மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 20 ஜன 2020

மோசமான பிசினஸ் மூளைக்கு இதுதான் உதாரணம்

மோசமான பிசினஸ் மூளைக்கு இதுதான் உதாரணம்

கூலிங்குக்காக 2 ரூபாய் அதிகம் வாங்கினால் கொந்தளிக்கும் சமூகத்தினர் நாம். பக்கத்தில் வேறு கடையில்லாவிட்டால் கூலாக அதை வாங்கிவிட்டு வந்துவிடுவோம் என்பது வேறு விஷயம். ஆனால், வேறு வழியில்லை என்றால் எவ்வளவு செலவானாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல், இருப்பதை வாங்கிக்கொள்ளும் நம் மனநிலையை தங்கள் வியாபாரத்துக்காக பிசினஸ் மூளைகள் பக்காவாக பயன்படுத்திக் கொள்கின்றன.

300 ml கோகோ கோலா கேனை உள்ளூர் மளிகைக் கடையில் வாங்கினால் 30 ரூபாய். அதையே மெக் டொனால்ட்ஸ், ஹல்டிராம்ஸ் போன்ற வணிகப் பெரும் நிறுவனங்களின் கடைகளில் வாங்கினால் 100 ரூபாய். முதலில் இதன் விலை 60 ரூபாயாகத்தான் இருந்தது. ஆனால், நேற்று இரவு முதல் அது 100 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜுன் மாத வெயிலை தங்களுக்கு சாதகமாகக் கருதும் இந்தப் பெரும் நிறுவனங்கள் எம்.ஆர்.பி. விலை 100 ரூபாயாக இருந்தாலும் பழைய அடக்க விலைக்கே (60 ரூபாயாக இருந்தபோது வாங்கிய விலைக்கே) வாங்கி ஒரு கேனுக்கு 50 ரூபாய் லாபம் பார்த்து வருகின்றனர்.

இந்த அநியாயத்தை தட்டிக்கேட்க ஆளில்லையா என்று டென்ஷனாகும் கோக் குடிமகன்களுக்கு, ஒரே அளவு இருந்தாலும் அதை வேறவேற எம்.ஆர்.பி. ரேட்டில் விற்பனை செய்வது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. நாங்கள் சட்டத்தை மதிப்பவர்கள் என்று கூலாக பதில் சொல்கிறார் கோகோ கோலா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்.

இதேபோல் விமானங்கள், மல்டி பிளெக்ஸ் மால்களில் விற்கப்படும் கோகோ கோலா கேனின் விலையும் 70 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திடீர் விலையேற்றத்தால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் விலைகுறித்து ஹை-ஃபை விற்பனையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் கோகோ கோலா தரப்பு தெரிவித்துள்ளது.

கோகோ கோலாவை பேசிவிட்டு பெப்சி பற்றி பேசவில்லையென்றால் எப்படி? சில்லறை மளிகைக் கடைகளில் கோக்கைப் போலவே 30 ரூபாய்க்கு கிடைக்கும் பெப்சி, ஹல்டிராம்ஸ், மெக் டோனல்ஸ் போன்ற இடங்களில் கணிசமான விலையில் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon