மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 21 செப் 2020

ஜி.எஸ்.டி.: தமிழகத்தைத்தவிர எல்லா மாநிலங்களும் ஆதரவு - ஜெட்லி

ஜி.எஸ்.டி.: தமிழகத்தைத்தவிர எல்லா மாநிலங்களும் ஆதரவு - ஜெட்லி

கொல்கத்தாவில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் மாநில நிதி அமைச்சர்களின் இரண்டு நாள் கூட்டம் இன்று தொடங்கியது. இதில் 22 மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ஜி.எஸ்.டி. மசோதாவை நிறைவேற்றுவது குறித்தும், அதில் உள்ள சிக்கல்கள், மாநில நலன்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இன்று முதல்நாள் கூட்டத்துக்குப் பிறகு நிதியமைச்சர் அருண் ஜெட்லி பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, " ஜி.எஸ்.டி. மசோதாவை தமிழகத்தைத்தவிர, கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. தமிழகம் சில மாற்றங்களை கோரியிருக்கிறது. அதை கமிட்டி குறித்துக்கொண்டது. ஜி.எஸ்.டி. மசோதாவை நிறைவேற்ற முதலில் நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும். அதன்பிறகு, மத்திய அரசு மத்திய சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவையும், மாநில அரசுகள் மாநில சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவையும் நிறைவேற்ற வேண்டும்" என்றார்.

கூட்டத்தில் நிதித்துறையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அருணாச்சலபிரதேச முதல்வர் கலிகோ புல், மேகாலயா முகுல் சங்மா, டெல்லி துணைமுதல்வர் மனீஷ் சிசோடியா ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்ற மேற்குவங்க நிதியமைச்சர் அமித் மித்ரா, ஜி.எஸ்.டி. மசோதாவுக்கு திரிணாமூல் கட்சியின் ஆதரவைத் தெரிவித்தார். இது மசோதாவை நோக்கிய முக்கிய நகர்வாக மாறியுள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமரைச் சந்திக்கிறார். இந்தச் சந்திப்பின்போது ஜி.எஸ்.டி. மசோதா குறித்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவளிக்க வாய்ப்புள்ளது. அப்படி ஆதரவளிக்கும்பட்சத்தில் மசோதா நிறைவேறுவது உறுதிசெய்யப்படும்.

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon