதைப்பொருள் எமகாதகன்களால் அவரது கனவு உடைக்கப்படுகிறது. போதைப்பொருள் விற்பதற்காக மட்டுமல்ல; அதிலிருந்து வெளியேறவும் ஒருவன் எவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்பதை விளக்கிச்சொன்ன படம் சூப்பர் ஃப்ளை. போதைப்பொருள் உலகத்திலிருந்து மீண்டுவர நினைப்பவர்கள்கூட அங்கு எப்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்பதைப் பேசிய திரைப்படத்தை போதைப்பொருளுக்கு ஆதரவான படம் என்று எப்படிச் சொல்லமுடியும்?. இந்தப் படத்தில் சுவாரஸ்யமானது ஹீரோவின் நண்பராக வரும் Carl Lee. ஆப்பிரிக்கர்களை எதற்காக மற்றவர்கள் ஒதுக்கிவைத்தார்களோ அந்த இடதிலிருந்தே வந்தவர். அதிகம் போதைப்பொருள் கடத்தல் கேரக்டரிலேயே நடித்தவர். ஏன் இப்படிப்பட்ட கேரக்டரிலேயே நடிக்கிறீர்கள்? என்று கேட்டபோது ‘என்னை எதற்காக ஒதுக்கினார்களோ, அதற்காகவே ரசிக்கவேண்டும்’ என்று கூறியவர்.

2.Boyz in the Hood (1991)

இன்றைய ஹாலிவுட்டின் டாப் லிஸ்ட்டில் இருக்கும், பெரும்பான்மை ஆப்பிரிக்க நடிகர்களைக் கொடுத்த படம் Boyz in the Hood. டி காப்ரியோவின் சிறந்த நடிப்புக்கு பலமுறை தவறிப்போன மாதிரி, கியூபா குட்டிங்-குக்கு இந்தப் படத்தில் ஆஸ்கர் தவறிப்போனது. மிகவும் விமர்சிக்கப்பட்ட திரைப்படம் என்றாலும், Boyz in the Hood பேசிய மூன்று நண்பர்களுக்கிடையேயான நட்பு, ஆபத்து, அன்பு ஆகியவை இப்படத்தில் மாஸ்டர்பீஸ். அடங்காத பிள்ளையை அடக்க அப்பாவிடம் அனுப்புகிறார்கள். வியட்நாம் போரில் பங்குகொண்ட தந்தையை மிகவும் பயந்து அணுகும் மகன், மிகவும் ஜாலியான தந்தையைக் கண்டு மகிழ்ச்சியடைகிறார். அவருக்குக் கிடைக்கும் மூன்று நண்பர்களும் சிறந்தவர்களாக இருக்க, கலாட்டாவாக நகரும் வாழ்க்கை, அடுத்தடுத்து வந்துசேரும் நண்பர்களால் மோசமடைகிறது. இரு பைக் கேங்கின் சண்டைக்கிடையே சிக்கிக்கொள்ளும் இந்த மூன்று நண்பர்களில் ஒருவர் இறந்துவிடுகிறார். நண்பனின் மரணத்துக்கு பழிக்குப்பழி வாங்க கிளம்பும் இருவரில் ஒருவர், பழிக்குப்பழி தீர்வல்ல என்று திரும்பிவந்துவிட, கொலைசெய்யச் சென்றவன் கொலை செய்துவிட்டு இறந்துவிடுகிறான். கதைக்களம் சிறியதுதான். ஆனால், தொட்டுச்செல்லும் விஷயங்கள் ஏராளம். வியட்நாம் போரில் ஆப்பிரிக்கர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி முதல், லோக்கல் கேங்ஸ்டர்களால் தவறான பாதையில் அழைத்துச் செல்லப்படும் ஆப்பிரிக்க இளைஞர்களின் வாழ்க்கைமுறை வரை பதிவுசெய்த இத்திரைப்படம், ஆப்பிரிக்கப் படங்களின் ஆல்-டைம் பெஸ்ட்.

3. Jungle Fever (1991)

தொழில், பொழுதுபோக்கு, வாழ்வாதாரம் ஆகியவற்றில் மட்டுமில்லாமல், காதலில்கூட நிறவெறி கலந்திருந்த காலத்தில் வெளியாகியது Jungle Fever. கறுப்பு-வெள்ளை என்ற நிறத்துக்கு காதல்வண்ணம் பூசிய காலத்தில் வெளியாகி வழக்கம்போலவே அதிக விமர்சனங்களைப் பெற்ற திரைப்படம். நிறவெறியுடையவர்களையும் ரசிக்கவைக்கும் அளவுக்கு வெஸ்லி ஸ்னைப்ஸும், அனெபெல்லா ஸ்கியோராவும் இணைந்து நடித்த காதல் காட்சிகள் பிரசித்திபெற்றன.

4.New Jack City (1991)

கட்டுரையைத் தொடங்கியபோது, ஆஸ்கரில் ஆப்பிரிக்கர்கள் நடித்த படங்களைத் தேர்வு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டைப்பற்றி பேசியிருந்தோமல்லவா!. அந்த ஆஸ்கர் விழாவை தொகுத்துவழங்கிய கிரிஸ் ராக்குக்கு அடையாளம் கிடைத்த படம் New Jack City. அவருக்கு மட்டுமா! வெஸ்லீ ஸ்னைப்ஸுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் இது. 90களில் போதைமருந்துக்கு எதிராக வந்த படங்களில் சிறந்தது எது என்ற கேள்விக்கு, கூகுளில் தேடாமல் இந்தப் படத்தின் பெயரைச் சொல்லிவிடலாம். என்னை எதிர்க்க யாருமே இல்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஆடும் கடத்தல் மன்னனை, ஒரு போலீஸ் டீம் கொல்வதுதான் கதை. மேக்கிங், இசை, மெஸேஜ் என எல்லாவிதத்திலும் ஹிட் அடித்தது இந்த திரைப்படம். வெஸ்லீ ஸ்னைப்ஸின் புகழ்பெற்ற வசனமான ‘Am I my Brother's Keeper?' இடம்பெற்ற படம் இதுதான்.

5.Dead Presidents (1995)

வியட்நாம் போருக்குப்பிறகு ஆப்பிரிக்கர்களுக்கு, அமெரிக்கர்கள் இழைத்த கொடுமைக்கு அவர்கள் வாங்கிய பழி என்றால் Dead Presidents திரைப்படத்தைச் சொல்லலாம். குரூரம், கோபம் இவற்றுடன் புத்திசாலித்தனம் சேர்ந்தால் என்ன ஆகும் என்பது படம். வியட்நாம் போருக்குச்சென்று திரும்பியபிறகு, தனது குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள முடியாமல் கஷ்டப்படுகிறார். ஆனால், ஆடம்பரமான வாழ்க்கை இரத்தத்தின் பிசுபிசுப்புகளுக்கிடையில் இருக்கும் என உணர்கிறார். லீடிங் கேரக்டரில் நடித்த லாரன்ஸ் டடே-வின் ஆழமான, கேஷுவலான, அழுத்தமான நடிப்பு அவரது புகழை இன்றுவரை பேசி நிற்கிறது. 90களில் வெளிவந்த 60களின் சாயலில் எடுக்கப்பட்ட இந்தப் படம், சினிமா எத்தனை மாற்றங்களைக் கண்டாலும் நிலைத்து நிற்கும்.

நன்றி : FLICKFEAST

புதன், 15 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon