மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 29 ஜன 2020

குருதி கொடை: ஒரே நேரத்தில் பலரின் உயிரைக் காப்பாற்றலாம்

குருதி கொடை: ஒரே நேரத்தில் பலரின் உயிரைக் காப்பாற்றலாம்

இன்று சர்வதேச ரத்த தானம் வழங்குவோர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. எந்தச் செலவும் செய்யாமல், அதிக சிரமங்களை ஏற்றுக் கொள்ளாமல் ஒரே நேரத்தில் பலரின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்றால் அது ரத்த தானத்தால் மட்டுமே முடியும்.

ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் ரத்தம் உள்ளது. ரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. ரத்தம் வரை கொடுக்கலாம். ரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். உடலில் உள்ள ஒவ்வொரு ரத்த அணுவும் மூன்று மாத காலத்தில் தானாகவே அழிந்து, மீண்டும் உற்பத்தியாகிறது. ரத்த அணு உற்பத்தி என்பது உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி. எனவே ரத்த தானம் செய்வதால் உடலுக்கு பாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை.

அறுவைச் சிகிச்சையின்போதும், விபத்தின்போதும் அல்லது ஏதாவது ஒரு வழியில் ஒருவருக்கு ஏற்படும் ரத்த இழப்பை ஈடு செய்து அவருடைய உயிரைக் காக்கும்பொருட்டும் ரத்த தானம் தேவைப்படுகிறது. சிலர் தன்னார்வத்துடன் ரத்த தானம் செய்ய முன்வருகின்றனர். சிலர் சமூக சேவை அமைப்புகளின் வழிகாட்டுதலின் பேரில் ரத்த தானம் செய்து வருகின்றனர்.

ஒவ்வோர் ஆண்டும் நமது தேசத்தின் மொத்த தேவை சுமார் 4 கோடி யூனிட் ரத்தம் ஆகும் (1 யூனிட் ரத்தத்தின் அளவு 350 மில்லி லிட்டர் ஆகும்). ஆனால், கிடைக்கப்படுவதோ வெறும் 40 லட்சம் யூனிட்கள் மட்டுமே. ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கும் யாரோ ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு நாளும் 38,000-க்கும் மேல் ரத்த கொடையாளிகள் தேவை. பெரும்பாலும் தேவைப்படும் ரத்த பிரிவு ‘ஓ’ ஆகும்.

18 வயதிலிருந்து 65 வயது வரை உள்ளவர்கள் ரத்த தானம் கொடுக்கலாம். ரத்த தானம் கொடுப்பவர்களின் உடல் எடை 45 கிலோவுக்கு அதிகமாக இருக்க வேண்டும். ஹீமோகுளோவின் அளவு, 12.5 என்ற அளவுக்கும் அதிகமாக இருக்க வேண்டும் என்பதே யாரெல்லாம் ரத்த தானம் செய்யலாம் என்பதற்கான முக்கிய விதி.

ஆனால், யாரெல்லாம் ரத்த தானம் செய்யக்கூடாது என்பதன் பட்டியல் பெரியது. புற்றுநோய் இருப்பவர்கள், வலிப்பு சிக்கல் இருப்பவர்கள், தைராய்டு பிரச்னை இருப்பவர்கள், காயம் ஏற்பட்டால் ரத்தம் உறையாத பிரச்னை இருப்பவர்கள், காச நோய், எச்ஐவி, பால்வினை நோய்கள், மஞ்சள் காமாலை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றால் பாதிக்கப்பட்டவர்கள், குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் ஆகியோர் ரத்த தானம் கொடுக்க முடியாது. மேலும் நீரிழிவுக்காக இன்சுலின் ஊசி போடுபவர்களும் ரத்த தானம் செய்யக்கூடாது. ரத்த தானம் கொடுக்கப்பவர்களின் ரத்த அழுத்தம் வழக்கமான அளவைக்காட்டிலும், அதிகமாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ இருந்தாலும் ரத்த தானம் பெறப்படுவதில்லை.

அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகளில் ரத்த தானத்துக்கு தனிப்பிரிவுகள் இயங்கி வருகின்றன. அங்குள்ள ஆலோசகர் அவர் மேற்கண்ட அனைத்து விவரங்களுடன் இன்னும் சில விவரங்களைக் கேட்டு தெரிந்து கொண்டபிறகுதான் நாம் ரத்த தானம் அளிப்பதற்கான பரிந்துரையைச் செய்வார்.

“தனது பிறந்தநாளில் ரத்த தானம் செய்வர்கள், தனக்கு பிடித்த அரசியல் தலைவர்கள், நடிகர்கள் ஆகியோரின் பிறந்த நாட்களில் ரத்த தானம் செய்பவர்களும் இருக்கிறார்கள். இப்படி ஒரே நேரத்தில் எத்தனை பேர் ரத்த தானம் செய்தாலும் அவற்றை பாதுகாப்பதற்கான வசதிகள் மாவட்ட மருத்துவமனைகளில் உள்ளன. தானம் செய்யப்பட்ட ரத்தத்தை அதே குரூப் உள்ளவருக்கு உடனே செலுத்துவதில்லை. தானம் கொடுப்பவர், பெறுவர் இரண்டு பேரின் ரத்தமும் ஒன்று சேர்கிறதா என்பதை ‘கிராஸ் மேட்சிங்’ என்ற சோதனை மூலம் உறுதி செய்த பின்னரே ரத்தம் செலுத்தப்படும். இந்த மேட்சிங் சோதனையைச் செய்வதற்கு அடிப்படையாக இருப்பது கரோல் லான்ட்ஸ்டெய்னர் என்பவர் கண்டறிந்த ஏ, பி, ஓ என்ற குரூப்பிங் முறைதான். அந்த கண்டுபிடிப்புக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. அவரது பிறந்தநாளில்தான் ரத்த தானம் வழங்குவோருக்கான சிறப்பு தினம் கொண்டாடப்படுகிறது” என்கிறார் சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனையின் ரத்த வங்கி அலுவலராக பணிபுரியும் மருத்துவர் பெ. தமிழ்மணி.

தற்போதைய பல்வேறு ஆய்வுகளின் தொடர்ச்சியாக ரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்றும் ஹீமோகுளோவின் அளவினை கட்டுப்படுத்தவும் ரத்த அழுத்தம் சமச்சீராக பராமரிக்கவும் ரத்த தானம் பயன்படுகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் ரத்தப் பிரிவு, ரத்தத்தில் மஞ்சள் காமாலை, மலேரியா, பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் கிருமிகள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு ரத்த தானம் அளிப்பவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது என்பது கூடுதல் தகவல்.

செவ்வாய், 14 ஜுன் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon