மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

கருணாநிதியிடம் ஒரு கேள்வி - சி.ஆர்.சரஸ்வதி சிறப்புப் பேட்டி

கருணாநிதியிடம் ஒரு கேள்வி  - சி.ஆர்.சரஸ்வதி சிறப்புப் பேட்டி

அதிமுக-வின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, டிவி விவாதங்களில் எதிர்க்கட்சியினரை அலறவிடும் அதிமுக-வின் 'அட்டாக் சோர்ஸ்'. அதிமுக-வில் இரண்டாம்நிலைத் தலைவர்கள் என்று சொல்லப்படும் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் இருவரும் தேர்தலுக்காக வெளியிடப்பட்ட நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் இல்லை. ஆனால், சரஸ்வதி இடம்பெற்றார். பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், கட்சிக்குள் செல்வாக்கு குறையவில்லை. தேர்தல் பரபரப்பெல்லாம் ஓய்ந்து 'நார்மல் மோடு'-க்கு வந்திருப்பவரை கேள்விகளுடன் அணுகினோம்.

கேள்வி:இரண்டாவதுமுறையாக அதிமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது. மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிகிறதா?

அம்மா ஆட்சிக்கு வந்தவுடனேயே நல்ல அறிவிப்புகளை அறிவித்திருக்கிறார். தொடர்ந்து பல திட்டங்களை நிறைவேற்றுவார். மக்களின் எதிர்பார்ப்பு என்னவோ அது அம்மாவுக்குத் தெரியும். நிச்சயமாக, கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவார்.

கேள்வி:சென்னை மீண்டும் திமுக கோட்டையாகியிருக்கிறது. வெள்ளத்தின்போது சொன்ன குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியிருக்கிறது என எடுத்துக்கொள்ளலாமா?

இல்ல... திமுக செலவழித்த பணம். ஊடகங்களுக்கு அவர்கள் செலவழித்த பணத்தைவைத்து இந்தியாவே தேர்தலைச் சந்திக்கலாம். வாக்கு எண்ணிக்கை நடந்துகொண்டிருக்கும்போதே திமுக-தான் வெற்றிபெறப் போகிறது என்று டெல்லியில் இருக்கும் ஊடகங்களை வைத்தெல்லாம் சொல்லவைத்தார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் வரும் என மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர்காய்ந்தார்கள். ஆனால், அந்தக் குளிரிலும் அவர்களால் எதிர்க்கட்சியாகத்தான் அமரமுடிந்ததேயொழிய ஆட்சிக்கு வரமுடியவில்லை. மக்கள் தெளிவாக முடிவெடுத்திருக்கிறார்கள்.

கேள்வி:அதிமுக சார்பில் பல பெண் வேட்பாளர்கள் வெற்றிபெற்றிருக்கிறார்கள். ஆனால், பல்லாவாரத்தில் நீங்கள் தோற்றிருக்கிறீர்கள். இதற்கு வெள்ளம் காரணமில்லையா?

அதை தோல்வி என்று சொல்லமாட்டேன். வெற்றிவாய்ப்பை இழந்திருக்கிறேன். மக்கள் என்ன தீர்ப்பளிக்கிறார்களோ அதை நாங்கள் ஏற்போம். ஜெயிச்சா சந்தோசப்படுறோம்... வெற்றிவாய்ப்பு கிடைக்கலைன்னா சரி, மக்கள் தீர்ப்பளிச்சுருக்காங்கன்னு ஏத்துக்குறோம்.

கேள்வி:வலிமையான எதிர்க்கட்சியாகியுள்ள திமுக, அதிமுக-வுக்கு கடுமையான சவாலாக இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது. அதிமுக-வின் திட்டம் என்ன?

அதிமுக-வில் எத்தனையோ புதுமுகங்களுக்கு அம்மா வாய்ப்பளித்திருக்கிறார். அமைச்சரவையில் இடம்கொடுத்திருக்கிறார். ஆனால், திமுக-வுல... அதே துரைமுருகன், அதே எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அதே பொன்முடி... ஐ.பெரியசாமி அப்புறம் அவர் பையன்... எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர் அண்ணன் பையன்... கோடீஸ்வரர்களுக்கும், குடும்ப வாரிசுகளுக்கும் சான்ஸ் கொடுத்துருக்காங்க... காலங்காலமா பேசுறவங்களே மறுபடியும் வந்து பேசுறதுல என்ன ஆச்சரியம் இருக்கு? ஒரு ஏழைத்தொண்டன் எம்எல்ஏ-வாகி பேசுனா அதை நாம பாராட்டலாம். அதனால, இவுங்க எப்டி ஆக்கப்பூர்வமா செயல்படப் போறாங்கன்னு பாக்கத்தான போறோம்.

கேள்வி:டி.வி. விவாதங்களில் பயங்கர ஆக்ரோஷமா பேசுறீங்களே, பேச்சு ஆர்வம் எங்கிருந்து வந்தது?

எனக்கு சின்னவயசுல இருந்தே பேச்சுல ஆர்வம் உண்டு. எம்.ஜி.ஆர் அவர்களை நான் நேரில் பார்த்தது கிடையாது. ஆனா, அந்தக் காலத்துலயிருந்தே அதிமுகமேல ஈர்ப்பு உண்டு. நான் சினிமாவில் ரொம்ப பிஸியா இருந்தேன். நிறைய மொழிகளில் நடித்திருக்கிறேன். பல நல்ல கேரக்டர்கள் செய்திருக்கேன். 1999ல் அதிமுக-வில் சேர்ந்தேன். சினிமாவில் ஒரு பிரபலமா இருந்தது அரசியலுக்கு வர உதவியா இருந்தது. அரசியலுக்கு வந்ததிலிருந்தே அதிமுகவுலதான் இருக்கேன்.

கேள்வி:நீங்க சினிமால பிஸியா இருந்தப்போ, விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்தார். விஜயகாந்த் எப்படி? அவரோடு பழகியிருக்கீங்களா?

ஆங்... நான் நடிகர் சங்கத்துல உறுப்பினரே தவிர, சங்க நிகழ்ச்சியில எல்லாம் எந்தக் காலத்துலயும் கலந்துக்கிட்டதில்ல. ஏன்னா அப்பல்லாம் திமுக-காரங்கதான் சங்கத்துல அதிகமாக இருப்பாங்க. நான் சொல்றது 15 வருசத்துக்கு முன்னாடி. விஜயகாந்த்கூட நிறைய படங்கள்ல நடிச்சிருக்கேன். ஷூட்டிங் ஸ்பாட்ல நல்லா பேசுவார். அவருடைய பேச்சு அப்ப நல்லாருக்கும். எத்தனையோ தடவ எம்.ஜி.ஆர் பத்தியும், அம்மா பத்தியும் புகழ்ந்து பேசியிருக்காரு... அவ்ளோ சொல்லியிருக்காரு... நாங்க கேட்டிருக்கோம். ஆனா, அப்புறம் அரசியல்ல பிஸியாகிட்டோம். கூட்டணியில அவர் இருந்தப்பக்கூட அவர சந்திக்கிற வாய்ப்பில்லை. இன்னைக்கு அவரோட நிலைமை பரிதாபமா இருக்கு. அதிமுக இல்லாம எங்க போனாலும் என்ன ஆவாருன்னு தெரிஞ்சுக்கிட்டிருப்பார்.

கேள்வி:மறுபடியும் சினிமால நடிப்பீங்களா?

இல்ல. கடந்த ஆட்சியில நான் சோசியல் வெல்ஃபேர் சேர்மனா இருந்தேன். அது கவர்மெண்ட் போஸ்டிங். அதனால நடிக்கக்கூடாது. இப்ப தேர்தல்ல போட்டியிட்டதால ரிசைன் பண்ணிட்டேன். நல்ல ரோல் கிடைச்சா நடிப்பேன். ஆனா, அரசியல்தான் என்னோட 'ஃபர்ஸ்ட் ப்ரிபெரன்ஸ்'.

கேள்வி:மற்றவர்களை மதிப்பதில் ஜெயலலிதாவிடம் நல்ல மாற்றம் தெரிகிறது என்று செய்திகள் வெளியாகிறது. ஆனால் ஆரம்பத்தில் கலைஞர் கருணாநிதின்னு பேசுன நீங்க அப்பறம் மாறிட்டீங்களே?

அம்மா எப்பவுமே எல்லோருக்கும் மரியாதை கொடுப்பார். சுனாமி பாதிப்புக்கு நிதி கொடுக்க திரு.ஸ்டாலின் வந்தப்ப, அம்மா ஃபர்ஸ்ட் கேட்ட வார்த்தை 'அப்பா நல்லாயிருக்காங்களா?ன்னு தான். எங்களையும் அப்டித்தான் பேசச் சொல்லுவார். அவரோட பேரு கருணாநிதிதானே. கலைஞர் அவருக்கு கொடுக்கப்பட்ட பட்டம்தானே. அதானலதான் மரியாதையா திரு.கருணாநிதி அப்டின்னு சொல்றோம்.

கேள்வி:டி.வி. விவாதங்கள்ல பயங்கரமா சண்டை போட்டுக்கிறீங்க. பிரேக் விடும்போது என்ன பண்ணுவீங்க? சங்கடமா இருக்காதா?

(மெல்ல சிரித்துக்கொண்டே) அடுத்து பேச நோட்ஸ் எடுப்போம். என்ன பாயிண்ட் பேசியிருக்காங்களோ அதுக்கு ஏத்தபடி தயார் பண்ணுவோம். தொடர்ந்து பேசணுமில்லையா...

கேள்வி:விவாதத்துல சண்டை போடுறீங்க. மற்ற கட்சியினரோடு நட்பு இருக்கா? மற்ற கட்சியில உங்களுக்குப் பிடிச்ச பேச்சாளர் யாரு?

(கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும்போதே) அதெல்லாம் உண்டு. ஒவ்வொரு கட்சியிலயிருந்து பேச வர்றவங்களும் அவுங்க கட்சியை 'டிஃபெண்ட்' பண்ணுவாங்க. பொதுவா 'டீசெண்டா' பேசுற எல்லாரையும் எனக்குப் பிடிக்கும். ஈவிகேஎஸ்.இளங்கோவன் மாதிரியெல்லாம் பேசக்கூடாது. தனிமனித விமர்சனங்கள் எனக்குப் பிடிக்காது, நானும் அதை லைக் பண்றதில்ல.

கேள்வி:பிரேமலதா பத்தி என்ன நினைக்கிறீங்க?

அவுங்க கொஞ்சம் மரியாதையா பேசுனா நல்லாயிருக்கும்.

கேள்வி: கருணாநிதியிடம் ஒரு கேள்வி கேட்க வாய்ப்புக் கிடைச்சா என்ன கேப்பீங்க?

(சிரிக்கிறார்) அவர்கிட்டயா?... இப்டி திடீர்னு கேட்டா என்ன சொல்றது? ம்ம்ம்... எப்பவுமே குடும்பத்துக்காகவே அரசியல் பண்றீங்களே, மக்களுக்காகவும் கொஞ்சம் அரசியல் செய்யுங்கன்னு கேப்பேன்.

கேள்வி:ஜெயலலிதாவைப்பற்றி ஒரே வார்த்தையில் சொல்லுங்க?

எல்லா பெண்களுக்கும் ஒரு முன்னுதாரணம் அவுங்க.

கேள்வி:ஜெயலலிதா நீங்க பேசுறதை பாராட்டியிருக்காரா. எப்ப முதன்முதலில் பாராட்டினார்?

எப்பவுமே பாராட்டுவார். எப்பவெல்லாம் நல்லா பேசுறோமோ அப்பவெல்லாம் பாராட்டியிருக்கார். என்னை மட்டுமில்ல, யார் என்ன நல்ல விஷயம் செஞ்சாலும் அழைத்துப் பாராட்டுவார். அதான் எங்க 'அம்மா'.

-விவேக் செ

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon