மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 27 ஜன 2020

சீன ராணுவம் ஊடுருவலா? வழக்கமான நடைமுறையா?

சீன ராணுவம் ஊடுருவலா? வழக்கமான நடைமுறையா?

ஜுன் 9ம் தேதி அன்று 250 சீன ராணுவப் படைவீரர்கள் அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைக்குள் ஊடுருவி, பின்னர் வெளியேறியதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்தச் செயலை, அணு எரிபொருள் வழங்கும் நாடுகளின் குழுமத்தில் இந்தியா இணைய இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், இந்தியாவை அச்சுறுத்தும் வகையிலும் சீனா நடத்தியுள்ளதாக பல செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இது தவறான புரிதல் என்றும், சீன ராணுவத்தின் வருகை இயல்பான ஒன்றுதான் என்றும் ராணுவ விஷயம் அறிந்தவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

சீனா ஊடுருவியதாக சொல்லப்படும் யாங்க்ட்சே பகுதி 14,000 அடி உயரத்தில் இருக்கும் பகுதியாகும். அப்பகுதியை கடந்து மேலே ஏறிவர 4 மணி நேரம் ஆகும். மலைப்பகுதியில் இந்திய ராணுவத்தின் 'இரண்டு கம்பெனிகள்' தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கும். இதனால், சீன ராணுவம் எல்லை தாண்டினால் உடனடியாக தெரிந்துவிடும். சீன ராணுவ எல்லைக்கு அருகே முன்னேறும்போது, இந்திய ராணுவமும் முன்னேறிச் சென்று கிட்டத்தட்ட இரு ராணுவமும் முகத்துக்கு நேராக சந்தித்துக் கொள்வார்கள். வருடத்துக்கு இரண்டு முறை இந்த கண்காணிப்பு இயல்பாக நடக்கும். சீன ராணுவத்தினர் 4 மணிநேரம் மலையேறி வருவதால், அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் தங்கியிருந்து பின்னர் கீழிறங்கி செல்வார்கள். இது வழக்கமான ஒன்றுதான் என்று ராணுவ நடைமுறையை அறிந்தவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

சீனாவின் எல்லா முயற்சிகளையும் சந்தேகிக்கத் தேவையில்லை என்றும், அதேநேரம் இந்த செயல் வழக்கமான ஒன்றுதான் என்பதற்காக இனி வரும் காலங்களில் அடிக்கடி இதை அனுமதிக்கக்கூடாது என்றும் ராஜ்ஜிய வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

அருணாச்சலப் பிரதேசத்தைப் பொருத்தவரை இந்திய - சீனா எல்லைப் பிரச்னை மிக நீண்ட காலமாக இருந்துவருகிறது. சரியான எல்லை வரையறைக்கு உட்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் அமையாதிருப்பதே இதற்கு காரணம். சமீபத்தில் சீனா சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் பாரிக்கர், எல்லை வரையறை குறித்து விளக்க நினைத்தார். ஆனால், சீன தரப்பில் இதற்கு முறையான பதில் இல்லை. இதுதான் எல்லை என்று வரையறுத்துவிட்டால், எதிர்காலத்தில் தன் 'திட்டங்களுக்கு'ச் சிக்கல்கள் வரும் என சீனா நினைக்கிறது.

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon