மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 18 ஜன 2021

நலத்திட்டங்களால் விவசாயிகள் பயனடைந்திருக்கிறார்களா?

நலத்திட்டங்களால் விவசாயிகள் பயனடைந்திருக்கிறார்களா?

கிராமப்புற மாற்றம்பற்றிய தேசிய அளவிலான கணிப்புகளின்போது, தன்னிச்சையான மாற்றங்களை மட்டும் கணக்கில்கொள்ளாமல், பிராந்திய அளவிலான வேறுபாடுகளைப் பற்றியும் புரிந்துகொள்ள வேண்டிய தேவையிருக்கிறது.

சீர்திருத்தத்துக்குப் பிந்தைய இந்தியாவில், பிராந்திய அரசில் பொருளாதாரமானது, துணை தேசியக் கொள்கை உருவாக்கத்திலும் பிராந்திய அளவிலான வளர்ச்சி வேறுபாட்டிலும் முக்கியப் பங்காற்றியிருப்பதைக் கவனிக்க வேண்டியதிருக்கிறது. அதேபோல, பிராந்தியரீதியிலான வளர்ச்சி மற்றும் விநியோகத்தை வடிவமைத்ததிலும் அதற்கு மிக முக்கியப்பங்கு இருக்கிறது.

வளர்ச்சிக்கான மாதிரிபற்றிய ஒப்பீட்டின்போது, இந்தியாவில் உள்ள மற்ற பிரபலமான மாநிலங்களைவிட, தமிழ்நாடானது அதிக நம்பகத்தன்மைபெற்ற ஒன்றாக முன்வைக்கப்படுவதற்குக் காரணம், தமிழகத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி மற்றும் சமத்துவ சமூகநல அளவீடு ஆகியவையே. தமிழ்நாட்டில் ஏற்பட்ட தாழ்த்தப்பட்ட பிரிவினரின் அணிதிரட்டல் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட ஜனநாயக நடவடிக்கையே இதற்குக் காரணம் ஆகும். இடஒதுக்கீடானது உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஏற்படுத்திய மாற்றத்தின் காரணமாகவே இந்த வளர்ச்சி ஏற்பட்டதாக அறிஞர்கள் கருதுகிறார்கள். ஆனால், இந்த மாற்றத்தால் ஏழைகள் வளர்ந்திருக்கிறார்களா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

1960களுக்குப் பிறகு, நடைபெற்ற தாழ்த்தப்பட்டோரின் அணிதிரட்டலின் விளைவாக சில கட்சிகள் ஆட்சிக்கு வந்தன. அவை தொடர்ச்சியான சில நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு அளித்தன. இதன்விளைவாக தாழ்த்தப்பட்டவர்களுக்குள் உள்ள நடுத்தரப் பிரிவினர் வளர்ச்சியடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறமென்றால், இரண்டு கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட தொடர் போட்டியின் காரணமாக அந்த நலத்திட்ட உதவிகள் மேலும் விரிவாக்கப்பட்டது. இதனால் மக்கள் அடைந்த பலன்களை மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டுப்பார்க்கும்போது வித்தியாசம் கண்கூடாகத் தெரியும். ஆனால், இந்த விளைவுகளின் காரணமாக பொது வேலைவாய்ப்பில் சரிவு ஏற்பட்டது, உயர்கல்வி தனியார்மயமாக்கப்பட்டது ஆகியவை காரணமாக சமூகநீதித் திட்டங்களின் நோக்கம் சிதைத்துவிட்டதையும் காண முடிகிறது.

சமூகநீதியை அடிப்படையாகக் கொண்ட அரசுகளின் காரணமாக, பொது விநியோகத் திட்டமானது மாநிலத்தின் எல்லா தரப்பட்ட மக்களையும் சென்றடைந்திருக்கிறது. ஆனால் மற்றொருபுறம் விவசாயத்தில் குறைவான வருவாய் என்ற நிலை ஏற்பட்டதோடு, கிராமப்புறங்களின் கடன்சுமை அதிகரித்ததையும் பார்க்கவேண்டி இருக்கிறது.

விவசாயத்தின்மூலமாக கிடைத்த வருவாயானது குறைந்தபோது, மற்ற தொழில்களை நோக்கி சில குடும்பங்கள் நகர்ந்தன. ஆனால், கணிசமான அளவிலான கிராமப்புறக் குடும்பங்கள், தங்களின் வருமானத்துக்காக விவசாயம் ஒன்றை மட்டுமே நம்பியிருந்தனர். மீதமிருக்கும் குடும்பங்களைப் பொருத்தவரை, அவர்களது வருமானத்தின் ஒரு பகுதி விவசாயத்தின் மூலமாகவும், விவசாயம்சாராத தொழில்களின்மூலமாகவும் கிடைத்தன.

விவசாயிகளின் தொடர்ச்சியான செயல்பாடுகளானது எப்படி சாதிரீதியிலான அணிதிரட்டலாக உருமாற்றம் பெற்றது என்பதைப்பற்றியே இந்தப் பத்தியில் காணப்போகிறோம். சில ஆண்டுகளுக்குமுன்பு, தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சியின் காரணமாக ஏற்பட்ட எழுச்சியின் விளைவாக தமிழக விவசாயிகளிடையே ஒரு அணிதிரட்டல் நடைபெற்றது. அதன்விளைவாக, விவசாயக் கூலிகள் கூலி உயர்வு கேட்டு நெருக்கடி கொடுத்தனர். இன்னொருபுறம், விவசாயப் பொருட்களுக்கு சரியான விலையை நிர்ணயம் செய்யவேண்டும் என்றும், மானியம் அளிக்கப்பட வேண்டும் என்றும் குறுவிவசாயிகள் தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், இலவச மின்சாரம் வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கையை மாநில அரசு ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. தேர்தல் சமயத்தில் இரண்டு கட்சிகளுக்கும் ஏற்பட்ட போட்டியின் காரணமாக, விவசாயிகளுக்குக் கிடைத்த மானியம் தொடர்ச்சியாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.

அதேபோல, விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பது தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டதையும் குறிப்பிட வேண்டும். சமீபத்திய உதாரணமாக, முன்னர் ஆட்சிசெய்த திமுக அரசு, விவசாயிகளிடம் இருக்கும் பழைய பம்பு செட்டுகளுக்குப் பதிலாக புதிய பம்பு செட் அளிக்கப்படும் என்ற வாக்குறுதியைக் குறிப்பிடலாம். விவசாயிகளுக்கு விபத்து மற்றும் மருத்துவக் காப்பீடு, அவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித் தொகை, விவசாயக் கூலிகள் மற்றும் குறுவிவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் ஆகியவை 2006ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முக்கியமான திட்டம் ஆகும். அதேபோல, பொதுவிநியோகத் திட்டம் மற்றும் வயதான மற்றும் கைவிடப்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியம் ஆகிய இரு திட்டங்களானது விவசாயப் பொருட்கள்மீதான வருவாய் இழப்பின் காரணமாக ஏற்பட்ட பிரச்னைகளை ஓரளவு சமாளிக்க உதவியது.

ஆனால் வறுமையைக் குறைக்கவோ, விவசாயிகளின் நெருக்கடியைப் போக்கவோ தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் போதாது என்பதையே ஆய்வுகள் காட்டுகின்றன. 2011-12ம் ஆண்டில் விவசாயத்தை சுயதொழிலாகக் கொண்ட 17.5 சதவிகிதத்தினர் அரசு நிர்ணயித்த வறுமைக் கோட்டுக்குக்கீழே உள்ளனர். ஆனால் இவர்களோடு ஒப்பிடும்போது, விவசாயக் கூலிகளின் நிலை ஓரளவு பரவாயில்லை. காரணம், 25 சதவிகித விவசாயக் கூலிகள் வறுமையில் உள்ளனர். என்னதான் சமூக நீதித் திட்டங்களை வழங்கியிருந்தாலும், அது விவசாயிகளின் விளைபொருட்களுக்கான நியாயமான விலையைப் பெற்றுத்தர உதவவில்லை என்பதையே இது காட்டுகிறது. விவசாயிகளின் விற்பனையைப் பெருக்க வெளிப்படையான திட்டங்கள் ஏதும் செயல்படுத்தப்படவில்லை என்பதையும் இதன்மூலம் புரிந்துகொள்ளலாம். இது, இந்த மாநிலத்துக்கு மட்டுமேயான சிக்கல் அல்ல என்றாலும், நீண்டகால விவசாயப் பின்னணிகொண்ட மாநிலத்தில் உள்ள இந்த முக்கியமான சிக்கல் குறித்து விரிவாக அலசியாக வேண்டியிருக்கிறது.

(தொடர்ந்து அலசுவோம்)

-நன்றி: எம்.விஜயபாஸ்கர் (செமினார் ஆய்விதழில் எழுதியது)

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon