மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

ஆபீஸ் டைம்: 8 டைப்ஸ் ஆஃப் மொதலாளீஸ்!

ஆபீஸ் டைம்: 8 டைப்ஸ் ஆஃப் மொதலாளீஸ்!

கார்ப்பரேட் கூடாரங்களாக மாறிப்போயிருக்கும் தொழில் நிறுவனங்களில், விசுவாசம் என்பது காஃபி மேக்கரில் உருவாக்கப்படும் நீர்த்துப்போன காஃபி போன்றது. நான் செய்யும் வேலைக்கு சம்பளம் தருகிறீர்கள் மிஸ்டர் முதலாளி. அதைத்தாண்டி வேறு என்ன என்னிடம் எதிர்பார்க்கிறீர்கள் என்ற மனநிலையில்தான் பலரும் வேலை செய்கிறார்கள். ஆனால் இந்த எண்ணம், பெல்பாட்டம் மொதலாளிகளுக்கு மட்டும்தான் சரிப்பட்டுவரும். அப்போது எந்தமாதிரியான முதலாளிகளுக்கு விசுவாசமாக இருப்பது சாத்தியப்படலாம்!...

மாஸ் முதலாளி:

ஒரு டீம் லீடருக்குக் கீழே வேலைசெய்யும் ஒவ்வொருவரும் வெவ்வேறு குணங்களையும், திறமைகளையும் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களின் திறமைகளை தனித்தனியே இனம்கண்டு, எந்த வேலையை யாருக்குக் கொடுக்கவேண்டும் என சரியாகக் கணிக்கும் டீம் மெம்பர்தான், டீம் லீடராக இருக்க சரியானவராக இருக்க முடியும். ஒரு டீமில் இருந்துவிட்டு டீம் லீடரானபிறகும், ‘நானும் இந்த டீமின் மெம்பர்’ என்ற எண்ணம் இருந்தால்தான் சிறந்த டீம் லீடராகச் செயல்படமுடியும். டீம் மெம்பராக இருந்தபோது, என் டீம் லீடர் செய்யும் தொந்தரவுகளை நினைத்து வருந்தியவர், அவர் டீம் லீடராக மாறியபின், மீண்டும் அதையே செய்தால் கண்டிப்பாக சிறந்த டீம் லீடராக வரமுடியாது. ‘தம்பி, நான் வேலை செய்யும்போதெல்லாம்’ எனத் தொடங்குவார்கள். ‘சார், நீங்க இப்ப வேலை செய்றதில்லைன்னு சொல்ல வர்றீங்களா?’ என கேட்கமுடியாவிட்டாலும், அவர்கள் சொல்வதை கேட்டுத்தான் ஆகவேண்டும். டீம் மெம்பர் சொல்லும் எந்த ஒரு யோசனையையும், நினைவில் வைத்துக் கொண்டு தேவையான சமயத்தில் தனது பெயரிலேயே உபயோகப்படுத்துவார் ஒரு நல்ல டீம் லீடர். அந்த யோசனை தோல்வியடைந்தால், அதற்கு தன்னையே காரணமாக்கிக் கொள்வார். ஆனால், வெற்றிபெற்றால் யோசனை சொன்னவரை அழைத்து, அனைவருக்கும் சொல்லி பாராட்டுகளை வாங்கித் தருவார். எனவே, அடுத்தமுறை சொல்லும் யோசனையால் டீம் லீடருக்கு எந்தப் பிரச்னையும் வந்துவிடக்கூடாது என நினைத்து ஒவ்வொரு டீம் மெம்பரும் வேலை செய்வார்கள். டீமின் செயல்பாடும் தனித்து விளங்கும்.

பணக்காரப் படிக்கட்டு:

ஒரு தொழிலாளியின் திறமை எது? என்பதை துல்லியமாக கணிக்கக்கூடிய முதலாளி கிடைத்துவிட்டால், பிறகு வாழ்வின் வளர்ச்சிபற்றி கவலைப்படவே தேவையில்லை. அவர்கள் சொல்லும் வேலையை செய்தால் மட்டும் போதும். சில சமயங்களில் ‘நம்மால் முடியாததை செய்யச் சொல்கிறாரே’ என்று தோன்றும். நாம் அதற்கு லாயக்கில்லை என்று தோன்றும். நமக்கே முடியாது என்று தோன்றுவதை, அடுத்தவர் செய்யச் சொல்கிறார் என்றால் அதற்கான தகுதி நமக்கு இருப்பதை ஏதோ ஒரு வேலையில் அவர் பார்த்திருப்பார் என்பதை மனதில்கொண்டு வேலை செய்ய வேண்டும். 100% தான் வெற்றி என்றால் 35 மார்க் எடுத்தால் பாஸ் என்று எதற்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதை யோசித்தால் வழி கிடைத்துவிடும். ஒரு வேலைக்காக நாம் எந்த அளவுக்கு நம் எல்லையைத் தாண்டி முயற்சி செய்கிறோம் என்பதில்தான் தொழில்துறையின் மிக முக்கிய வெற்றியே அடங்கியிருக்கிறது. சிலர் மாடியிலிருந்து தாவிச்செல் என்பார்கள், சிலர் தாவிச்செல்ல என்ன வேண்டும் எனக் கேட்பார்கள். இதில், தாவிச்செல்ல சொல்பவர்களிடம் கவனமாக இருந்தால் மட்டும் போதும். என்ன வேண்டும் எனக் கேட்பவர்கள் காப்பாற்றிவிடுவார்கள்.

கடவுள் சார் நீங்க:

முதலாளிகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முதல் விஷயம், தங்கள் வேலையை என்றும், யாரிடமும் கொடுக்காமல் இருப்பதைத்தான். மழையோ, புயலோ, வெள்ளமோ எதுவாக இருந்தாலும் அலுவலகத்துக்கு வந்துவிடுவார்கள். ஏன் விடுமுறை நாட்களில்கூட அலுவலகம் வந்து அடுத்த நாளுக்கான வேலையைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களைப் பார்க்கும்போது குற்றவுணர்ச்சி ஏற்படாதளவுக்கு வேலை செய்வதுதான் மிக முக்கியம். முதலாளிப் பொறுப்பை அடுத்தவரிடம் கொடுக்க எப்படி ஒரு முதலாளிக்கு மனம்வராதோ அதேமாதிரி, தொழிலாளி ஒருவர் தனது வேலையை இன்னொருவரிடம் கொடுக்காமல் அவரவர் வேலையை அவரவர் செய்ய வேண்டும். மற்றவரிடம் கொடுத்துவிட்டு சரியாகச் செய்தார்களா?இல்லையா? என்ற படபடப்பில் இருப்பதைவிட, தனது வேலையை முடித்துக் கொடுத்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம்.

சாந்தசொரூபன்:

முதலாளியின் குரல் மகிழ்ச்சியை வரவழைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். வந்துவிட்டார் எனத் தெரிந்ததும் ஒரு புன்னகையைக் கொடுத்து, மற்றொன்றை திரும்பப்பெற்று வேலையில் ஈடுபடுமளவுக்கு தொழிலாளர்கள் மதிக்கக்கூடியதாக இருக்கும். முதலாளிகளின் இலக்கணத்தில் இருக்கும் ஒரு முக்கிய விஷயம், அவர்கள் எவ்வளவு சத்தமாகப் பேசுகிறார்களோ அவ்வளவு மதிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள் என்பது. இது, ஆதிகால டெக்னிக். ஆனால், இப்போதெல்லாம் அமைதியான முதலாளிகளிடம்தான் அன்புடன் பணிபுரிகின்றனர் தொழிலாளர்கள். முதலாளியின் குரல் உயர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.

சி.ஐ.டி. சங்கர்:

முதலாளி நம்மை கவனிக்கவில்லை என்ற எண்ணம் எப்போதும் வந்துவிடக்கூடாது. முதலாளி எப்போதும் கவனித்துக்கொண்டேதான் இருப்பார். ஒருவரின் வேலை மட்டும், ஒரு நிறுவனத்துக்கு லாபகரமானதாக இருக்காது. ஒரு வாரம் கடினமாக உழைத்துவிட்டு ஒரு வாரம் விடுமுறையில் சென்றுவிட்டால் சரி வருமா? உடல்நலம், குடும்பம், காதல் என அபிஷியல் விஷயங்களைத் தாண்டி தொழிலாளியின் நலன்பற்றி விசாரிக்கும் முதலாளி கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. தொழிலாளியின் ஒவ்வொரு அசைவையும் முதலாளியிடம் சொல்ல அலுவலகத்தில் எப்போதும் ஒருவர் இருப்பார். ஆனால் அது அவரது தவறல்ல. அவரது விசுவாசத்தை வெளிக்காட்ட அவர் தனக்குத் தெரிந்த வேலையை, தெரிந்த விதத்தில் அவர் செய்கிறார் என்று விட்டுவிட வேண்டும். ஆனால், அவர்களை எப்படி நம் வேலையில் தலையிடவிடாமல் பார்த்துக்கொள்வது என்பது முதலாளிக்குத் தெரியும். குறிப்பிட்ட அளவை மீறினால் வேறுவேலை கொடுத்து அணைகட்டி திருப்பிவிட்டுவிடுவார். எனவே, எப்போதும் முதலாளி கண்டுகொள்ளவில்லை என்ற நினைப்புடன் வேலை செய்யாமல் இருக்கக்கூடாது.

ஷார்ப் பிளேடு:

முதலாளி சில அறிவுரைகளைச் சொல்லும்போது, ‘இவருக்கு டைம்பாஸ் ஆகலைன்னா நம்மளைக் கூப்பிட்டு மொக்கை போடுறார்’ என்ற எண்ணம் வரும். ஆனால், அந்த அறிவுரையின் அடிப்படையிலேயே ஒரு பிரச்னை வரும்போது தலையை சொறிந்தபடி அவர்முன் நிற்கும் நிலை ஏற்படும். இந்த மாதிரியான சம்பவங்கள் எப்போதும் எதேச்சையாக நடந்துவிடுவதில்லை. தொழிலாளர் நலன் அடிப்படையில் இல்லையென்றாலும், தொலைநோக்குப் பார்வையுடன் இன்றைய இவன், நாளை எப்படி இருப்பான் என்ற முன்கூட்டிய திட்டமிடலுடன் வழங்கும் அறிவுரைகள் அவை என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். சிலர் உண்மையாகவே வேலை செய்யவிடாமல் மொக்கை போடுவார்கள்தான். அவர்களையெல்லாம் தட்டிக் கழித்துவிடாமல் தட்டிக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். பின்னாளில் சிறந்த பொழுதுபோக்குக் கருவியாக உபயோகப்படுவார்கள்.

ட்விட்டர் பராபரமே:

தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் ஆக்டிவாக இயங்குபவர்கள் எல்லாம் அலுவலகத்திலிருந்து உபயோகிப்பவர்கள்தான். பிரச்னை இதுவல்ல. ட்விட்டர் போன்ற சமூக வலைதளத்தில் மிக நேர்த்தியாக, குறைவான வார்த்தைகளில் பேசக்கூடிய திறமை முதலாளியின் முன்பு பதில் சொல்லமுடியாமல் நின்ற அந்த அரை நிமிடங்கள்தான், ஒவ்வொரு தொழிலாளியையும் வார்த்தைகளை மாற்றிப்போட்டு, மிகப் பெரிய வசனத்தையும் ‘சுருக்’கென பேசவைத்தது. இதற்கெல்லாம் அவரிடம் நன்றி சொன்னால் வெளுத்துவிடுவார் என்பது வேறுவிஷயம் என்றாலும், மானசீகமாக அவர் செல்லும் திசையைப் பார்த்து ஒரு கும்பிடு வைக்கவேண்டியது ஒவ்வொரு ட்விட்டரியன்ஸின் கடமை.

சைலன்ட் கில்லர்:

வேலை செய்வது எதனாலும் பாதிக்கக்கூடாது என்று முதலாளி நினைப்பதுபோலவே, என்ன ஆனாலும் வேலைசெய்ய விட்டுவிடக்கூடாது என்பதில் சிலர் குறியாக இருப்பார்கள். வெற்றிபெற்ற தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்குத்தான் முதலாளியைவிட அதிகம் கடமைப்பட்டிருக்கிறார்கள். தடைகளைத் தாண்டி அடைவதுதான் வெற்றி. நீரோட்டத்தோடு சேர்ந்து மலையிறங்கி வந்தவனைவிட, எதிர் நீச்சல்மூலம் மலைமீதேறி நிற்பவனைத்தான் சமூகம் நிமிர்ந்து பார்க்கும்.

-சிவா

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon