மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

கோவை- காட்டுயானையை கும்கி வெல்லுமா?

கோவை- காட்டுயானையை கும்கி வெல்லுமா?

ஒற்றைக் காட்டுயானையுடன் கூட்டுச்சேர்ந்து மிரட்டும் இரண்டு யானைகள்

கோவை மதுக்கரை பகுதியில், கடந்த சில மாதங்களாக காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்துவருகிறது. கடந்த ஜனவரி மாதம் இந்த யானையை விரட்டச்சென்ற வன ஊழியர் ஒருவர், யானையின் காலால் மிதிபட்டு உயிரிழந்தார். கடந்த ஆண்டு, அந்த யானை தாக்கி இரண்டு விவசாயிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, முதுமலை யானைகள் காப்பகத்திலிருந்து ‘விஜய்’ என்ற கும்கி யானை நேற்று முன்தினம் கோவை வந்தது. இதேபோன்று, கோவை சாடிவயல் பகுதியிலிருந்து பாரி மற்றும் சுசி என்ற கும்கி யானைகள் நேற்று இப்பகுதிக்கு அழைத்துவரப்பட்டது.

மேலும், டாப்சிலிப் பகுதியில் இருந்து கலீம் என்ற கும்கி யானையும் வரவுள்ளது. இந்த கும்கி யானைகளைக் கொண்டு வனத்துறையினர், ஒற்றை காட்டுயானையை விரட்டும் ‘மிஷன் மகாராஜா’ திட்டத்தை தீட்டியிருக்கின்றனர்.

இந்த கும்கி யானைகளைப் பராமரிப்பது, அவற்றுக்கு உணவு வழங்குவது மட்டுமின்றி, ஒற்றை யானையின் நடமாட்டத்தை 24 மணி நேரமும் கண்காணிக்கவும் வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்புக் காவலர்களைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அட்டகாசம் செய்யும் அந்த ஒற்றை யானையுடன் மேலும் இரண்டு யானைகள் சுற்றித் திரிவது தெரியவந்துள்ளது. காட்டு யானையைப் பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ள இடமான தர்மலிங்கம்மலை பகுதியில் நேற்று 3 யானைகள் சுற்றியுள்ளன. அங்கிருந்த குடிநீர்த் தொட்டியில் இருந்து தண்ணீர் குடித்த யானைகள் மரப்பாலத்தில் உள்ள ரயில்நிலைய பகுதிவழியாகச் சென்றுள்ளன.

அப்போது மரங்களைச் சாய்த்து அட்டகாசம் செய்துள்ளது. ஆனால் வனத்துறையினரோ, `காட்டு யானையுடன் சுற்றும் இரண்டு யானைகளைப்பற்றி கவலையில்லை. அவை பட்டாசு போட்டாலே காட்டுக்குள் சென்றுவிடும். ஒற்றை யானைபோல அவை அட்டகாசம் செய்வது இல்லை. எனவே, இப்போது எங்களது முழுக்கவனமும் அட்டகாசம் செய்யும் யானையை பிடிப்பதில்தான் உள்ளது’ என்று தெரிவித்துள்ளனர். கோவை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், யானையைப் பிடிக்கும் வழிமுறைகள் மற்றும் தேவைப்படும் உதவிகள் குறித்து வனத்துறையினர் விளக்கிக் கூறினர்.

இதைத்தொடர்ந்து, யானையைப் பிடிக்கும் பணிக்குத் தேவையான போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், வருவாய்த் துறையினர், கால்நடை பராமரிப்புத் துறையினரை தயார்நிலையில் இருக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், யானையைப் பிடிக்கும்வரை மதுக்கரை பகுதியில் பொதுமக்கள் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை வெளியில் நடமாட்டத்தை குறைத்துக்கொள்ளுமாறு தண்டோராமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. மழையில்லாத நேரத்தில் ஒற்றை யானை சமவெளிப் பரப்புக்கு வரும்போது, அதை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒற்றை யானையைப் பிடித்தவுடன் ஆனைமலை புலிகள் காப்பத்துக்கு உட்பட்ட டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு கூண்டுக்குள் அடைத்து காட்டு யானையை கும்கியாக மாற்ற பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக, மூங்கில்களைக் கொண்ட கூண்டுகள் தயாராகிவருகிறது. அவற்றையும், அங்கு செய்யப்பட்ட ஏற்பாடுகளையும் ஆய்வு செய்வதற்காக வனத்துறை நிபுணர் குழு ஒன்று ஆனைமலை சென்றது.

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon