மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

டிஜிட்டல் திண்ணை:அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் மாற்றம்?

டிஜிட்டல் திண்ணை:அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் மாற்றம்?

நெட் ஆன் செய்ததும் சைன் இன் ஆனது ஃபேஸ்புக். தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸ்க்கு போஸ்ட் கொடுத்தது. “பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்று அரவக்குறிச்சி. இங்கே, அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி. கடந்த ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்து பதவி பறிக்கப்பட்டபிறகு, அவரோடு கட்சி நிர்வாகிகள் யாரும் தொடர்பில் இல்லாமல் இருந்தார்கள். செந்தில்பாலாஜியும் அப்படியே இருந்தார். அதன்பிறகுதான், யாரும் எதிர்பார்க்காமல் அவரை அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளராக அறிவித்தார்கள். ஒதுங்கிநின்ற கட்சிக்காரர்கள் எல்லாம் நெளிந்தபடியே மீண்டும் செந்தில்பாலாஜியை பார்க்கப் போனார்கள். செந்தில்பாலாஜியும் எப்படியாவது ஜெயித்துவிட்டால் மீண்டும் அமைச்சரவையில் இடம் பிடித்துவிடலாம் என்ற கனவுடன்தான் இருந்தார். அதே மாவட்டத்தில் விஜயபாஸ்கருக்கு போக்குவரத்துத் துறையை ஒதுக்கினார் ஜெயலலிதா. அத்துடன் மட்டுமல்லாமல், மாவட்டச் செயலாளராகவும் அறிவித்துவிட்டார்.

விஜயபாஸ்கர் மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்ட பிறகுதான் ரொம்பவே நொந்து போய்விட்டாராம் செந்தில்பாலாஜி. கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான விஜயபாஸ்கரை சந்தித்து வாழ்த்துச் சொல்ல அவரது வீட்டுக்குப் போனபடியே இருக்கிறார்கள். ஆனால், இதுவரை செந்தில்பாலாஜி வாழ்த்துச் சொல்ல விஜயபாஸ்கரை சந்திக்கவில்லை. ‘நான் பார்த்து வளர்ந்த ஆளு அவரு... அவரு என்னை வந்து பார்க்கமாட்டாரா? நான்தான் போகணுமா?’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்ல ஆரம்பித்திருக்கிறாராம் செந்தில்பாலாஜி. அதுமட்டுமல்லாமல், தனது ஆதரவாளர்களுக்கு போன் போட்டு, ‘நீங்க யாரும் அவரைப் போய் பார்க்காதீங்க...’ என்றும் சொல்கிறாராம். என்ன செய்வது எனப் புரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள் கட்சி நிர்வாகிகள். ’பிரச்சாரத்துக்குப் போகும்வரை யார் போன் பண்ணினாலும் எடுத்துப் பேசுவாரு. தொகுதிக்குள்ள எந்த நல்லது கெட்டதுன்னாலும் வந்துட்டு இருந்தாரு. ஆனால், இப்போ போன் பண்ணினா எடுக்கிறதே இல்லை. அதையும்மீறி எடுத்தாலும் அவரோட பி.ஏ. தான் பேசுறாரு. ‘அண்ணன் பிசியா இருக்காரு... அப்புறம் பேசுங்க’ன்னு சொல்றாரு. எப்போ கூப்பிட்டாலும் இதே பதில்தான் வருது. கட்சிக்காரர்களை ஒதுக்கியதால்தான் அவரு இன்னைக்கு இந்த நிலைக்கு வந்திருக்கிறாரு. இன்னும் அவர் திருந்தாமல் இருந்தால் என்ன செய்யமுடியும்? தற்போது, செந்தில்பாலாஜிக்கு கட்சியில் எந்தப் பொறுப்பும் இல்லை. சாதாரண உறுப்பினர் மட்டுமே... ஆனாலும் அவரோட அலட்டல் தாங்கவே முடியல. இன்னும் தன்னை ஒரு அமைச்சர் ரேஞ்சுக்கே நினைச்சுக்கிட்டு, பந்தா காட்டிக்கிட்டு இருந்தால் சகிச்சுக்க முடியுமா? இப்பவே அவரு இப்படி செஞ்சா, இன்னும் ஜெயிச்சு அமைச்சராகிட்டா என்ன செய்வாரு? அதனால, அரவக்குறிச்சி தொகுதிக்கு வேட்பாளரை மாத்தணும்னு கட்சித் தலைமைக்கும், கார்டனுக்கும் ஃபேக்ஸ் அனுப்பியிருக்கோம்’ என்று சொல்கிறார்கள் அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள அதிமுக-வினர்.’’ என்ற அந்த ஸ்டேட்டஸைப் படித்து அதற்கு லைக் போட்டது வாட்ஸ் அப்.

‘‘தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி இரண்டு தொகுதிகளிலும் வேட்பாளர்களை மாற்றலாமா?” என்ற ஒரு கேள்வியையும் கமெண்டில் கேட்டது வாட்ஸ் அப்.

பதிலை அடுத்த ஸ்டேட்டஸாக போஸ்ட் செய்தது ஃபேஸ்புக். ‘‘அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இரண்டு தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபிறகு வேட்புமனு புதிதாகத்தான் தாக்கல் செய்யவேண்டும். அதனால், வேட்பாளர்களை மாற்றுவதில் எந்தச் சிக்கலும் இருக்காது. அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜியை மீண்டும் வேட்பாளராக செந்தில்பாலாஜியை அறிவித்துவிடக்கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு வேலைபார்க்க ஆரம்பித்துவிட்டது அவரது எதிரணி. தற்போதைய அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான விஜயபாஸ்கர், அரவக்குறிச்சி தொகுதியில் அதிகம் கவனம்செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அங்கேயிருக்கும் நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள் என்று எல்லோருக்கும் தொடர்ந்து போனிலும் பேசுகிறாராம். ‘உங்களைமாதிரி நானும் சாதாரண ஒன்றியச் செயலாளரா இருந்துதான் இங்கே வந்திருக்கேன். உங்க கஷ்டம் எனக்குப் புரியும். எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க...’ என்று கேட்க ஆரம்பித்துவிட்டாராம். அமைச்சரின் போனுக்கு கட்சிக்காரர்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ் என்கிறார்கள். அதனால், மீண்டும் அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜிக்கு வாய்ப்புக் கிடைப்பது சிரமம். அப்படியே கிடைத்தாலும் ஜெயிப்பது அதைவிட சிரமம் என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர்.” என்பது அந்த பதில். அந்த ஸ்டேட்டஸ்க்கும் லைக் போட்டதுடன் ஷேரும் செய்தது வாட்ஸ் அப்.

அத்துடன் வாட்ஸ் அப், ஏதோ டைப்பிங் செய்ய ஆரம்பித்திருந்தது.

“சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் வீடு, குடோன்களில் தோண்டத்தோண்ட சிலைகளாக வந்தபடி இருக்கிறது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நேற்று, தனது டீமில் உள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அந்த மீட்டிங்கில், ‘சிட்டிக்குள் இருக்கும் முக்கியமான ஏரியாவுல தீனதயாளனுக்கு வீடு, குடோன் இருக்குது. இந்தியா முழுக்க இருந்து சிலைகளைக் கொண்டுவந்து இங்கேதான் பதுக்கிவைத்திருக்கான். அப்படியானால், இவ்வளவு சிலைகள் எப்படி சிட்டிக்குள் சர்வ சாதாரணமாக வந்திருக்க முடியும்? இந்தச் சிலைகளை சிட்டிக்குள் கொண்டுவர காவல் துறையில் யாராவது உதவி இருக்கணும். இல்லைன்னா, காவல் துறைக்கு அரசியல்வாதிங்க யாராவது அழுத்தம் கொடுத்திருக்கணும். அதனால், காவல் துறை அமைதியாக இருந்திருக்கலாம். தப்பு செய்யுறவங்களைவிட தப்புக்குத் துணையாக இருக்கிறவங்கதான் தண்டிக்கப்பட வேண்டியவங்க. அதனால தீனதயாளனுக்கு உதவிய ஆளுங்க யாருன்னு கண்டுபிடிக்கணும். நான் எங்கே பேசணுமோ அங்கே பேசிட்டேன். ’யாருக்காகவும், இதில் கருணை காட்டவேண்டாம். விசாரணையை தொடர்ந்து நடத்துங்க. யாரு தப்பு செஞ்சிருந்தாலும் நடவடிக்கை எடுங்க’ன்னு சொல்லிட்டாங்க. அதனால நாம இன்னும் ஸ்பீடாக இறங்கணும்!’ என்று சொல்லியிருக்கிறார். அதனால், இந்த சிலை கடத்தல் விவகாரத்தில் காவல் துறை அதிகாரிகளோ, ஆளுங்கட்சி புள்ளிகளோ விரைவில் சிக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். ’மீட்கப்பட்ட சிலைகள் எல்லாம் எந்தக் கோயிலில் இருந்ததோ அங்கேயேவைத்து அதற்கு கும்பாபிஷேகமும் நடத்துங்க...’ என்று இந்து அறநிலையத் துறை அமைச்சருக்கு உத்தரவு போயிருக்கிறது. அவரும் அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டாராம்.” என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைனில் போனது.

செவ்வாய், 14 ஜுன் 2016

அடுத்ததுchevronRight icon