மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 29 ஜன 2020

மதன் விவகாரம் மவுனம் கலைந்த பச்சமுத்து!

மதன் விவகாரம் மவுனம் கலைந்த பச்சமுத்து!

`மதனுக்கும் தனக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை’ என்று கூறிவந்த பச்சமுத்து எனும் பாரிவேந்தர் தற்போது, மதன்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி போலீசில் புகார் மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

`காசியில் சமாதி அடையப்போகிறேன்!’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, கடந்த 29ம் தேதி காணாமல்போன மூவேந்தர் மூவீஸ் மதனை, போலீசார் நாடு முழுவதும் தேடிக்கொண்டிருக்கின்றனர். அந்தக் கடிதத்தில் தன்னுடைய நெருக்கடிகளை எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் மற்றும் ஐ.ஜே.கே.கட்சித் தலைவர் பச்சமுத்து எனும் பாரிவேந்தர்தான் தீர்த்துவைக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்ததால், மாயமான நாள்முதல் ஆரம்பமானது உச்சகட்ட பரபரப்பு. இதைத்தொடர்ந்து, `மதனுக்கும் தனக்கும் எந்தவிதச் சம்மந்தமும் இல்லை’ என்று பச்சமுத்து அறிக்கைவிட்டார். இன்னொருபுறம் `மருத்துவப் படிப்புகளுக்கு ரூ.200 கோடி வரை வசூலித்து தலைமறைவாகிவிட்டார்’ என சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மதன்மீது புகார்கள் குவிந்தன. இந்நிலையில், `பச்சமுத்துவையும், அவரது மகன் ரவியையும் விசாரித்தால் உண்மை தெரியவரும்’ என்றுகூறி மதனின் தாயார் தங்கம், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து, கடந்த 9ம் தேதி, இந்த விவகாரத்தின் விசாரணை அதிகாரியாக, கூடுதல் துணை ஆணையர் ராதாகிருஷ்ணனை நியமித்த உயர்நீதிமன்றம், போலீசார் இரண்டு வாரங்களுக்குள் மதனைக் கண்டுபிடித்து உயிருடன் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதற்கிடையில், இந்த விவகாரம்குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பச்சமுத்துமீது கடும் விமர்சனங்களை முன்வைத்தது மட்டுமின்றி, அவர்மீதும் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம்மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். உடனடியாக பச்சமுத்து ராமதாஸை கடுமையாக விமர்சித்து அறிக்கைவிட்டார்.

மதன் விவகாரம் அரசியல் மோதலாக திசைமாற ஆரம்பித்தது. இதைத்தொடர்ந்து, பாமக சார்பாக அதன் துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, பச்சமுத்துவுக்கு எதிராக நீண்ட அறிக்கை ஒன்றைக் கொடுத்தார். அதில் பச்சமுத்துமீதும் அவரது பல்கலைக்கழகம்மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் இந்த விவகாரத்தில் பச்சமுத்து விசாரணைக்குத் தயாரா? எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ராமதாஸின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும்நோக்கில் அறிக்கை வெளியிட்டதாகக் கூறி, எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பச்சமுத்துவுக்கு எதிராக அக்கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், பாமக-வின் வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சத்தியநாராயணன் இதுகுறித்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுமீதான விசாரணை, வரும் 24ம் தேதி நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில், பச்சமுத்து சார்பில் அவரது வழக்கறிஞர் பாலு, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இன்று காலை புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், `ஐ.ஜே.கே. கட்சியில் பொறுப்புவகித்த மதன், கடந்த பிப்ரவரி மாதமே கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு, அவருக்கும் எனக்கு எந்தச் சம்மந்தமும் இல்லை. எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் பெயரைக்கூறி மொத்தம் 102 மாணவர்களிடம் மருத்துவப் படிப்புகளுக்கு பல கோடி ரூபாயை வசூலித்துக் கொண்டு மதன் தலைமறைவாகிவிட்டார். எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் பெயரில், போலி ஆவணங்களை தயாரித்து என்னுடைய கையெழுத்தைப் போட்டு பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டார். மேலும் வாரணாசியில் இருந்துகொண்டே தனது குடும்பத்தின்மூலம் மருத்துவப் படிப்புகளுக்கு பல கோடி ரூபாயை அவர் வசூல் செய்தார். இந்த விவகாரத்தின் மதனின் தாயார் மற்றும் அவர் மனைவியை விசாரிக்க வேண்டும். மதனை கண்டுபிடித்து அவர்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

மதன் மாயமானவுடன் அவருக்கும் தனக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை என்று கூறிவந்த பச்சமுத்து, அதன்பிறகு மதன் குறித்து எதுவும் பேசவில்லை. மதனின் தாயார் மற்றும் மனைவி, `பச்சமுத்துவை விசாரித்தால் உண்மை தெரியவரும்’ என்று கூறியபோதும் உடனடியாக அவர்கள்மீது எந்தக் குற்றச்சாட்டையும் வைக்கவில்லை. ஆனால், தற்போது அவர் தன்னுடைய கட்சியில் பொறுப்பு வகித்துவந்ததாகக் கூறி, அவர்மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் பச்சமுத்து முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon