மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 27 ஜன 2020

இந்தியர்களைத் தாக்கும் பிரதான நோய்

இந்தியர்களைத் தாக்கும் பிரதான நோய்

இந்தியா கடந்த பத்தாண்டுகளில், குள்ளத்தன்மை உள்ள குழந்தைகளின் பிறப்பைக் குறைத்து சாதனை படைத்துள்ளது. இது ஒருபக்கம் சந்தோஷமாக இருந்தாலும், இன்னொருபக்கம் உடல் பருமன் காரணமாக நீரிழிவு நோய் தாக்கும் ஆபத்து உள்ளவர்கள் அதிகமுள்ள நாடாக இந்தியா உருவாகியுள்ளது என்கிறது உலக ஊட்டச்சத்து நிறுவனம்.

உலகளவில் மூன்றில் ஒரு பங்கு அதாவது, 5 வயதுக்குட்பட்ட 159 மில்லியன் குழந்தைகள் குள்ளத்தன்மையுடன் இருக்கிறபோது, இந்தியா 2006ம் ஆண்டில் 48 சதவிகிதமாக இருந்த குள்ளத்தன்மை நோயை 2014ம் ஆண்டு 38 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. குள்ளத்தன்மை படிப்படியாக வளரக்கூடிய நோயாகும். ஊட்டச்சத்துக் குறைபாடும், மீண்டும் மீண்டும் தொற்று நோய்களின் தாக்குதலும்தான் குள்ளத்தன்மைக்குக் காரணம். ஊட்டச்சத்தின்மை என்ற பிரச்னையை எளிதில் குறைத்துவிட்டாலே இந்த நோயை எளிதில் வென்றுவிடலாம். இந்தியா தற்போது, ஊட்டச்சத்தின்மையை குறைப்பதற்கான எல்லா முயற்சிகளையும் செய்து உலகளவில் நிலையான வளர்ச்சி இலக்கை அடைவதுதான் முக்கிய குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

ஆனால், இன்றைய இந்தியாவின் பிரதான பிரச்னை குண்டு மனிதர்கள். நீரிழிவு நோய்க்கு பிரதான காரணமே உடல் பருமன்தான். அண்மையில் வெளியான உலக சுகாதார அமைப்பு கொடுத்த தகவலின்படி, இந்தியாவில் 2000ம் ஆண்டில் 32 மில்லியனாக இருந்த நீரிழிவு நோய் 2013ம் ஆண்டில் 63 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதாவது, இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதை இப்படியேவிட்டால் அடுத்த 15 வருடங்களுக்குள் 101.2 மில்லியனாக நீரிழிவு நோய் அதிகரித்துவிடும். ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது, கிராமப்புறங்களில் முக்கியமான சவாலாக உருவாகியுள்ள நிலையில், இன்னொருபக்கம் உடல் பருமன் குறைப்பிலும் இளையோர் கவனம் செலுத்தவேண்டும். அதேபோல, இதய நோய்க்கு ஆட்படும் மக்கள் தங்களின் வருவாயில் 30% சிகிச்சைக்கு செலவிடுகிறார்கள். எதிர்கால இந்தியர்களின் இலக்கில் நோயற்ற வாழ்வுக்காக நாம் போராட வேண்டியிருக்கும் என்பதைத்தான் இந்தத் தகவல்கள் நமக்கு உணர்த்துகின்றன.

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon