மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 27 ஜன 2020

சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100

சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100

சமையலில் தக்காளிக்கு எப்போதும் தனி முக்கியத்துவம் உண்டு. தக்காளி இல்லாமல் சமைத்தால் பெரும்பாலான உணவுப்பொருட்களின் சாராம்சம் குறைந்தது போன்ற உணர்வு தோன்றுவதை தவிர்க்க இயலாது. சாம்பாரில் தொடங்கி சட்னி வரைக்கும் எங்கும் எப்போதும் தக்காளி ராஜ்ஜியம்தான்.

தற்போது, தமிழகத்தில் அதிகபட்சமாக தலைநகர் சென்னையில், ரூபாய் 100 வரை தக்காளி விற்கப்படுகிறது. இதர மாவட்டங்களில் அதிகபட்சமாக ரூபாய் 75 வரைக்கும் விற்கப்படுகிறது. தக்காளியின் அதீத விலை உயர்வு பொதுமக்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னையைப் பொருத்தவரை, அதன் காய்கறி தேவையை தமிழகத்தில் உள்ள இதர மாவட்டங்கள் மட்டுமே பூர்த்தி செய்வதில்லை. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த கோடையில் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் வெப்ப தாக்கத்தின் காரணமாக கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் அந்த மாநிலங்களில் காய்கறிகளின் உற்பத்தி வெகுவாக குறைந்தது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் வெப்பத்தால் விளைச்சல் குறைந்துள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது, சென்னை கோயம்பேடு சந்தைக்குத் தக்காளியின் வரத்து குறைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை ரூ.25 ஆக இருந்த தக்காளியின் விலை படிப்படியாக உயர ஆரம்பித்தது. தற்போது ரூபாய் 100 வரைக்கும் விற்கப்படுகிறது.

வெளிமாநிலங்களில் 30 சதவிகிதம், தமிழகத்தில் 20 சதவிகிதம் வரை மொத்தம் 50 சதவிகிதம் விளைச்சல் குறைந்ததால் தக்காளிக்கு பற்றாக்குறை ஏற்பட்டு சென்னையில் விலை உச்சத்தை தொட்டிருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த விலை, அடுத்த சில தினங்களுக்கு குறைய வாய்ப்பில்லை என்பதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மத்தியில் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன. தக்காளியின் இந்த திடீர் விலை உயர்வுக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்று கோயம்பேடு காய்கறி வியாபாரியிடம் கேட்டபோது, “பொதுவாக தக்காளியைத் தவிர்த்து பெரும்பாலான காய்கறிகள் திடீரென விலை உயர்வு காணும் வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால், சில வகை காய்கறிகளை அடுத்த சில தினங்களுக்கு வைத்தும் விற்பனை செய்யும் அளவுக்கு ‘ஸ்டாக்’ வைத்திருப்பார்கள். அதனால் விலை திடீரென உச்சத்தை தொடும் வாய்ப்புகள் மற்ற காய்கறிகளுக்குக் குறைவு. படிப்படியாகவே உயரும்.

ஆனால், தக்காளியைப் பொருத்தவரை அடுத்த குறிப்பிட்ட சில தினங்கள் வரை மட்டுமே வைத்து விற்க முடியும் என்பதால் தேவைக்கேற்பவே அதை வியாபாரிகள் கொள்முதல் செய்வார்கள். அதனால் உற்பத்தி குறைந்தால் ஒரேடியாக விலை உயர்வதும், உற்பத்தி அதிகரித்தால் திடீர் விலை குறைவும் ஏற்படுகிறது” என்றார்.

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon