மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 29 ஜன 2020

இனி, 300 கிராம் டி-ஷர்ட்டுக்கு ரூ. 20 ஆயிரம் பில் வராது!

இனி, 300 கிராம் டி-ஷர்ட்டுக்கு ரூ. 20 ஆயிரம் பில் வராது!

இணைய வர்த்தகத்தின் ஜாம்பவானான ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் பெங்களூரைச் சேர்ந்த விற்பனையாளர் ஒருவர் 300 கிராம் எடை கொண்ட காட்டன் டி-ஷர்ட் ஒன்றை அனுப்புவதற்காக அந்நிறுவனத்தின் கிடங்குக்குச் செல்கிறார். பார்சலை அனுப்பியும் விடுகிறார். அதற்காக, அந்த விற்பனையாளருக்கு ஃபிளிப்கார்ட் கொடுத்த பில் தொகை எவ்வளவு தெரியுமா? 20 ஆயிரம் ரூபாய்.

ஆம். ஃபிளிப்கார்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை முதலில், அதன் விற்பனையாளர்கள் அனைவரும் அருகிலுள்ள ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் கிடங்குக்கு வந்தே பார்சல்களை அனுப்ப முடியும். இரண்டாவதாக, ஒரு மாதத்துக்கு ஒரு கோடி பரிவர்த்தனைகள் வரை நடந்தாலும், அங்கு மேனுவல் பில்லிங் முறையே பின்பற்றப்படுவதால் மேலே சொன்ன டி-ஷர்ட் விவாகரம் உட்பட ஃபிளிப்கார்ட்டுக்கும் விற்பனையாளர்களுக்கும் இடையே ஏகப்பட்ட பஞ்சாயத்துகள். (இன்னும் அவை முடியவில்லை என்பது தனிக்கதை)

இந்த பஞ்சாயத்துகள் எல்லாவற்றுக்குமே முடிவுகட்டும்விதமாக பொருட்களை அனுப்பும் கொள்கையில் (shipping policy) மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இந்த புதிய மாற்றத்தின்படி, இனி ஃபிளிப்கார்ட் விற்பனையாளர்கள் யாரும் அந்நிறுவனத்தின் கிடங்குக்குச் செல்ல வேண்டியதில்லை. இதற்குமாறாக, தங்களின் விற்பனையகத்திலிருந்தே அவற்றை எடை போட்டு அனுப்பிவிட முடியும். ஃபிளிப்கார்ட்டின் இந்த முடிவு அதன் விற்பனையாளர்களை நிம்மதிப் பெருமூச்சுவிடச் செய்துள்ளது. வருகிற ஜுன் 20ம் தேதி முதல் இந்தப் புதிய மாற்றம் அமலுக்கு வருகிறது.

இதற்கிடையில் தீபாவளிக்கு முன்னதாகவே, ஃபிளிப்கார்ட் விற்பனையாளர்கள் எலக்ட்ரானிக் எடைக்கருவி மற்றும் பார்சல்களை பேக்கிங்செய்யும் கருவிக்காக 50 ஆயிரம் ரூபாய் கட்டியுள்ளனர். அகில இந்திய ஆன்லைன் விற்பனையாளர்கள் சங்கத்தின் (AIOVA) உறுப்பினர்களாக உள்ள ஆயிரம்பேரிடம் இருந்து மொத்தம் 50 கோடி ரூபாய் ஃபிளிப்கார்ட் தரப்பிலிருந்து பெறப்பட்டுள்ளது. இது, பெரும் பொருளாதார ஊழல் என்று குற்றம் சாட்டுகின்றனர் ஆன்லைன் விற்பனையாளர்கள் சங்கத்தினர்.

இந்தப் பிரச்னை குறித்தும், பிப்ரவரி மாதத்திலிருந்து கொடுத்த ஆர்டர்களுக்கான பணத்தையும் மே மாதத்துக்குள் திரும்பத்தர வலியுறுத்தியும் கடந்த ஏப்ரல் மாதம் ஃபிளிப்கார்ட் நிறுவனத்துடன் சங்கத்தினர் பேசியுள்ளனர். ஆனால், ஃபிளிப்கார்ட் தரப்போ இதில் ஆர்வம் காட்டாததோடு, விற்பனையாளர்களுக்கு செட்டில்மென்ட் தொகைக்கான உரிய ஆவணத்தைக்கூட கொடுக்கவில்லை என்று வருத்தத்துடன் குறிப்பிடுகின்றனர்.

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon