மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 27 ஜன 2020

'265 தொகுதிகள் இலக்கு' - பாஜக-வின் உ.பி பிளான்!

'265 தொகுதிகள் இலக்கு' - பாஜக-வின் உ.பி பிளான்!

உத்தரப்பிரதேசம் மாநிலம் அலகாபாத்தில், பாஜக-வின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம் 2016 ஜுன் 12, 13 தேதிகளில் நடைபெற்றது. கட்சியின் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர். கூட்டத்தின் நிறைவு நாளான நேற்று மோடி உரையாற்றினார். மோடி தன் உரையின்போது, “தேசத்தை நாம் வலிமை பெறச் செய்யவேண்டும். மக்கள் வெறும் கோஷங்களால் மகிழ்ச்சி அடைவதில்லை. அவர்கள், தேசம் பலம் பெறுகிறதா என்று பார்க்கிறார்கள். நம்மைப் பொருத்தவரை அதிகாரம் என்பது பொறுப்புக்கானதுதானே தவிர, மகிழ்ச்சிக்கானது அல்ல. நம்மின் ஒவ்வொரு துளியையும் இந்தக் கடமையை நிறைவேற்றுவதற்காக ஒப்புவிக்க வேண்டும். மாவீரர் சிவாஜிக்கு அதிகாரம் என்பது கொண்டாட்டமாக அல்ல, முழுவதும் கடமை என்று எடுத்துக்கொண்டார். அவரிடம் இருந்துதான் நான் அந்த முன்னுதாரணத்தைப் பெற்றேன். நான் என்னுடைய ஒவ்வொரு துளியையும், ஒவ்வொரு கணத்தையும் தேசத்தின் வளர்ச்சிக்காகக் கொடுக்க சங்கல்பம் ஏற்றுள்ளேன். நாம் நம் அதிகாரத்தைக் குறைவாகவும், ஆனால், மக்களுக்கு வளர்ச்சியையும் பலன்களையும் அதிகமாகவும் காட்டவேண்டும்" என்றார்.

பாஜக-வினர் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய ஏழு விஷயங்களை மோடி பட்டியலிட்டார். சேவை, இணக்கம், தாங்கிக் கொள்ளுதல், ஒருங்கிணைப்பு, கட்டுறுதி, உணர்வுப்பூர்வமான அணுகுமுறை, உரையாடல். இவற்றை பட்டியலிட்டு, ‘இந்த ஏழும் உங்களின் கொள்கையிலும், அன்றாடப் பழக்க வழக்கத்திலும் எதிரொலிக்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டார். இந்த பேச்சின்போது மோடி மிகவும் உணர்ச்சிவயப்பட்டவராக இருந்தார். 2014 தேர்தலுக்கு முன்னர் அவருடைய பேச்சில் இருந்த விஷயங்களின் சாயல் அலகாபாத் பேச்சிலும் இருந்தது. ஆட்சி அதன் மையப்பகுதிக்கு வந்திருக்கும் சூழ்நிலையில், மிகப்பெரிய கோஷங்களுடன் எடுத்துவைத்த திட்டங்கள் குறித்து அவர் கவலை கொண்டிருப்பதாகத் தெரிகிறது. வளர்ச்சிக்காக பல முயற்சிகளை செய்திருக்கும்போதும் அதன் பலன்களாக மக்கள் எதையும் அனுபவிக்கிறார்களா என்ற கேள்வி எழுந்திருப்பதை சேவைக்கும், நடைமுறைக்குமான மிகப்பெரிய இடைவெளியாக மோடி உணர்ந்திருக்கிறார். பத்திரிகையாளர்களிடம் பேசும்போதுகூட ‘இந்தக் காலகட்டம் பாஜக-வுக்கு மிகவும் முக்கியமானது. தேசத்தின் பல இடங்களில் கட்சி வலுவிழந்திருந்த இடங்களில், இப்போது பலம் பெற்று வருகிறோம்’ என்று குறிப்பிட்டார். மேலும், பஞ்சாயத்து தேர்தலோ, நாடாளுமன்றத் தேர்தலோ எதுவாயினும் பாஜக-வுக்கு அதன் வாக்கு மற்றும் சித்தாந்தப் பரவலுக்கு முக்கியமானது என்று தீர்மானம் போடப்பட்டிருக்கிறது. மாநிலங்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 74 இடங்களுடன் முன்னிலை பெற்றிருப்பதால், மோடி உற்சாகம் அடைந்துள்ளார். அதேநேரம், மதவாத போக்கினாலும், அடிப்படை வாதத்தினாலும்தான் பாஜக வெற்றி பெற்று வருகிறது என்று ஊடகங்களும், சர்வதேச ஏடுகளும்கூட எழுதி வருகின்றன. இதனால், வளர்ச்சி என்ற கோஷம் என்ன ஆனது? அதை ஏன் மக்களிடம் கொண்டு சேர்க்கமுடியவில்லை? என்று மோடி மறைமுகமாக தன் கட்சியினரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதனால்தான் உத்தரப்பிரதேசத்தில்

நாங்கள் மதப்பிரச்னைகளைக் குறித்து பேசப்போவதில்லை என்று வெளிப்படையாகவே பாஜக அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் தற்போது பாஜக-வுக்கு 50 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். 2017 தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்ற இலக்குடன் செயல்படுகிறது. மொத்தம் 403 எம்எல்ஏ-க்கள் உள்ள உ.பி. சட்டசபையில், '265 தொகுதிகள் இலக்கு' நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அலகாபாத் நகர் முழுக்க வைக்கப்பட்டுள்ள போஸ்டர்கள், விளம்பரப் பலகைகள் அதை காட்டுகின்றன.

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon