மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 20 ஜன 2020

மேஜிக் ஸ்கூல் - செல்லக்குட்டி

மேஜிக் ஸ்கூல் - செல்லக்குட்டி

பூரணி பள்ளிக்குள் நுழைந்தபோது, பள்ளியே வித்தியாசமாக இருந்தது. வாசலில்

வாட்ச்மேன் இல்லை. உள்ளே சென்றால் பிரேயர் நடக்கும் இடத்தில் பெரியதாக

இரண்டு மரங்கள் இருந்தன. பிரேயரில் மாணவர்கள் நிற்கும் இடத்தில் பந்தல்

போடப்பட்டு நிழலாக இருந்தது. 10-ஏ வகுப்பு வாசல் பூக்களால்

அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதற்கு அடுத்திருந்த 10-பி வகுப்பு வாசல்

பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இப்படி ஒவ்வொரு வகுப்பும் வித்தியாசமாக ஏன் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது என யோசித்துக்கொண்டே தன் வகுப்பான 6-சிக்குச் சென்றாள். தன் வகுப்பு வாசல் பலவண்ண பலூன்களால்

அலங்கரிக்கப்பட்டிருந்ததைப் பார்த்ததும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தாள்.

நேற்று இதெல்லாம் இல்லையே... இன்று எப்படி மேஜிக் செய்ததுபோல மாறியது என்று யோசித்துக்கொண்டே அவளின் க்ளோஸ் ஃப்ரெண்ட் அகிஷாவைத் தேடினாள்.அப்புறம்தான் அவளுக்கே உரைத்தது. பள்ளியில் யாருமே இல்லை, அவள் மட்டும்தான் இருக்கிறாள். கொஞ்சம் பயமாக இருந்தாலும் பள்ளியில் வேறு என்ன மாற்றம் நடந்திருக்கிறது; இதையெல்லாம் யார் செய்தது எனத் தெரிந்துகொள்ளும் ஆவல் வரவே வகுப்புக்குள் நுழைந்தாள். வகுப்பிலிருந்த போர்டு, டி.வி. திரைபோல மாறியிருந்தது. அதில் இன்று நடத்தப்போகிற பாடங்கள் எல்லாம் அனிமேஷன் வீடியோக்களாக ஓடிக்கொண்டிருந்தது. வகுப்பு மூலையில் தினேஷ் மட்டும் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு அருகில் சென்ற பூரணி,

"டேய் தினேஷ், என்னடா இது நம்ம ஸ்கூல் இப்படி மாறிடுச்சு" என்றாள்.

அதிர்ச்சியான தினேஷ் பூரணியைப் பார்த்து,

"பூரணி இந்த மாற்றம் எல்லாம் உன் கண்களுக்கும் தெரியுதா?" என்று கேட்டான்.

"ஆமாம், தெரியுதே" என்றாள் பூரணி.

"எனக்கு ஆறு மாதங்களாக இப்படித்தான் தெரியுது. என் பக்கத்தில்

உட்கார்ந்திருக்கிற ஆகாஷ்கிட்ட சொன்னேன். அவனுக்கு எதுவும்

தெரியலைன்னுட்டான்" என்றான் தினேஷ். அதைக் கேட்டதும் பூரணி

ஆச்சரியமானாள்.

"உன் கண்களுக்கு மட்டும் தெரியுதா, எப்படி அது?" என்றாள் பூரணி.

"இதுக்கே ஷாக்கான எப்படி. வா, உனக்கு மயக்கம் வர்ற அளவு மாற்றங்களைக்

காட்டறேன்" என்று சொல்லிவிட்டு, வகுப்பைவிட்டு வெளியே வந்தான் தினேஷ்.

அவனைப் பின்தொடர்ந்தாள் பூரணி. வகுப்பறைகள் இருக்கும் கட்டடத்தின்

பின்புறத்துக்கு பூரணியை அழைத்துவந்தவன், பூரணியின் கண்களைப் பொத்தி,

சிறிதுதூரம் அழைத்துச் சென்றான். பிறகு, கண்களைத் திறந்ததும் பூரணி கண்ட

காட்சியில் உறைந்தே போனாள்.

அந்த இடமே வெள்ளை வெளேரென பனிக்கட்டி பிரதேசமாக இருந்தது. அதில் சிலர் பனிக்கட்டியில் சறுக்கிக் கொண்டு விளையாடிக்கொண்டிருந்தனர். தினேஷூம் அவர்களோடு சேர்ந்து விளையாட ஆரம்பித்தான். பூரணியையும் கைகாட்டி அழைத்தான். அவளும் சென்று அவர்களோடு விளையாடினாள். சறுக்கிக்கொண்டே சிறிது தூரம் சென்றதும் அங்கே ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அதில் சிவப்பு, நீலம், மஞ்சள் நிறங்களில் பெரிய பெரிய மீன்கள் நீந்திக்கொண்டிருந்தன. அங்கே ஒருவர் மீன் பிடித்துக்கொண்டிருந்தார். ஆனால், அவர் வைத்திருந்த தூண்டில் வித்தியாசமாக இருந்தது. நீளமான கம்பின் முடிவில் சிறிய கூடைபோல வலை இருந்தது. அதை ஆற்றில் மூழ்கச்செய்ததும் மீன்கள் அதில் ஏறிக்கொள்கின்றன. அவர் அந்த மீன்களை கரைக்குக் கொண்டு வருகிறார். அந்த மீன்களோடு அருகேயிருந்த சிறுவர்கள் விளையாடுகின்றனர். கொஞ்சநேரம் விளையாடியதும் அவர் அந்த மீன்களை மீண்டும் ஆற்றிலேயே விட்டுவிடுகிறார்.

பூரணி திரும்பிப் பார்க்க, தினேஷ் பள்ளியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தான்.

பூரணியும் ஓடிச்சென்று அவன் கைகளைப் பிடித்துக்கொள்ள, இருவரும்

பள்ளிக்குத் திரும்பினர். என்ன ஆச்சரியம். இருவரும் பள்ளிக்கு வந்ததும்

நேற்று இருந்த பள்ளிபோலவே மாறியிருந்தது.

"எப்படிடா தினேஷ்" என்றாள் பூரணி.

"நேற்று நீ 'Welcome to magic school' புத்தகம் படிச்சியா?" என்று கேட்டான் தினேஷ்.

"ஆமாம், அது எப்படி உனக்குத் தெரியும்" என்றாள் பூரணி.

"நான் ஆறு மாதங்களுக்குமுன்பே அந்த புத்தகத்தைப் படித்தேன். அது

படித்த நாளிலிருந்து நம்ம ஸ்கூல் இப்படி மாறிவிட்டது" என்றான் தினேஷ்.

"அப்படி என்றால் தினமும் இப்படி இருக்குமா?" என்ற பூரணியிடம், ஆமாம்

என்பதுபோல தலையாட்டினான் தினேஷ்.

"அப்படின்னா ஜாலிதான்" என்று சத்தம் போட்டபடியே 6-சி வகுப்பை நோக்கி

ஓடினாள் பூரணி.

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon