மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

சிலை கடத்தல் -துணை நின்ற போலீஸ், சுங்கத்துறை அதிகாரிகள்!

சிலை கடத்தல் -துணை நின்ற போலீஸ், சுங்கத்துறை அதிகாரிகள்!

சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு பின்புலமாக இருந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதால்,இந்த விவகாரத்தில் அடுத்த அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாக உள்ளது.

தீனதயாளன் வீட்டில் இதுவரை நடந்த சோதனைகளில் மொத்தம் பல்வேறு உலோகங்களால் ஆன ஏறத்தாழ 300 சிலைகள் மற்றும் ஓவியங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர். மேலும் தீனதயாளனிடம் பத்து நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீனதயாளன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், அவரது செல்பேசி அழைப்புகள், கம்ப்யூட்டர் தகவல்கள் ஆகியவற்றை கொண்டு தீனதயாளனின் நெட்வொர்க்கை கண்டறியும் வேலையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதில் தீனதயாளன் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கொரியர் நிறுவனம் மூலம் முக்கிய சில கடத்தல்களை அரங்கேற்றி இருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கி இருப்பதால், அந்த நிறுவனத்தை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கின்றனர். தீனதயாளன் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிலை கடத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையின் மூலம், அவரது சிலை கடத்தலுக்கு தமிழகத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் பலர் துணையாக இருந்துள்ளது தெரிய வந்திருக்கிறது. அப்படி இருந்த அதிகாரிகளில் பலர் ஓய்வு பெற்று விட்டதாகவும் தெரிகிறது. எனவே, உடந்தையாக தற்போது வரை இருக்கும் போலீஸ் அதிகாரிகள் யார்? ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் யார்? என்ற பட்டியலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் ரகசியமாக தயாரித்து வருகின்றனர். அதேபோல சுங்கத்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் கப்பல் மூலம் சிலைகளை கொண்டு செல்லும் திட்டத்தை கச்சிதமாக செயல்படுத்த முடியாது. எனவே, கப்பல் மூலம் சிலைகளை கடத்திச் செல்ல துணையாக நின்ற அதிகாரிகள் யார்? பணியில் இருக்கும் போது உதவி செய்து விட்டு தற்போது வரை திட்டம் வகுத்துக் கொடுத்து வரும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் யார்? என்று போலீஸார் தீனதயாளனிடம் விசாரித்தனர். அவர் சில உயரதிகாரிகள் பெயரை சொல்லி இருக்கிறார். இதைத்தொடர்ந்து அடுத்த சில தினங்களில் அந்த உயரதிகாரிகள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு, கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக போலீஸ் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி இருக்கிறது.

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon