மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 அக் 2019

அதிக உப்பு… ரொம்ப தப்பு

அதிக உப்பு… ரொம்ப தப்பு

உடலில் உப்பின் அளவு கொஞ்சம் அதிகரித்தாலும் பிரச்னைதான். நம் உடலில் உப்பின் அளவு கூடுவதாலும் குறைவதாலும் பல்வேறு விளைவுகள் ஏற்படுகின்றன. அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், கீரைகள் எல்லாவற்றிலுமே இயற்கையான உப்பு வகையில் ஒன்றான சோடியம் குளோரைடு (நாம் பயன்படுத்தும் சமையல் உப்பு) கலந்திருக்கிறது. உப்பில் கலந்துள்ள அயோடின் சத்து குறைபாட்டாலும் சில வகையான பாதிப்புகள் மனிதர்களுக்கு ஏற்படும். இதில் முக்கியமானது, முன் கழுத்துக் கழலை நோய். புத்திக்கூர்மை இல்லாமல் மந்தமாக இருக்கும் நிலைக்கும், உடலில் போதுமான அளவுக்கு அயோடின் இல்லாததே காரணம்.

உடலில் உப்பு அதிகம் சேர்வதால் சிறுநீரகக் கற்கள் உருவாகும். நீரிழிவு நோய்க்குக் காரணமாகும். உயர் ரத்த அழுத்தத்துக்கு உப்பே முழு முதல் காரணம். நான்கு பேர் இருக்கும் ஒரு குடும்பத்துக்கு ஒரு நாளைக்குத் தேவையான அதிகபட்ச உப்பின் தேவை 4 டீஸ்பூன்தான். மனிதன் ஆரோக்கியமாக வாழ, ஒரு நாளைக்கு 2 கிராம் அளவுக்கு மேல் உப்பு தேவையில்லை. உப்பைக் குறைக்கக் குறைக்க அதற்கேற்ப உங்களுடைய படபடப்பும் குறைவதை உணரலாம்.

பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளான பர்கர், பீட்ஸா போன்றவற்றிலும் அதிக உப்பைச் சேர்க்கிறார்கள். இது உடலுக்குத் தீங்கை விளைவிக்கும். அதிக உப்பைக் கொண்ட வடாம், வத்தல், மோர் மிளகாய் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. அயோடின் கலந்த டேபிள் சால்ட்டைவிட, சாப்பாட்டில் கல் உப்பைப் பயன்படுத்துவதே சிறந்தது.

பழங்கள், காய்கறிகளில் இயல்பிலேயே அதிகமாக இருக்கும் பொட்டாசியம் சத்து உடலில் உப்பு சேர்வதைக் கட்டுப்படுத்துகிறது. அதனால், இவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். இதிலிருந்து பெறப்படும் வைட்டமின் - பி, சிறுநீரகச் செயல்பாட்டைச் சீராக்கி, ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் இருப்பதற்கு உதவும். தினமும் 30 நிமிடங்கள் வேகமாக நடப்பது, ஓட்டப் பயிற்சி, நீச்சல் போன்றவற்றைச் செய்வதன்மூலம் உடலில் உப்பு தங்காமல் பார்த்துக்கொள்ளலாம். வியர்வையின் மூலமாக உப்பு அதிகம் வெளியேறுகிறது. சிறுநீரகத்துக்கு வேலைப் பளுவும் குறைகிறது. இந்த நடைமுறைகளைக் கடைப்பிடித்தால், உடலில் உப்பு ஏற்படுத்தும் பிரச்னைகளைக் கட்டுப்படுத்தலாம்.

‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்னும் பழமொழியைச் சொல்லிச் சொல்லி, சாப்பிடும் எல்லாப் பண்டங்களிலும் உப்பைச் சேர்த்துவிடுகிறோம். ஆனால், ‘உப்பைத் தின்னவன் தண்ணிய குடிப்பான்; தப்பை செஞ்சவன் தண்டனை பெறுவான்’ என்றொரு பழமொழியும் இருக்கிறது என்பதையும் மறந்து விடாதீர்கள்.

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon