மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 20 ஜன 2020

ஸ்மார்ட்போன் ஸ்கிரீனுக்கு செலவழிக்கும் மக்கள் - ஆய்வு

ஸ்மார்ட்போன் ஸ்கிரீனுக்கு செலவழிக்கும் மக்கள் - ஆய்வு

நம்மூரில் செல்போன் அறிமுகமான புதிதில் நோக்கியா நிறுவனத்தின் போன் பலரையும் எளிதில் சென்றடைந்தது. அதற்கு முக்கியமான காரணம் நீண்ட நேரம் சார்ஜ் நிற்பது. இன்னொன்று, நோக்கியா போன் கைத்தவறி கீழே விழுந்தாலும் பெரிய பாதிப்புகள் ஏதுமின்றி மீண்டும் பயன்படுத்தலாம். ஆனால், ஸ்மார்ட்போன்கள் வந்த பிறகு இந்த நிலை மாறியது. சார்ஜ் ஒரு பிரச்னை என்றால், இன்னொரு புறமோ, கைத்தவறி கீழே விழுந்தாலும் போச்சு. ஸ்கிரீன் சுக்குநூறாக உடைந்துவிடும். ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமே டச் ஸ்கிரீன் தான். இவற்றுக்கு பட்டன் என்ற ஒன்றே இல்லாததால், செல்போன் எண் தட்டச்சு செய்வது, டைப்படிப்பது என சகலத்துக்கும் டச்சப் வேண்டும் என்பதே.

எனவே ஸ்கிரீன் உடைந்துவிட்டால், மீண்டும் மாற்ற அதிக அளவில் செலவாகும். ஸ்மார்ட்போன் கொரில்லா ரக ஸ்கிரீன் தயாரிக்கும் கோர்னிங் என்ற நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில், ஸ்மார்ட்போன் என்பது மிக முக்கியம், அது இல்லாமல் எங்களால் வாழவே முடியாது என்று 66 சதவிகிதத்தினர் கூறியுள்ளனர்.

தாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களிலேயே மிக மதிப்பு வாய்ந்த ஒன்றாக ஸ்மார்ட்போன் உள்ளதாக 57 சதவிகிதத்தினர் தெரிவித்தனர்.

மும்பை, டெல்லி, ஹைதராபாத், சண்டிகர் மற்றும் புனே ஆகிய நகரங்களில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், தங்கள் போனின் ஸ்கிரீன் உடைந்துவிடுமோ என்று 70 சதவிகிதத்தினர் அடிக்கடி பயப்படுவதாகக் கூறினர்.

அதேபோல தங்கள் போனை சரிசெய்ய அதிகம் செலவழிப்பதாக பெரும்பாலானோர் கூறியுள்ளனர். ரூ. 6,700 மதிப்புள்ள போனுக்கு 970 ரூபாயும், 6700 லிருந்து 11,750 ரூபாய் வரை உள்ள போனுக்கு 2,600 ரூபாயும், 11,750 ரூபாயில் இருந்து 30,000 வரை உள்ள போனுக்கு 4,600 ரூபாயும், 33 ஆயிரத்துக்கு அதிகமான விலை கொண்ட போனுக்கு 4,350 ரூபாயும் செலவிடுவதாகக் கூறியுள்ளனர்.

அதேபோல 50 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் ஸ்கிரீன் உடைந்ததன் காரணமாகவே தங்கள் போனை மாற்றுவதாகக் கூறியுள்ளனர். செகண்ட் ஹாண்ட் போன் வாங்கும்போது ஸ்கிரீனில் பாதிப்பு இருந்தால் 40 சதவிகிதம் விலை குறைவாகவே விற்க வேண்டிய நிலை இருப்பதாகக் கூறுகின்றனர். ஸ்கிரீனில் சின்னதாக ஒரு ஸ்க்ராட்ச் இருந்தால்கூட 25-லிருந்து 30 சதவிகிதம் வரை கட்டணத்தைக் குறைக்கவேண்டிய நிலை இருப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon